புலிகள் முகாம்’ என்ற போலித் தகவலைப் பரப்பிய நபர் கைது

கிளிநொச்சி, அக்கராயன்குளம் வனப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் ஒன்று இயங்கி வருவதாக உறுதிப்படுத்தப்படாத போலியான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரப்பியதாகக் கூறப்படும் 46 வயது நபர் ஒருவர் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் ஊடகப் பிரிவின் தகவல்களின்படி, சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்ட காணொளி மற்றும் ஊடகவியலாளர் ஒருவருடனான சந்திப்பு ஒன்றின் மூலம் குறித்த சந்தேகநபர் இந்தப் போலித் தகவல்களைத் தொடர்ந்து பரப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்கராயன்குளம் பொலிஸ் எல்லைக்குட்பட்ட பாலை வனப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் ஒன்று இயங்கி வருவதாக பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்தமை தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணைகளில், சந்தேகநபர் போரலஸ்கமுவ மற்றும் பெல்லன்வில பகுதிகளைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரை கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும், அவருக்கு எதிராக பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டத்தின் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

Share this article

More News