எங்களுக்கான நீதியை எங்களுக்குத் தாருங்கள்..ஜெனீவாவில் திரண்ட நூற்றுக்கணக்கான தமிழர்கள்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 17ஆவது ஆண்டு நினைவேந்தல் காலத்தை முன்னிட்டு, தமிழர்களுக்கான நீதியை வலியுறுத்தி சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

“எங்களுக்கான நீதியை எங்களுக்குத் தாருங்கள்” என்ற கோரிக்கையை முன்வைத்து, ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்திற்கு அருகிலுள்ள ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் இந்தப் போராட்டம் இடம்பெற்றது.

இதில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கலந்துகொண்டனர்.

2026 செப்டெம்பர் 14ஆம் திகதி பிற்பகல் 2.30 மணியளவில் ஜெனீவா தொடருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள பூங்காவில் இருந்து கவனயீர்ப்புப் பேரணி ஆரம்பமானது. பேரணியில் பங்கேற்றவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரின் படத்தையும் பல்வேறு பதாதைகளையும் ஏந்தியவாறு சென்றனர்.

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான காட்சிப்படுத்தலும் பேரணியில் இடம்பெற்றிருந்தது.

 

தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்றதாகக் கூறப்படும் இனப்படுகொலை தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், தமிழீழத்திற்கான சர்வசன வாக்கெடுப்பு ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பில் நடத்தப்பட வேண்டும் என்றும் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

“மக்கள் புரட்சி வெடிக்கட்டும், சுதந்திர தமிழீழம் மலரட்டும்” உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியவாறு போராட்டக்காரர்கள் ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்திற்கு அருகிலுள்ள ஈகைப்பேரொளி முருகதாசன் திடலை சென்றடைந்தனர். அங்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டதுடன், தேசியக் கொடியேற்றும் நிகழ்வும் இடம்பெற்றது.

தொடர்ந்து தியாக தீபம் லெப்டினன்ட் கேணல் திலீபன் மற்றும் ஈகைப்பேரொளிகளின் நினைவாக ஈகைச்சுடர்கள் ஏற்றப்பட்டன.

ஈழத்தமிழர்களின் வரலாறு

இதன்போது மலர்மாலை அணிவித்தல், அகவணக்கம் மற்றும் மலர்வணக்கம் ஆகிய நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன், பங்கேற்பாளர்கள் உறுதிமொழியும் எடுத்துக்கொண்டனர்.

புலம்பெயர் நாடுகளில் பிறந்து வளர்ந்த தமிழ் இளையோர்களும் போராட்டத்தில் குறிப்பிடத்தக்க வகையில் பங்கேற்றனர்.

அவர்கள் தங்களது வாழிட நாடுகளின் மொழிகளில் உரையாற்றியதுடன், ஒன்றுகூடலுக்கான பிரகடனத்தையும் வாசித்தனர். இதனிடையே, பிரித்தானிய பிரதமரின் இல்லத்திலிருந்து ஆரம்பித்து அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் ஊடாக ஐக்கிய நாடுகள் சபை நோக்கி முன்னெடுக்கப்பட்ட மனிதநேய ஈருருளிப் பயணத்தில் பங்கேற்ற செயற்பாட்டாளர்களும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

தாங்கள் பயணித்த நாடுகளில் சந்தித்த அரசியல் பிரதிநிதிகளிடம் ஈழத்தமிழர்களின் வரலாறு, தற்போதைய நிலைமை மற்றும் தமிழர்களின் உரிமைகள் தொடர்பான கோரிக்கைகள் குறித்து எடுத்துரைத்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

தமிழ் மக்களுக்கு நீதியும் அரசியல் இறைமையும் கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இறுதியில் தமிழீழ தேசியக் கொடி ஏற்றப்பட்டு, பாடல்கள் மற்றும் கோஷங்களுடன் கவனயீர்ப்புப் போராட்டம் நிறைவடைந்தது.

Share this article

More News