
அன்பிற்கினிய தமிழ் மக்களே….!
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சி அதிகாரத்திற்கு வந்து செப்டம்பர் 21ஆம் திகதியுடன் இரண்டு வருடங்களைப் பூர்த்தி செய்கின்றது. இவர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வருவதற்கு முன்பாக சிங்கள தமிழ் மக்களுக்கு பல்வேறு உறுதிமொழிகளை வழங்கியிருந்தார்கள். ‘வளமான தேசம், அழகான வாழ்க்கை’ என்று அவர்களது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இந்த ஆசைவாசகம் பிரதான இடம் பிடித்திருந்தது. தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காக தாம் ஆட்சிக்கு வந்தால் நாங்கள் என்னவெல்லாம் செய்வோம் என்றும் பல விடயங்களைக் கூறியிருந்தார்கள். அதில்
முதலாவது:
நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவோம்:
ஆனால் இந்த அரசாங்கம் பங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதற்குப் பதிலாக, இதைவிட ஆபத்தான பயங்கரவாதத் தடைச்சட்டத்தைக் கொண்டுவர முயற்சிக்கிறது.
இரண்டாவது:
ஆட்சிக்கு வந்த ஒருவருடத்திற்குள் மாகாணசபைத் தேர்தல்களை நடாத்துவோம் என்று கூறினார்கள்.
ஆட்சி அதிகாரத்திற்கு வந்து இரண்டு வருடம் முடிந்துவிட்டது. தேவையற்ற காரணங்களைக் கூறி, மாகாணசபைத் தேர்தல்களைப் பின்போட்டு வருகிறார்களே அன்றி, இவர்களுக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்துவதில் அக்கறை இல்லை என்பதை பல்வேறு வழிகளில் நிரூபித்து வருகிறார்கள்.
மூன்றாவது
முப்படையினராலும் ஏனைய பிற வழகளிலும் சட்டவிரோதமாகப் பறிக்கப்பட்ட காணிகள் முழுமையாக மக்களிடமே ஒப்படைக்கப்படும் என்று கூறப்பட்டது.
இரண்டு வருடம் முடிந்தும் அதற்கான காத்திரமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. இன்று விடுவோம் நாளை விடுவோம் என்று கூறப்படுகிறதே தவிர, மிகப்பெமளவிலான காணிகள் படையினர் வசமே இருக்கின்றது.
நான்காவது
அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று கூறப்பட்டது.
அரசியல் கைதிகள் என்று யாரும் இல்லை என்று இப்பொழுது கூறப்படுகின்றது.
ஐந்தாவது
நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தீர்வு எட்டப்படும் என்று கூறப்பட்டது.
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியைப் பெற்றுக்கொள்ள தமிழ் மக்கள் ஒரு சர்வதேச பொறிமுறையை நாடி நின்றபோதிலும் இலங்கை அரசாங்கம் வெளிநாட்டுப் பொறிமுறையையோ உள்ளகப் பொறிமுறையையோ ஏற்படுத்தவில்லை.
அன்பிற்கினிய தமிழ் மக்களே!
அரசின் ஏமாற்றுத்தனங்களைக் கண்டித்து கடந்த செப்ரெம்பர் பன்னிரெண்டாம் திகதி ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஓர் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை நடாத்தியது. இதில் தமிழரசுக் கட்சியின் தலைவர், செயலாளர் உட்பட அக்கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
அதே தினத்தில் அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயல்களைக் கண்டித்து அனுராதபுரத்தில் பொதுஜன பெரமுன ஒரு கண்டனக் கூட்டத்தை நடாத்தியது.
அதே தினத்தில் அரசாங்கம் தனது இரண்டு வருட பூர்த்தியை முன்னிட்டு பொலனறுவையில் பிரமாண்டமான கூட்டத்தைக் கூட்டியது. இது தொடர்ந்தும் பல்வேறு இடங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இரண்டு வருட வெற்றிவிழாவைக் கொண்டாடும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தனது சாதனையாக இரண்டு விடயங்களைக் குறிப்பிட்டு வருகின்றது.
(1) போதை வஸதை ஒழிப்பதற்கான அரசின் நடவடிக்கைகள். இது தொடர்பாக நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக அரசு கூறுகின்றது. ஆனால் இன்றும்கூட பல்லாயிரம்கோடி பெறுமதியான போதை வஸ்துக்கள் நாட்டிற்குள் வந்துகொண்டிருப்பதாக அரச செய்திகள் கூறுகின்றன.
(2) ஊழல் இலஞ்சம் ஆகியவற்றை ஒழிப்பது தொடர்பாகவும் அரசாங்கம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டதாகக் கூறுகின்றது. முன்னாள் ஜனாதிபதிகள், அமைச்சர்கள், அதிகாரிகள் என பலபேர் கைது செய்யப்பட்டு சிலர் பிணையில் வர, சிலருக்கு தண்டனையும் கிடைத்துள்ளது. அரசாங்கம் குறிப்பிடும் மேற்படி இரண்டு விடயங்களிலும்கூட தொடர்ந்தும் நடவடிக்கைகள் எடுகக்ப்படுவதாகக் கூறப்படுகின்றதே தவிர, இவை முழுமையாக ஒழிக்கப்பட்டதாக இல்லை.
இவை தவிர, பொருளாதார வளர்ச்சி என்று குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவிற்கு புதிய வெளிநாட்டு முதலீடுகளோ, அல்லது வேலைவாய்ப்புகளோ உருவாக்கப்பட்டதாக இல்லை. மக்கள் இன்னமும் வேலைவாய்ப்பைத் தேடி உலகெங்கும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.
வடக்கு கிழக்கு பிரதேசங்கள் அபிவிருத்தி செய்யப்படுவதன் ஊடாக தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிடலாம் என்றும் அதிகாரங்கள் பகிரப்படத் தேவையில்லை என்ற எண்ணக்கருத்தும் ஜேவிபிக்கு இருக்கின்றது. கடந்த இரண்டு வருடத்தில் வடக்கு மாகாண அபிவிருத்தி என்ற பெயரில் யாழ்ப்பாணத்தில் சர்வதேச மட்டைப் பந்து விளையாட்டு மைதானம் (கிரிக்கெட் ஸ்டேடியம்) ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. அத்துடன் அந்த விடயம் முற்றுப்பெற்றுவிட்ட. அதேபோல் யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டு அரங்கம் ஒன்றை உருவாக்குவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அதுவும் அதற்குமேல் எவ்வித கட்டுமானமும் இன்றி நிறுத்தப்பட்டுள்ளது.
விளையாட்டுத் திடல்களை உருவாக்குவதனூடாக அபிவிருத்தியை ஏற்படுத்த முடியும் என்பது அனுர அரசாங்கத்தின் புதிய கண்டுபிடிப்பாக உள்ளது. கண்டி, கொழும்பு உட்பட இலங்கையின் பல பகுதிகளில் சர்வதேச தரம்வாய்ந்த பல்வேறு விளையாட்டு மைதானங்கள் உள்ளன. அந்த இடங்களெல்லாம் பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடைந்துவிட்டதா என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்..
அன்பிற்கினிய தமிழ் மக்களே,
தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழக்கூடிய வடக்கு கிழக்கு பிரதேசங்களில் பனை, தென்னை, வாழை, உப உணவுப் பொருட்கள், நெல், உளுந்து போன்ற பல விவசாய உற்பத்திப் பொருட்கள் செய்கை பண்ணப்படுகின்றன. அதேபோல் மிகப்பெருமளவிலான கடல் வளமும் இருக்கின்றது. இவற்றை மூலப்பொருட்களாகக் கொண்டு தொழிற்சாலைகளை உருவாக்கியிருக்கலாம். வடக்கு-கிழக்கில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்ய ஆக்கபூர்வமான நடவடிக்கையை மேற்கொண்டிருக்கலாம். ஆனால் இவற்றில் சில பேச்சளவில் இருந்தாலும் கூட நடைமுறையில் இல்லை என்பதே நிதர்சனமாகும். வடக்கு மாகாணம் முன்னேற வேண்டுமாக இருந்தால் காங்கேசன்துறை துறைமுகம், பலாலி விமான நிலையம் என்பன அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். இவை அபிவிருத்தி செய்வதனூடாக பல்லாயிரக்கணக்கான தென்னிந்திய சுற்றுலா பிரயாணிகளும் புலம்பெயர் தமிழர்களும் மிகப்பெருமளவில் வருவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். இதனூடாக நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு ஏற்படும்.
காங்கேசன்துறை துறைமுகம் அபிவிருத்தி அடைவதனூடாக இந்தியாவிலிருந்து கொழும்புக்கு வந்து வடக்கு மாகாணம் வருகின்ற சரக்குகள் அனைத்தையும் யாழ்ப்பாணம் கொண்டுவருவதனூடாக வடக்கு மாகாணம் முழுமையாகவும் அனுராதபுரம், திருகோணமலை போன்ற பிரதேசங்களுக்கும் மிக விரைவாக வினியோகிக்க முடியும். இதனூடாக பல்லாயிரம் கோடி ரூபாய் பணத்தை மிச்சப்படுத்த முடியும் என்பதுடன் பொருட்களை மிக விரைவாகவும் வினியோகிக்க முடியும். அத்துடன் ஏற்றுமதி இறக்குமதிக்கான சந்தை வாய்ப்புகளும் அதிகரிக்கும். கடல்சார் உணவு உற்பத்திகளையும் விவசாய உற்பத்திகளையும் மிக விரைவாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியும். ஆனால் அவ்வாறான அபிவிருத்திகளில் இலங்கை அரசாங்கம் நாட்டம் செலுத்துவதாக இல்லை. இத்துறைமுகம், விமானநிலையம் போன்றவற்றை அபிவிருத்தி செய்ய இந்திய அரசாங்கம் பலமில்லியம் டொலர் நிதியை அன்பளிப்பாக வழங்க முன்வந்துள்ள போதிலும் அத்தகைய அபிவிருத்திகளை இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் அலட்சியம் செய்வதின் மூலம் உண்மையிலேயே இந்த அரசாங்கத்திற்கு அபிவிருத்தியின்மீது அக்கறை உள்ளதா என்ற கேள்வி எழுகின்றது.
இவற்றை அபிவிருத்தி செய்வதனூடாக, வடக்கு மாகாணம் மாத்திரமல்ல முழு இலங்கையுமே முன்னேற்றப்பாதையில் செல்ல முடியும். வடக்கு மாகாணத்தில் பத்து இலட்சம் மக்களே வாழ்கின்றனர். மேற்கண்ட அபிவிருத்திகள் செயற்படுத்தப் படுமாக இருந்தால் ஏனைய பிரதேச இளைஞர்கள் யுவதிகள்கூட வேலை வாய்ப்புகள் தேடி வடக்கிற்கு வரலாம். இதனால் பயனடையப்போவது முழு இலங்கையுமே.
அன்பிற்கினிய தமிழ் மக்களே,
நாடு இன்னமும் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீளவில்லை. 2027-2028ஆம் ஆண்டுகளில் சர்வதேச கடன்களை மீளச் செலுத்த ஆரம்பிக்கும் பொழுது, இப்பொழுது கையிலிருப்பில் இருக்கும் அன்னியச் செலாவணி அதிகளவில் கரைந்து போகலாம். அத்தியாவசியப் பொருட்களையோ, மருத்துவப் பொருட்களையோ இறக்குமதி செய்வதற்குக்கூட அன்னியச் செலாவணிக்குத் தட்டுப்பாடு ஏற்படலாம். இத்தகைய மோசமான ஒரு பொருளாதாரச் சூழலிலேயே நாடு இன்னமும் இருந்துகொண்டிருக்கிறது.
சீனாவிடம் கடன்வாங்கி ஹம்பாந்தோட்டை துறைமுகம், மத்தள விமானநிலையம் கட்டப்பட்டது. வர்த்தக ரீதியாக இது அனுகூலமாக இல்லாத விடயமாக இருந்தபோதிலும்கூட மகிந்த ராஜபக்ச அரசாங்கம் சீனாவிடமிருந்து மிகப்பெருமளவிலான வட்டியுடன் கூடிய கடனைப் பெற்று இத்துறைமுகத்தையும் விமானநிலையத்தையும் அமைத்தனர். இவற்றால் எத்தகைய இலாபமும் அற்ற நிலையில், ஹம்பாந்தோட்டை துறைமுகம் நூறு வருட குத்தகைகக்கு சீனாவிற்குக் கொடுக்கப்பட்டுள்ளது. மத்தள விமானநிலையமும் பல மில்லியன் நட்டத்தில் முடங்கிக்கிடக்கிறது.
ஆனால் பலாலி விமானநிலையமோ, காங்கேசன்துறை துறைமுகமோ அப்படிப்பட்டவையல்ல. நிச்சயமாக அவை முடங்கிப் போகாமல் முன்னேறுவதற்கான சகல வாய்ப்புகளும் இருக்கிறது என்பதுடன் இவற்றின் அபிவிருத்திக்குக் கடனாக அல்லாமல் நன்கொடையாக நிதி வழங்க இந்திய அரசு தயாராகவே உள்ளது.
மொத்தத்தில் அனுர அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. அபிவிருத்திகளையும் மேற்கொள்ளவில்லை. மாறாக கிடைக்கக்கூடிய நன்கொடைகளைப் பெற்று அபிவிருத்தி செய்வதற்கான வாய்ப்பை நிராகரிக்கின்ற ஒரு தவறான அணுகுமுறையை மேற்கொள்கின்ற போக்கினையே எம்மால் காணக்கூடியதாக இருக்கின்றது.
இரண்டு வருடம் பூர்த்தியாகியுள்ள சூழ்நிலையில், அரசாங்கம் தனது உறுதிமொழிகளை உதாசீனம் செய்வதையும் அபிவிருத்தி என்று சொல்லி தொடர்ச்சியாக ஏமாற்றப்படுவதையும் அரசுக்கு இடித்துரைக்கும் முகமாகவும் அரசு எவ்வாறு தமிழ் மக்களை ஏமாற்றி வருகிறது என்பதை தமிழ் மக்கள் புரிந்துகொள்வதற்காகவும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியானது மிகப் பிரமான்டமான உணவுத் தவிர்ப்புப் போராட்டம் ஒன்றை கடந்த 12.09.2026ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடத்தியது.
குட்டக் குட்ட குனிபவனும் மடையன்ளூ குனியக் குனியக் குட்டுபவனும் மடையன் என்ற பழமொழிக்கு ஏற்ப தமிழ் மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றலாம் என்றோ அவர்கள் தொடர்ந்தும் ஏமாறுவர்கள் என்றோ நினைப்பது தவறானது. எனவே வீண் காலவிரயங்களைத் தவிர்த்து தமிழ் மக்கள் தமது அபிவிருத்திகளை தாமே திட்டமிட்டு மேற்கொள்கின்ற வகையில் மாகாணசபை தேர்தல்களை நடாத்தி, மாகாணத்திற்கு உரிய அதிகாரங்களை முழுமையாக வழங்குவதனூடாகவே நாடு முன்னேற்றப்பாதையில் போக முடியும்.
மீண்டும் அடுத்த மடலில் சந்திக்கும்வரை
அன்புடன் உங்கள்
சுரேஷ் க.பிரேமச்சந்திரன்







