ஈழவிடுதலைப் போராட்டத்தில் EPRLF அமைப்பானது மற்றைய ஆயுத அமைப்புகளை விட தனித்துவமான ஒன்றாக திகழ்ந்தது என்றால் அது மிகையில்லை. தற்கால அரசியல் அவதானிகளும் புத்திஜீவிகளும் இன்றைய அரசியல் வெற்றிடத்தை உணர்ந்து EPRLF ஒன்றே இந்த வெற்றிடத்தை நிரப்பத் தகுதியானது என எமது கடந்தகாலத்தை எமக்கு நினைவூட்டத் தொடங்கியுள்ளதும் அதற்குச் சான்றாகும்.
அவர்கள் குறிப்பிட்ட சில தகமைகளை இங்கே குறிப்பிடுவதன் மூலம் நாங்களே ஒருதடவை எம்மை திரும்பிப் பார்க்க முடியும்.
* சமூகவிடுதலையில் இருந்துதான் ஒரு தேசிய இனத்தின் விடுதலைக்கான பயணம் தொடங்குகிறது என்று ஈழவிடுதலைக்கான தெளிவான பாதையை வரையறுத்த ஒரே இயக்கம் EPRLF.
* தனது கட்சிக் கட்டமைப்பில் சமூகவிடுதலையை பிரதிபலிக்கும் வண்ணம் மக்கள் அமைப்புகளை தனித்தனியாகக் கட்டியமைத்ததோடு அவர்களுக்கான அரசியல் பயிற்சிப்பட்டறைகளை உருவாக்கி அவர்களை அரசியல் மயப்படுத்தியது EPRLF.
* அரசியல் மயப்படுத்தப்பட்ட இந்த இந்த மக்கள் அமைப்புகளிலிருந்து ஆயுதப்பயிற்சிக்கான நபர்களை தேர்ந்தெடுத்து பயிற்றுவித்து மக்கள் விடுதலைப் படை [ PLA] எனும் இராணுவ அமைப்பை தனது ஆயுதப் போராட்டத்திற்காக உருவாக்கியது EPRLF.
*கிராமங்களிலிருந்து தொடங்கும் பிரச்சினைகளும், அவற்றின் தேவைகளுமே மக்கள் அரசியலாக நகரங்களை நோக்கியும் நாடுமுழுவதும் மேலெழுகிறது என்ற உண்மையை தோழர்களுக்கு போதித்தது.EPRLF.
* மக்களே தேசம்
மக்களே ஈழம்
மக்களே வெல்லுவர்
விடுதலை
எனவும்
உழைக்கும் மக்களின் உயர்வுக்காகவும்
ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகவும்
ஒன்றிணைந்து உறுதியுடன் இறுதிவரை போராடுவோம்
என்றும் மக்கள் சக்தியின் மகத்துவத்தையும் உழைக்கும் மக்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் பற்றிய அக்கறையினையும் தனது தோழர்களுக்கு உணர்த்தியதோடு முற்போக்கு சிந்தனை கொண்ட தோழர்களாக அவர்களை உருவாக்கியது EPRLF.
ஒரு மிகச்சிறந்த மக்கள் இயக்கமாக மேலெழுந்த EPRLF ஆனது எமது போராட்டத்துள் எழுந்த எதிர்ப்புரட்சிகர சக்திகளின் வன்முறைகளால் அதன் வளர்ச்சி இடையில் தடைப்பட்டு போனது.
பல பெறுமதி மிக்க தோழர்களை இழந்தும் போனது. இருந்தாலும் மகத்துவம் மிக்க தலைவன் தோழர் பத்மநாபாவின் தலைமையில் அறிவார்ந்த தோழர்களின் செயல்பாடுகளினால் பீனிக்ஸ் பறவையாக மீண்டெழுந்து எமது மக்களுக்கான இடைக்கால அரசியல் தீர்வான மாகாணசபை முறைமையை தனதாக்கி தமிழ்பேசும் மக்களுக்கான தன்னாட்சியொன்றை திருகோணமலையை தலைநகராக்கி வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஒன்றிணைந்த அரசொன்றை முதன்முதலில் நிறுவி வரலாற்றில் முத்திரை பதித்துக் கொண்டது EPRLF ஆனாலும் இந்த வரலாற்று நிகழ்வை சகிக்கமுடியாத அன்று இலங்கையில் ஆட்சியிலிருந்த பேரினவாத சக்திகளோடு இணைந்து கொண்ட அதே எதிர்ப்புரட்சிகர சக்தியினர் மீண்டும் EPRLFமீது தாக்குதல்களைநடத்தி அதன் செயல்பாடுகளைத் சீர்குலைத்தனர்.
அதோடு நின்றுவிடாமல் சென்னைவரை தொடர்ந்து எமது பாசமிகு தோழனும் நேசமிகு ஆசானுமாகிய தோழர் பத்மநாபாவையும் எமதினிய தோழர்களையும் கொன்றொழித்தனர்.
அதன் பிறகு நடந்த யுத்தங்களும் பேரழிவுகளும் எமது இயக்கத்தின் சீரான அரசியல் பயணத்தை மடைமாற்றியது. விளைவு எந்த இலட்சியங்களுக்காக போராட EPRLF உருவானதோ அந்த இலட்சியங்களில் இருந்து சற்றே விலகி கடந்த 15 வருடங்களாக தமிழ்த்தேசியம் சார்ந்த அரசியல் பாதையில் நம்பிக்கையோடு பயணித்து வருகின்றது .
EPRLF அமைப்பினராகிய நாம் கடந்து வந்த பாதையினை திரும்பி பார்க்கவும் அடுத்த தலைமுறைக்கு எமது போராட்டங்களின் நியாயங்களை எடுத்துச்சொல்லவும் ஓர் களம் தேவையென உணர்ந்து,அதற்கு ஓர் இணையத்தளத்தை உருவாக்கியுள்ளோம்.
அந்த இணையத்தளம் நாம் சேர்த்துவைத்த ஆவணங்களின் துணையோடும் அதில் இன்றுவரை மனம்சோராது பயணிக்கும் அனுபவம் மிக்க தோழர்களின் அனுபவ அரசியல் பதிவுகளோடும் ஓர் உண்மை வரலாற்றின் சாட்சியாக இயங்கும் என உறுதியளிக்கின்றோம்.
இணையக் குழு
EPRLF- EPIC






