ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கட்சியின் ஸ்தாபகத் தலைவர், எமது அரசியல் வழிகாட்டி தோழர் பத்மநாபா அவர்களின் புரட்சிகரமான சிந்தனைகளையும், எமது இயக்கத்தின் தியாகம் செறிந்த வரலாற்று ஆவணங்களையும் டிஜிட்டல் தளத்தில் ஆவணப்படுத்தும் இந்தப் புதிய முயற்சிக்கு, கட்சியின் செயலாளர் என்ற வகையில் எனது உணர்வுபூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
“மக்களுக்கு மேலாக எவரும் இல்லை; மக்களின் பலமே எமது பலம்” என்ற தோழர் பத்மநாபாவின் அவர்களின் உன்னதமான பொன்மொழிக்கு உயிர் கொடுக்கும் வகையில், எமது போராட்ட வரலாற்றை இன்றைய தலைமுறைக்குக் கடத்துவது எமது தார்மீகக் கடமையாகும்.
1980-களில் ஈழப் போராட்டக்களத்தில் நாம் முன்னெடுத்த அரசியல் மற்றும் இராணுவ நகர்வுகள், மாகாண சபை ஊடாக நாம் நிலைநாட்ட முயன்ற அதிகாரப் பகிர்வு முயற்சிகள் எனப்பல வரலாற்றுச் சுவடுகளை உள்ளடக்கிய இந்தத் தளம், தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நோக்கிய பயணத்தில் திசைகாட்டியாக அமையும்.
சமகால நவீன விஞ்ஞான வளர்ச்சியும், தகவல் தொழில்நுட்பப் புரட்சியும் உலகளாவிய அரசியல் செல்நெறியில் பாரிய மாற்றங்கள ஏற்படுத்தியுள்ளன. இக்காலக்கட்டத்தில்,எமது அரசியல் உரையாடல்கள் வெறும் உணர்ச்சிகளோடு நின்றுவிடாமல், நவீன விஞ்ஞானபூர்வமான அணுகுமுறைகளையும், சர்வதேச அரசியல் மாற்றங்களையும் உள்வாங்கியதாக அமைய வேண்டும்.
இனத்துவப் போராட்டங்களை வர்க்கப் போராட்டத்தோடும், உலகளாவிய ஒடுக்கப்பட்ட மக்களின் குரலோடும் இணைக்க வேண்டும் என்ற தோழர் பத்மநாபாவின் தொலைநோக்குப் பார்வை, டிஜிட்டல் யுகத்தின் உலகளாவிய அரசியல் உரையாடல்களுக்கு மிகவும் அவசியமானது.
எமது மக்களின் சுயநிர்ணய உரிமை மற்றும் நீதியான அரசியல் தீர்வை நோக்கிய பயணத்தில், இந்த இணையதளம் புலம்பெயர்ந்த உறவுகளையும் தாயக மக்களையும் ஒருமித்த இலக்கின் கீழ் இணைக்கும் ஒரு அறிவுசார் பாலமாக அமையும்.
எமது வரலாற்றைச் சரியாகப் புரிந்து கொள்வதன் மூலமே, நாம் வருங்காலத்திற்கான சரியான அரசியல் பாதையை வகுக்க முடியும். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பணியில் அர்ப்பணிப்புடன் உழைத்த அனைத்துத் தோழர்களுக்கும் எனது புரட்சிகரமான பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ந.சிவசக்தி ஆனந்தன்
செயலாளர்,
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி.






