
யதீந்திரா
அண்மையில் இந்தியாவில் இடம்பெற்ற கரப்பான் பூச்சி இளைஞர்களின் நடவடிக்கைகள் உலகின் கவனத்தைப் பெற்றிருந்தது. அவர்களின் நடவடிக்கையால் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி, ஒரு படி கீழே இறங்கிவந்தது. கடந்த பன்னிரெண்டு வருடங்களில் பாரதிய ஜனதா கட்சி இப்படி இறங்கி வந்தது இதுதான் முதல் தடவை. பங்களாதேஸின் பலம்பொருந்திய ஷேக்ஹசினாவின் ஆட்சியை கவிழ்த்தமை, நேபாளத்தில் ஆட்சியை கைப்பற்றியமை, இலங்கையின் ஆட்சி மாற்றம் – இவையெல்லாம் இசட் தலைமுறையினரின் அரசியல் பிரவேசம் தொடர்பில் சிலாகித்துக் கூறப்படும் விடயங்கள்.
இப்படியான மக்கள் கிளர்ச்சி ஒன்று இந்தியாவிலும் சாத்தியமாகுமா என்னும் கேள்விகளை, சில சர்வதேச ஊடகங்கள் முன்வைத்திருந்தன. இதனை இந்தியாவின் இசட் கிளர்சி என்றே சர்வதேச ஊடங்கள் வர்ணித்தன. இத்துத்வாவின் வீழ்சியை காண ஆசைப்படும் பலரிடம் இப்படியான தாகம் தெரிந்தது. அதுவே சர்தேச ஊடகங்களில் பிரதிபலித்தது. ஆனால் இந்தியா, இலங்கையோ, நேபாளோ அல்ல – அது இந்தியா. நூற்றி ஜம்பது கோடி மக்களைக் கொண்ட நாடு. ஒரு மானிலம் இன்னொரு மானிலத்திற்காக குரல் கொடுக்காத அரசியல் சூழல். அப்படியான தேசத்தில் மாணவர் கிளர்ச்சிகள் மூலம் ஆட்சியை கவிழ்க்க முடியுமா? இ;ப்படியான யதார்த்தம் இருந்த போதிலும் கூட, மோடி அரசாங்கம் சற்று கீழிறங்கி, மாணவர்களை கையாள முற்பட்டது. மாணவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு, அவர்களுக்கு ஆதரவான அலையை கீழிறக்கியது. இந்தியாவிற்கு எதிரான சக்திகள் இதனை பயன்படுத்திவிடக் கூடாது என்பதிலேயே இந்திய அரசு கவனம் செலுத்தியது.
இலங்கையிலும், கோட்டபாய ராஜபக்சவின் பலமான ஆட்சியை மக்கள் கிளர்ச்சியே வீழ்த்தியது. எந்த சிங்கள மக்கள் – முக்கியமாக சி;ங்களத் தேசிய மனோநிலை கொண்டிருந்த, புலிகளின் தோல்வியை கொண்டாடிய, மத்தியதரவர்க்கமே இறுதியில், ராஜபக்சேக்களின் குடும்ப அதிகாரத்தையும் சரித்தது. ஆனால் இவ்வாறான கிளர்சிகள் அரிதாகவே நிகழும். இவற்றை சாத்தியப்படுத்துவதில் பல்வேறு காரணிகள் செல்வாக்குச் செலுத்துகின்றன. அத்துடன், இவ்வாறாhன கிளர்ச்சிகளுக்கு பின்னால் வெளித்தரப்புக்களின் தலையீடுகள் இருக்கின்றன. அவை தொடர்பில் நம்மால் துல்லியமாக விவாதிக்க முடியாவிட்டாலும் கூட, அவற்றுக்கான வாய்ப்பு அதிகம்.
இலங்கையின் கிளர்ச்சிக்கு பின்னால் அமெரிக்க உளவுத் துறை இருந்ததாகவே – கோட்டபாய நம்பியதாக, சில சிங்கள ஆய்வாளர்கள் எழுதியிருக்கின்றனர். அமெரிக்காவிற்கு அப்படி என்ன ஆர்வம் இருந்தது – அது உண்மைதானா என்னும் கேள்விகளுக்கு பதில் இல்லை ஆனால் ஒரு கிளர்ச்சிக்கான சூழல், உள்நாட்டில்தான் கருவுறும், அந்தக் கருவை பேணிப் பாதுகாத்து, அதற்கு வடிவம் கொடுப்பதற்கு ஆதரவுகள் தேவை என்பது மறுக்க முடியாத உண்மைதான். ஏனெனில் இதற்கு உலகில் பல உதாரணங்கள் உண்டு.
இந்தப் பின்புலத்தில் நோக்கினால், அறகலய என்னும் பெயரில் ஒரு மக்கள் திரட்சி திடிரென்று வந்துவிடவில்லை. சிலரால் ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் படிப்படியாகப் படர்ந்து – இறுதியில் ஒரு பெரும் திரட்சியாக வடிவம் பெற்றது. இது ஏனைய தெற்காசிய நாடுகளின் கிளர்சிக்கு உந்துசக்தியாகவும் மாறியது. ஆட்சி மாற்றங்களை ஏற்படுத்தும் ஒரு வழிமுறை, வெளித் தரப்புக்களின் ஒரு உக்தியாக இருந்து கொண்டுதான் இருக்கின்றது. ஒரு ஆட்சியாளரை கையாள முடியாமல் போகும் போது, அடுத்தது என்ன? ஆட்சி மாற்றம்தான் என்னும் நிலைமை இப்போதும் ஒரு புவிசார் அரசியல் உக்தியாகவே இருக்கின்றது.
இந்த இடத்தில் நான் விவாதிக்க முற்படும் விடயம் வேறு. அறகலய கிளர்ச்சி இடம்பெற்ற போது, தமிழர் பக்கத்தில் அது பெரியளவில் அரசியல் அதிர்வுகளை ஏற்படுத்தவில்லை. குறிப்பாக தமிழ் இளையோர்கள் மத்தியில் எவ்வித அரசியல் அதிர்வுகளையும் ஏற்படுத்தவில்லை. அது தென்னிலங்கையின் விடயம் என்றவாறான புரிதலே மேலோங்கியிருந்தது. கொழும்பிலுள்ள சிலர் அதில் பங்குகொண்டாலும் கூட, அவர்களின் ஈடுபாடு வடக்கு கிழக்கில் அரசியல் அதிர்வுகளை ஏற்படுத்தவில்லை.
யுத்தம் முடிவுற்று பதினேழு ஆண்டுகளாகிவிட்டது. இப்போதும் வடக்கு கிழக்கின் தமிழர் அரசியலில் இளையோரின் ஈடுபாடு என்பது குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய நிலையில் இல்லை. ஆகக் குறைந்தது அரசியல் தொடர்பில் ஆர்வமுள்ள இளைஞர்களை காண்பதே அரிதானது. தேர்தல் காலத்தில் மழைக் காலத்து புற்றீசல்கள் போன்று முகம் காட்டுபவர்கள், தேர்தலின் பின்னர் காணாமல் போய்விடுகின்றனர். தேர்தல் காலத்தில் இளைஞர்களின் பெறுமதி என்பது, கட்சிகளின் வேட்பாளர்களுக்கு சுவரொட்டி ஒட்டுவது, கட்சிகளின் கூட்டத்திற்கு ஆட்கள் சேர்ப்பது என்பதாகவே சுருங்கியிருக்கின்றது. பெடியளுக்கு “தண்ணி” வாங்கிக் கொடுத்தால், அவங்கள் இழுபடுவாங்கள் என்னும் அடிப்படையில்தான், தமிழ் இளைஞர்களை கட்சிகள் புரிந்து வைத்திருக்கின்றன. தேர்தல் காலத்தில் ஒரு குறிப்பிட்ட இளைஞர்கள் கூட்டம் அப்படித்தான் இருக்கின்றது.
அண்மையில் யாழ்ப்பாணத்தில் ஒரு பாடசாலை வாயிலில் நின்று, சுமந்திரனை பிரதம விருந்தினராக அழைக்க வேண்டாம் என்று, இளைஞர்கள் சிலர் சத்தமிட்டுக் கொண்டிருந்தனர். அரசியலை சில தனிநபர்கள் மீதான காழ்புணர்வாகவும் எதிர்ப்பாகவும் பார்க்கும் போக்குத்தான் பின்-யுத்த தமிழ்த் தேசியமாக கற்பிக்கப்படுகின்றது. அப்படிப் புரிந்து கொள்ளுமாறுதான், தமிழ் அரசியல்வாதிகளின் போதனைகளும் இருக்கின்றது.
ஆனால் இந்த அரசியல் இளையோருக்கு தேவையில்லாத அரசியல். இளையோர்கள், அரசியலை புதிதாக அணுக வேண்டியவர்கள். புதிய கோணத்தில் சிந்திக்க வேண்டியவர்கள். முன்னோர்களின் காழ்ப்புணர்வை, வெறுப்பு வாதங்களை சுமக்க வேண்டிய எந்த அவசியமும் இளையோருக்கு இல்லை. செல்வநாயகம் சொன்னார், பிரபாகரன் கூறினார் – இவைகள் எல்லாம் இளையோருக்கும் தேவையில்லை. அன்று கூறப்பட்டவற்றில் எது இன்றைக்குத் தேவையானதோ, அவற்றை எடுத்துக் கொள்வதில் தவறி;ல்லை – ஒரு வேளை ஒன்றுமே தேவையில்லை என்றால் புதிதாக ஒன்றைச் சிந்திக்க வேண்டியதே, ஜென்சிகளுக்கான அரசியல். முன்னைய வரலாறு கற்றலுக்கான ஒன்று மட்டும்தான்.
ஒவ்வொரு முள்ளிவாய்க்காலின் போதும் உணர்சி வசப்படுவதற்கும், தலையில் பட்டிகளை கட்டிக் கொண்டு மோட்டார் பவணியில் ஈடுபடுவதற்கும் அப்பால், தமிழ் ஜென்சிகளின் அரசியல் புரிதல் என்ன? – இப்படிக் கேள்வி எழுப்பினால் பதில் கவலைக்குரியதாகவே இருக்கும். உண்மையில் தமிழ் ஜென்சிகளை நாசப்படுத்தியதில், ஒரு சில தமிழ் புலம்பெயர் குழுக்களின் தலையீடுகளுக்கு முக்கிய பங்குண்டு. அரசியலை மலினமாக புரிந்து கொள்ளுவதற்கான செயற்பாடுகளையே, சில குழுக்கள் செய்து வருகின்றன. அரசியலை அதன் ஆழ அகலத்தில் புரிந்து கொள்ளும் அரசியல் கல்வியூட்டலுக்கான களம் வடக்கு கிழக்கில் எங்குமே இல்லை. கட்சிகளும் அதில் கவனம் செலுத்துவதில்லை – கட்சிகளுக்கு வெளியிலும் எவரும் அவ்வாறு சிந்திக்கவில்லை. இதன் விளைவு, அரசியல்ரீதியில் தமிழ் ஜென்சிகள் என்னும் வகைப்படுத்தலுக்கான சூழல் வடக்கு கிழக்கில் இல்லை.
பின்-யுத்த அரசியல் உரையாடல்கள் மிகவும் மேலோட்டமானவையாகயே இருக்கின்றது. இவற்றில் தொன்னூறுவிகிதமான அரசியல் உரையாடல்கள், யாழ் குடநாட்டுக் கதைகளாகவே சுருக்கியிருக்கின்றது. மாற்றுக் கருத்துள்ளவர்கள் அனைவரும் ஒரே மேடையில் அமர்ந்து விவாதிக்கும் அரசியல் அரங்குகளை காண முடியவில்லை. 2009இற்கு பின்னரான அரசியல் உரையாடல்கள் அடிப்படையில் அவ்வாறானதாகவே இருந்திருக்க வேண்டும். ஆனால் யுத்த காலத்தில் கடைப்பிடித்தது போன்ற சுயதணி;கை அரசியல்தான் இப்போதும் தொடர்கிறது.
தமிழ்த் தேசியக் கட்சிகளாக தங்களை அடையாளப்படுத்துவர்களுக்கு வரையறைகள் உண்டு. அவர்களிடம் இவற்றை எதிர்பார்க்க முடியாது என்பது உண்மைதான். அதனால்தான் நான் தொடர்ந்தும் வாதிட்டு வருகின்றேன், தற்போதுள்ள கட்சிகளுக்கு வெளியில் இந்த உரையாடல் இடம்பெற வேண்டு;ம். பாரம்பரிய கட்சிக் கதைகளை உடைத்தெறியும் புதிய தலைமுறையொன்று வெளியில் வர வேண்டும். அவை அனைத்தின் மீதும் கேள்விகளை முன்வைக்க வேண்டும். கட்சிகள் மீதும் கேள்விகளை தொடுக்க வேண்டும், கருத்துருவாக்கத்தின் மீதும் கேள்விகளை தொடுக்க வேண்டும்.
இன்றைய உலக அரசியல் வேகமாக மாறிவருகின்றது. இதுவரையில் உலகம் இயங்கியது போன்ற நிலையில் இப்போதில்லை. அமெரிக்காவின் தற்போதைய அணுகுமுறை உலக அரசியலில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கின்றது. கனடிய பிரதமரின் வார்த்தையில் கூறுவதானால், இது ஒரு முறிவு. ஏனெனில், யார் நண்பர், எதுவரை நண்பர் என்று தெரியாதவொரு உலக அரசியல் சூழலே காணப்படுகின்றது.
உலகை வழிநடத்தும் ஒரு தலைமை இப்போதில்லை என்னும் நிலைமை காணப்படுவதாகவே, நிபுணர்கள் விவாதித்துவருகின்றனர். மனித உரிமை சார்ந்து, ஜனநாயகம் சார்ந்து நீங்கள் முறையிட ஒரு உலகத் தலைமை இப்போதில்லை. இந்த நிலையில் வழமையான தமிழ் அரசியல் உரையாடல்கள் மிகவும் பலவீனமான நிலையை எட்டிவிட்டது. அடுத்த கட்டம் தொடர்பில் கற்பனை கூடச் செய்ய முடியாதவொரு அரசியல் சூழலே நமக்கு முன்னால் தெரிகின்றது. இவ்வாறானதொரு அரசியல் சூழலில் புதிய அரசியல் தலைமுறை ஒன்றிற்கான தேவை பெரிதாக இருக்கின்றது. அது அவசரமானதும் கூட. ஆனால் பூனைக்கு யார் மணி கட்டுவது என்பதுதான் பிரச்சினை. தெற்காசியாவின் இசட் தலைமுறையினரின் அலை, தமிழ்த் தேசிய ஜனநாயக அரசியலில் தாக்கங்களை ஏற்படுத்தும் அதியசம் நிகழாதா?






