
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது முன்னெடுக்கத் திட்டமிட்டிருந்த கூட்டுத் தாக்குதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
ஈரானின் எண்ணெய் வளங்கள் மற்றும் முக்கிய இராணுவத் தளங்கள் மீது வார இறுதியில் கடுமையான தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்ததாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்தன. இதனால் மத்திய கிழக்கில் பதற்றம் மேலும் தீவிரமடையும் என்ற அச்சம் நிலவியது.
இந்நிலையில், தாக்குதல் நடவடிக்கையை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், “ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்க இராணுவம் முழுமையாக தயாராக உள்ளது. தேவையான சூழ்நிலை ஏற்பட்டால் உலகம் இதற்கு முன் காணாத அளவிலான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். எனினும், மத்திய கிழக்கு நாடுகளின் வேண்டுகோளையும், பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பளிக்கும் நோக்கையும் கருத்தில் கொண்டு தாக்குதலை தற்காலிகமாக நிறுத்தியுள்ளோம். விரைவில் அமைதி ஒப்பந்தம் எட்டப்படும் என நம்புகிறோம். இந்த முடிவுக்கு இஸ்ரேலும் இணக்கம் தெரிவித்துள்ளது” என்று கூறியுள்ளார்.
இதற்கிடையில், அமெரிக்க தாக்குதல் திட்டத்தை நிறுத்துமாறு சவுதி அரேபியாவின் இளவரசர் முகம்மது பின் சல்மான், டிரம்பை தொலைபேசியில் தொடர்புகொண்டு வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த சில வாரங்களாக பதற்றம் நீடித்து வந்த நிலையில், ஜூலை 24ஆம் திகதிக்குப் பிறகு இரு தரப்பும் நேரடி தாக்குதல்களில் ஈடுபடவில்லை என கூறப்பட்டது. எனினும், அண்மைய நாட்களில் மீண்டும் மோதல்கள் தீவிரமடைந்துள்ளன.
சில நாட்களுக்கு முன்பு ஜோர்டானில் உள்ள அமெரிக்க இராணுவத் தளத்தை ஈரான் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாகவும், அந்தத் தாக்குதலை அமெரிக்க வான் பாதுகாப்பு அமைப்புகள் முறியடித்ததாகவும் அமெரிக்க இராணுவம் தெரிவித்தது. இதையடுத்து அமெரிக்கா தனது கூட்டணி நாடுகளின் ஆதரவுடன் பதிலடி நடவடிக்கைகளுக்குத் தயாரான நிலையில், தற்போது தாக்குதல் திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார்.







