மாகாணசபை தேர்தல் நடக்குமா என்பது கேள்விக்குறியே? ஜனதிபதியுடனான சந்திப்பில் சுரேஸ் பிரேமச்சந்திரன்

நேற்று (03.08.2026) காலை தமிழ் பேசும் அரசியல் கட்சிகளுடைய அரசியல் பேரவையானது ஜனாதிபதியை சந்தித்து அவர்களிடம் முக்கியமான மூன்று விடயங்களை பற்றி கலந்துரையாடினார்கள். அவை

மாகாண சபை தேர்தல்களை நடத்துவது

காணிகளை விடுவிப்பது

புதிய அரசியல் சாசனத்தினுடைய தேவை ஆகியனவாகும்.

இச்சந்திப்பில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பாக பங்குபற்றிய கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்கள், கருத்துக்களை முன்வைந்த்தார்.

“வடக்கு கிழக்கு மாகாணங்களில் கடந்த 7-8 வருஷங்களாக மாகாண சபை தேர்தல் நடைபெறவில்லை” என்பதை தெளிவுபடுத்தினார்.

முன்னரிருந்த மைத்திரிபால ரணில் அரசாங்கமோ அல்லது கோத்தபாய அரசாங்கமோ அல்லது அதற்கு பின்னர் வந்த ரணில் அரசாங்கமோ கூட இந்த தேர்தலை நடத்தி இருக்கலாம்; ஆனால் அவர்கள் அதை நடத்தவில்லை.

இப்பொழுது ஆட்சியில் வந்திருக்கக்கூடிய நீங்கள், உங்களது தேர்தல் விஞ்ஞாபனத்தில் நீங்கள் வந்து ஒரு வருடத்திற்குள் மாகாண சபை தேர்தலை நடத்துவதாக கூறினீர்கள். ஆனால் இரண்டு வருடங்கள் முடிந்துவிட்டது. இந்த இரண்டு வருடங்கள் முடிந்தும் கூட இன்னும் தேர்தல்கள் நடத்தப்படவில்லை.

ஆனால் வடக்கு கிழக்கை பொறுத்தவரையில் கடந்த கால தேர்தல்களின்பொழுது உங்களுக்கு மக்கள் மிகப்பெரிய அளவில் வாக்களித்திருக்கிறார்கள். முக்கியமாக நீங்கள் பல்வேறுபட்ட உறுதிமொழிகளை கொடுத்திருக்கிறீர்கள். அதில் மாகாண சபை தேர்தலை நடத்துவோம் என்பதையும் நீங்கள் மிக தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறீர்கள்.

ஆனாலும் கூட இரண்டு வருடங்களாக இன்னும் மாகாண சபை தேர்தல் உங்களால் நடத்த முடியவில்லை. ஆகவே மக்கள் மத்தியில் இந்த தேர்தல் நடக்குமா, நடக்காதா?’ என்ற அச்சங்கள் வர ஆரம்பித்திருக்கின்றன.

உங்களுக்கு முன்னுக்கு இருந்தவர்கள் மாகாணசபை தேர்தலை நடத்தாமல் ஏமாற்றினார்கள். நீங்கள் அவர்களிலிருந்து வித்தியாசமானவர்கள் என்று பலமுறை கூறி இருக்கிறீர்கள். ஆகவே இந்த தேர்தலை நீங்கள் வைப்பீர்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

தமிழ் மக்களுக்கான ஒரு பாரிய உரிமை போராட்டத்தின் ஒரு தீர்வாகவே இந்த மாகாண சபை முறை, அதிகார பகிர்வு போன்றவை உருவாக்கப்பட்டன. ஆனால் அவ்வாறான தீர்வை காலவரையறையின்றி ஒத்திப்போடுவதானது இந்த மாகாண சபையிலிருந்து பலன்களை பெற்ற தமிழ் மக்களை ஏமாற்றுவதாகவும், மாகாண சபை தேர்தல் ஒத்திப்போடுவது என்பது அரசியல் சாசனத்தின் 13வது திருத்தத்தின் ஊடாக மக்களுக்கு வழங்கிய அதிகார பகிர்வை நிராகரிக்கிற ஒரு ஜனநாயக விரோத நடவடிக்கை என்பதையும் நாங்கள் சுட்டிக்காட் விரும்புகின்றோம்.

கடந்த 7 வருடங்களாக மாகாண சபை தேர்தலை நடத்துவது என்பது முன்னரிருந்த அரசுகள் செய்யவில்லை. இப்பொழுது வந்திருக்கக்கூடிய உங்களது அரசும் ஒரு பாராளுமன்ற தெரிவுக்குழுவை நியமித்திருக்கின்றது. இந்த பாராளுமன்ற தெரிவுக்குழு ஏற்கனவே 6 மாதமாக இதுவரை இன்னும் அறிக்கைகள் எதனையும் கொடுக்கவில்லை.

அவர்கள் அறிக்கை கொடுப்பதாக இருந்தால் கூட, சில சமயங்களில் என்ன விதமான அறிக்கை கொடுக்க இருக்கிறார்கள்? அது கடந்த காலத்தில் போன்று ஒரு விகிதாசார முறையில் தேர்தலை நடத்துவதா? இல்லை என்றால் தொகுதி வாரியாக நடத்துவதா? இல்லை என்றால் இரண்டும் கலந்து ஒரு சிஸ்டமா? இதனை அப்படி செய்வதாக இருந்தால், சில சமயங்களில் உங்களுக்கு மீண்டும் ஒரு எல்லைகளை நிர்ணயிக்க வேண்டிய தேவை ஏற்படும்—ஒரு ‘Demarcation Commission’ ஒன்று உருவாக்க வேண்டியது ஏற்படும். அவ்வாறாயின் இந்த தேர்தல் நடத்துவதற்கு இன்னும் பல வருடங்கள் ஆகலாம்.

ஆகவே நாங்கள் உங்களிடம் கேட்டுக்கொள்வது: இந்த சூழ்நிலையில் நீங்கள் பழைய முறையின் பிரகாரம் தேர்தலை நடத்திக்கொண்டு, நீங்கள் விரும்புகிற எல்லாவிதமான மாற்றங்களையும் அடுத்த அந்த மாகாண சபை காலத்தில் நாங்கள் எல்லாவற்றையும் பேசி ஒரு முடிவுக்கு கொண்டுவர முடியும். அது என்ன விதமாக தேர்தல் நடத்தப் போகின்றோம்? பெண்களுக்ககான விகிதம் எவ்வளவு கொடுக்கப்போகிறோம்? இளைஞர்களுக்கு எவ்வளவு கொடுக்கப்போகிறோம்? போன்ற சகல விஷயங்களும் அதில் நாங்கள் நிறைவேற்றிக் கொள்ளலாம்.

ஆகவே அதுவரை காத்திருக்காமல், முதல் பழைய முறையின் பிரகாரம் இந்த தேர்தலை நடத்த வேண்டும்.

வடக்கு கிழக்கு மாகாணங்கள் இயங்குமாக இருந்தால், நாங்கள் புலம்பெயர் மக்கள் மத்தியில் இருந்தும், இந்தியா போன்ற நாடுகளிலிருந்தும் மிகப்பெரிய அளவிலான முதலீடுகளை கொண்டுவர முடியும். இன்றைக்கு இலங்கையில் இருக்கக்கூடிய பொருளாதார நிலைமையில், அவ்வாறான முதலீடுகள் என்பது ஒட்டுமொத்தமான நாட்டுக்கு ஒரு பெரிய வரப்பிரசாதமாக இருக்கும்.

இந்த முதலீடுகளை கொண்டு வருவதற்கான வசதிகளையும் நீங்கள் மாகாணங்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தால், அதனை நிச்சயமாக செய்ய முடியும். இப்பொழுது சகல விடயங்களையுமே மத்திய அரசாங்கம் தான் பார்ப்பது, எல்லாமே மத்திய அரசாங்கத்திற்குள் தான் இருப்பது என்ற ஒரு நடவடிக்கை தான் இருந்து கொண்டிருக்கிறது. இதனை மாற்றுவதற்கு நீங்கள் தான் முயற்சிக்க வேண்டும். அவ்வாறு செய்ய முடியுமாக இருந்தால் நிச்சயமாக பல முதலீடுகளை கொண்டு வரக்கூடியதாக இருக்கும்.

ஆகவே எங்களைப் பொறுத்தவரையில், வடக்கு கிழக்கில் இருக்கக்கூடிய சகல தமிழ் கட்சிகளும்—இன்று வந்திருப்பவர்கள் மாத்திரமல்ல, இதில் வராமல் கலந்துகொள்ளாமல் இருப்பவர்கள் என எல்லோருமே இந்த தேர்தல் வைக்க வேண்டும் என்பதில் உறுதியான முடிவை கொண்டிருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் NNP-யில் இருந்து தெரிவு செய்யப்பட்டவர்கள் கூட மாகாண சபை தேர்தல் நடத்துவதற்கு எதிரானவர்கள் அல்ல என்பதையும் நாம் உங்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறோம்.

என தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த ஜனாதிபதி அவர்கள், தான் இன்று மாலை பாராளுமன்ற தெரிவுக்குழுவினுடைய தலைவராக இருக்கக்கூடிய விஜேதேவதையை சந்தித்து பேச இருப்பதாகவும், அதனை தொடர்ந்து எப்படி இந்த விடயங்களை கையாளலாம் என்பது தொடர்பாக பின்னர் அறிவிக்கிற ஒரு தோரணையில் அவரது பதில் அமைந்திருந்தது.

இந்த பேச்சுவார்த்தையின் பொழுது, திரு ஹக்கீம், திரு நிசாம் காரியப்பர், சாணக்கியன், சுமந்திரன் போன்றோரும் இது தொடர்பாக அவருக்கு தேவையான விளக்கங்களை அளித்திருந்தார்கள்.

இவை தவிர நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டது போல—ஏனைய விடயங்கள் தொடர்பாகவும் பேசப்பட்டது.

 

பேச்சுவார்த்தை தொடர்பாக சுரேஸ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவிக்கையில் இந்த பேச்சுவார்த்தைகள் என்பது ஒரு சுமூகமாக நடந்தது என்பதைத் தவிர, இந்த அரசாங்கம் இந்த மாகாண சபை தேர்தலை நடத்துமா, புதிய அரசியல் சாசனம் வருமா என்பதெல்லாம் ஒரு கேள்விக்குரிய விஷயமாகத்தான் இருக்கிறது.

அதிலும் காணிகள் விடுவிப்பு தொடர்பாக கூட, தாங்கள் முப்படையினரிடமும் அவர்களுக்கு தேவையான காணிகள், எந்தெந்த காணிகள் விடுவிக்கப்படும் என்ற ஒரு விவரத்தை கேட்டிருப்பதாகவும், ஆகவே அந்த விஷயத்தில் தாங்கள் இன்னும் உறுதியாக இருப்பதாகவும், காணிகள் விடுவிக்கப்படும் என்ற ஒரு தோரணையில் தான் பதில் இருந்தது.

ஆனால் இந்த விடயங்களை பார்க்கின்ற பொழுது, ஏற்கனவே அவர் முன்பு கூறிய பதில்கள் தான் திரும்பவும் திரும்பவும் எங்களுக்கும் கூறப்பட்டதாகத்தான் நாங்கள் உணர்கிறோம். ஆகவே நாங்கள் பொறுத்திருந்து பார்க்க வேண்டும், எவ்வளவு தூரம் இந்த விஷயங்கள் வந்து நிறைவேறும் என்று. ஆனால் ஒரு நம்பிக்கையை தரக்கூடிய மாதிரி பேச்சுவார்த்தைகள் நடந்ததாக இல்லை என்பதுதான் எங்களுடைய கருத்து.

இதற்கு பிற்பாடு, பிற்பகல் எதிர்க்கட்சித் தலைவரையும் நாங்கள் சந்தித்து பேசினோம். இதே விடயங்கள் அவருக்கும் சொல்லப்பட்டது. எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் வெறும் பாராளுமன்றத்திலும் வெளியிலும் ஸ்டேட்மெண்ட்கள் (Statements) மேக் பண்ணுவதோடு முடியக்கூடாது. அரசாங்கத்துக்கு புரியக்கூடிய வகையில் நாங்கள் அழுத்தங்களை கொண்டு வந்தால் தான் மாகாண சபை தேர்தல் நடக்கும்; அதற்கு ஒரு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எதிர் தரப்பு, எதிர்க்கட்சி தலைவர் என்ற அடிப்படையில் அவர்கள் எடுக்க வேண்டும் என்பதையும், அதற்கு ஆதரவாக நாங்கள் இருப்போம் என்று அவருக்கு கூறியிருக்கின்றோம்.

அவர் சொன்ன ஒரு விடயம் தன்னை பொறுத்தவரையில் மாகாண சபையினுடைய 13வது திருத்தம்—அதில் முக்கியமாக பொலிஸ் அதிகாரங்கள், காணி அதிகாரங்கள் உட்பட அனைத்தும் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் எனக்கு முழுமையான கருத்து இருக்கிறது. அது தொடர்பாக நான் எந்த ஒரு அச்சமும் இல்லாமல் பேசுவேன். அது தொடர்பாக நான் மீண்டும் ஒருமுறை அந்த விடயத்தை மிகத் தெளிவாக பாராளுமன்றத்திலும் வெளியிலும் சொல்ல இருக்கிறேன் என்ற ஒரு விடயத்தை கூறினார்.

ஆகவே அந்த அடிப்படையில் தான் இந்த பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்திருக்கிறது.

நாளை தினம் நாங்கள் இந்திய தூதுவரை சந்திக்க இருக்கிறோம். நாளை மறுதினம், நான் நம்புகின்றேன், இந்தியாவினுடைய வெளியுறவுச் செயலாளர் வர இருக்கின்றார்; அவரையும் சந்தித்து இந்த விடயங்களை பற்றி பேச இருக்கிறோம்.

ஆகவே அந்த வகையில் இன்றைய கூட்டத்திற்கு பிற்பாடு நாளையும் நாளை மறுதினமும் இன்னும் இரண்டு சந்திப்புகள் இருக்கின்றன. அந்த வகையில் நாங்கள் இயன்றவரை இந்த விஷயங்களை எவ்வாறு முன்னெடுத்து செல்வது என்பதில், இந்த தமிழ் பேசும் கட்சிகளுடைய அரசியல் பேரவையானது இந்த விடயங்களை முன்னெடுத்து செல்வதற்கான முனைப்புகளை காட்டி நிற்கிறது. அந்த வகையில் இதனை நாங்கள் முன்னெடுத்து செல்ல வேண்டும் என்று நம்புகின்றோம்.

Share this article