நீதிக்கான ஓலம் போராட்டம் ஆரம்பம்

கடந்த காலங்களில் இடம்பெற்ற படுகொலைகள், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் மற்றும் ஏனைய மனித உரிமை மீறல்களுக்கு நீதி மற்றும் பொறுப்புக்கூறலைக் கோரி, சர்வதேச விசாரணையை வலியுறுத்தி முன்னெடுக்கப்படும் ‘நீதிக்கான ஓலம்–2’ போராட்டம் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் ஆரம்பமானது.

இந்தப் போராட்டம் திங்கட்கிழமை வரை இரவு–பகலாக செம்மணி பகுதியில் தொடர்ந்து இடம்பெறவுள்ளது.

‘நீதிக்கான ஓலம்–1’ போராட்டம் கடந்த வருடம் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், அதன் ஊடாகத் தாயகத்தில் இருந்து ஒன்றரை இலட்சத்துக்கும் அதிகமான கையெழுத்துகள் பெறப்பட்டு, அவை பிரதிநிதிகள் ஊடாக சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் அனுப்பி வைக்கப்பட்டதாக தாயகச் செயலகத்தின் கிழக்கு மாகாண அமைப்பாளர் செல்வகுமார் தெரிவித்தார்.

இம்முறை ‘நீதிக்கான ஓலம்–2’ போராட்டம் செம்மணி படுகொலை இடம்பெற்ற இடத்திலேயே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. செம்மணி என்பது வடக்கு–கிழக்கில் இடம்பெற்ற மனிதப் புதைகுழிகளின் ஒரு அடையாளம் மட்டுமே என்றும், மன்னார், அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை உள்ளிட்ட தமிழர் தாயகப் பகுதிகளில் பல மனிதப் புதைகுழிகள் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இறுதிப் போரின் போதும் தமிழர் தாயகப் பகுதிகளில் அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்கள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

செம்மணியில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் தமிழர்களின் எலும்புக்கூடுகள் பேசுகின்றன என்ற வலுவான செய்தியை சர்வதேசத்துக்கு எடுத்துக்காட்டுவதாகவும், சர்வதேச நீதிப் பொறிமுறை ஊடாக நீதி கிடைக்க வேண்டும் என்பதே தமது கோரிக்கை என்றும் அவர் தெரிவித்தார்.

வடக்கு–கிழக்கில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழிகளுக்கு சர்வதேச நீதிப் பொறிமுறை ஊடாக நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்தார்.

செம்மணியில் இதுவரை 500க்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ள போதிலும், இதுவரை சர்வதேசம் அதற்கான தீர்வை வழங்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, வடக்கு–கிழக்கு வாழ் தமிழ் மக்கள் அரசியல், இன, மத வேறுபாடுகளை கடந்து ஒன்றிணைந்து, குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

“எமக்கு தேசிய அங்கீகாரம் வழங்கப்படும் வரை தமிழர்களுடைய எலும்புக்கூடுகளும் பேசும்” என்ற வலுவான செய்தியை சர்வதேசத்துக்கு தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

Share this article

More News