சனிக்கிழமை பிரதமர் நரேந்திர மோதி, இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனுடன் பேசினார். இது குறித்த தகவலை அவர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்தார்.
அவர் ‘பிராந்தியத்தின் முக்கியமான எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களைக்’ கண்டித்ததுடன், “இதனால் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது” என்றும் கூறினார்.
அதே சனிக்கிழமை அன்று, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வெளியுறவு அமைச்சகம், ‘ஹோர்மூஸ் ஜலசந்தியில் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட இரானிய தாக்குதல்கள்’ குறித்து 22 நாடுகளின் கூட்டு அறிக்கையை வெளியிட்டது. இதில் வணிகக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் கண்டிக்கப்பட்டது.
இந்த 22 நாடுகளில் இந்தியாவின் பெயர் இடம்பெறவில்லை.அதாவது, இரானைக் கண்டிப்பதில் இருந்து இந்தியா விலகி இருந்தது.
இருப்பினும், இதற்கு முன்பு இந்தியா வளைகுடா நாடுகளின் பல தலைவர்களுடன் பேசி, அங்கு நடத்தப்பட்ட இரானிய தாக்குதல்களைக் கண்டித்திருந்தது.
மார்ச் 2-ஆம் தேதி அன்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடனும் பேசி, பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணுவதன் அவசியத்தை பிரதமர் மோதி வலியுறுத்தினார்.
சனிக்கிழமை அன்று இரான் தொடர்பாக இந்தியா எடுத்த நிலைப்பாடு, முந்தைய நிலைப்பாட்டிலிருந்து முற்றிலும் மாறுபட்டது என்று சொல்ல முடியாவிட்டாலும், நிச்சயமாக வித்தியாசமானது.







