தமிழர் அரசியல் தீர்வுக்கான புதிய அரசியலமைப்பு : கட்சிகள் இடையே ஒருமித்த நிலைப்பாடு

தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவை ஒருங்கிணைப்பில், இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கான புதிய அரசியலமைப்பின் அடிப்படை அம்சங்கள் குறித்து தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளுக்கும், அவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சித் தலைவர்களுக்கும் இடையிலான இரண்டாவது முக்கிய கூட்டம் கொழும்பில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், தமிழ் மக்களின் அரசியல் தீர்வுகளுக்கான புதிய அரசியலமைப்பின் அடிப்படை அம்சங்கள் குறித்து கட்சிகள் இடையே ஏகமனதாக இணக்கப்பாடு எட்டப்பட்டதாக தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவையின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த அடிப்படை அம்சங்களை பொதுநோக்காகக் கொண்டு, தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கு தீர்வளிக்கும் வகையில் ஒருங்கிணைந்த தீர்வுத்திட்டம் ஒன்றை உருவாக்கவும் உடன்பாடு காணப்பட்டுள்ளது.

இதற்காக, விரிவான அரசியல் தீர்வுத்திட்டத்தை வடிவமைக்கும் நோக்கில் ஒரு சிறப்பு வரைபுக்குழு (Drafting Committee) உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் தமிழ்த் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகளுடன், நிபுணர் குழுவும் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த முயற்சியின் ஒருங்கிணைப்பாளர்களாக சிரேஷ்ட சட்டத்தரணிகளான கா. ரனித்தா ஞானராஜா மற்றும் மரியதாஸ் யூட் டினேஷ் ஆகியோர் செயற்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நிபுணர் குழுவில் க. கனக ஈஸ்வரன், எம். சொர்ணராஜா, என். செல்வக்குமாரன், வி.ரி. தமிழ்மாறன், என். சிவக்குமார், கே. குருபரன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மேலும், இந்த கூட்டத்தில் பங்கேற்ற ஒவ்வொரு தமிழ்த் தேசிய அரசியல் கட்சியும் தங்களது சார்பில் ஒரு உறுப்பினரை இந்த நிபுணர் குழுவில் நியமிக்க ஒப்புதல் வழங்கியுள்ளன.

முன்னதாக பல்வேறு அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் மற்றும் முன்மொழிவுகளை சமர்ப்பித்திருந்தாலும், அனைத்து தமிழ்த் தேசிய கட்சிகளும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒருங்கிணைந்த வரைபை உருவாக்குவது முக்கிய தேவையாகக் கருதப்பட்டுள்ளது.

இந்நிலையில், எதிர்காலத்தில் புதிய அரசியலமைப்பு தொடர்பாக இலங்கை அரசாங்கம் கலந்துரையாடல்களை முன்னெடுத்தால், இந்த ஒருங்கிணைந்த அடிப்படை வரைபே தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசிய கட்சிகளின் கூட்டு நிலைப்பாடாக முன்வைக்கப்படும் எனவும் இந்த கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Share this article

More News