ஈஸ்டர் குண்டு தாக்குதல். முன்னாள் பொலிஸ் மா அதிபர் ,முன்னாள் பாதுகாப்புச்செயலாளர் இருவருக்கும் மரணதண்டனை வழங்கிய கொழும்பு மேல் நீதிமன்றம்

இலங்கையை உலுக்கிய உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் வழங்கப்பட்ட முதலாவது தண்டனைக்கான நீதிமன்றத் தீர்ப்பு இன்று வெளியாகியிருக்கின்றது.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் போதுமான உளவுத் தகவல்கள் கிடைத்தும் அதனை தடுக்கத் தவறியமைக்காக முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவுக்கு, முன்னாள் பாதுகாப்புச்செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவிற்கும் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(31.07.2026) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இலங்கையில் நடத்தப்பட்ட மிக மிலேச்சத்தனமாக கொடூர தாக்குதல் தான் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்.

அரசியல் மாற்றத்திற்கான தாக்குதல்
ஆரம்பத்தில், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினரால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் நாளடைவில் இது இலங்கையின் ஒரு சாராரின் அரசியல் தேவைக்காக நடத்தப்பட்ட தாக்குதல் என்ற வாதம் வலுப்பெற்றது.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் இடம்பெற்றதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் ஆட்சியமைத்தது. அந்த ஆட்சி இடைநடுவே கவிழ்ந்து போக அடுத்ததாக ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.

இப்படி வந்த அரசாங்கங்களிடத்தில் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான உண்மையான சூத்திரதாரி யார் என்பதை கண்டுபிடித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுத் தர மக்கள் கோரிக்கை விடுத்திருந்த போதிலும், அந்த ஆட்சிகளின் போது இது தொடர்பான விசாரணைகள் மந்த கதியிலேயே இடம்பெற்றன.

எனினும், 2024ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அநுர அரசாங்கத்திடமும் இதே கோரிக்கையை மக்கள் முன்வைத்ததோடு, அநுர தரப்பும் இது தொடர்பில் மிகத் தீவிரமான வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கியிருந்தது.

இதன் அடிப்படையில், ஆட்சிக்கு வந்தபின்னர் பல்வேறு அழுத்தங்கள் மற்றும் சவால்கள் இருந்தபோதிலும், உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை அநுர அரசாங்கம் தீவிரமாக முன்னெடுத்தமை சுட்டிக்காட்டப்பட வேண்டியது.

இதன் தொடர்ச்சியாக, முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் மிக முக்கியத் தலைகளின் பெயர்கள் வெளிவந்தன.

அம்பலத்தப்படுத்தப்பட்ட சூத்திரதாரிகள்

இதன்படி, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையதாக முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான், அரச புலனாய்வு சேவைகளின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்டோர் தொடர்பில் விசாரணைகளை தீவிரப்படுத்தியிருக்கின்றது அரசாங்கம்.

இதில், சுரேஷ் சலே பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ஏலவே கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பலனாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, ராஜபக்ச விசுவாசிகளான தென்னிலங்கையின் காலாவதியான பல அரசியல்வாதிகள் ஒன்றிணைந்து சுரேஷ் சலேவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தும் போராடியும் ஓய்ந்து போயினர். கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான பயணத் தடையின் பின்னரே இந்த எதிர்ப்புக்கள் கிளம்பியிருந்தன.

எனினும், விசாரணைகளில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்று அநுர அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்ததுடன், தொடர் விசாரணைகளும் நடைபெற்று வருகின்றன.

இப்படியான நிலையில் தான், உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலை தடுக்கத் தவறியதாகத் தெரிவித்து முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர கடந்த 2019ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு கடந்த 7 வருடங்களின் பின்னர் இன்று அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

எனவே, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் ஊடாக அடுத்து கைது செய்யப்படப் போகின்ற, தண்டனை விதிக்கப்படப்போகின்ற முக்கிய புள்ளிகள் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதேசமயம், அண்மையில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் மரணத்தின் பின்னர் ஒரு சில தகவல்கள் வெளியாகியிருந்தன.

குறிப்பாக, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் இடம்பெற்றதன் பின்னர் ஒவ்வொரு திங்கட்கிழமையும் பொதுப் பாதுகாப்பு அமைச்சின் கட்டிடத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றுள்ளது.

அந்தக்கூட்டத்தில், சுரேஷ் சலே, முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர, முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன உள்ளிட்டோர் கலந்து கொண்டு உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய சாட்சியங்களை மறைப்பது தொடர்பில் திட்டம் தீட்டப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

ஆசாத் மௌலானா வெளியிட்ட தகவல்
இந்தக் கூட்டத்தில் இருந்த அனைவரும் ராஜபக்சர்களின் தீவிர விசுவாசிகள் என்பதோடு, சுரேஷ் சலே, கோட்டாபய ராஜபக்ச நினைப்பதை மாத்திரம் செய்யக்கூடிய ஒருவராக இருந்தார் எனவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும், சுரேஷ் சலே மற்றும் கோட்டாபய ராஜபக்சவுக்கு இடையிலான நெருக்கம் குறித்த பல்வேறு தகவல்களை வெளியிட்டிருந்தார். கோட்டாபய ராஜபக்ச ஒரு கட்டளையிட்டால் அதற்கு மறுப்பேச்சின்றி சுரேஷ் சலே அந்தக் கட்டளையை செய்து முடிப்பார் என சரத் பொன்சேகா குறிப்பிட்டிருந்தார்.

Share this article