தோழர் ஐயா என அழைக்கப்படும் வேதநாயகம் பத்திமநாயகம் அவர்களின் 38 வருட நினைவு அஞ்சலி. 

இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை தொடர்ந்து , இந்திய அமைதிப்படை இலங்கையில் நிலை கொண்டிருந்த காலம். இந்திய இராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த காலம் ….

1988 ஏப்பில் மாதம் முதல் வாரத்தில்,

“கட்சி பணிகளுக்காக மன்னார் போகின்றேன் தோழர். புலிகளின் நடமாட்டம் குறைந்த செட்டிகுளம் பகுதியால் பேரூந்தில் மன்னார் போகப் போவதாக, வவுனியாவில், தனது தோழர்களிடம் கூறி சென்றார் ஐயா தோழர்.

அது அவரது நிரந்தர விடைபெறுதலாக இருக்கும் என்று நாம் எவரும் எண்ணி இருக்கவில்லை. ஏப்பிரல் மாதம் 6 ம் திகதி தோழர் ஐயாவை சகோதர இயக்க அமைப்பினர் செட்டிகுளத்தில் வைத்து கடத்தி விட்டார்கள் என்ற செய்தி ஈபிஆர்எல்எப் தோழர்களுக்கு கிடைத்த போது அனைவரும் பதபதைப்புக்கு உள்ளானார்கள். தோழர் ஐயாவை மீட்பதற்காக, தோழர் வெற்றி உட்பட பல முக்கிய ஈபிஆர்எல்எப் தோழர்கள் முயற்சித்த போது , விசாரிப்பதற்காக அடித்ததால் இறந்துவிட்டார் என்ற செய்தியை மட்டும் அவர்களால் பெறமுடிந்தது.

இளவாலை, யாழ்பாணத்தை பூர்வீகமாக கொண்ட ஐயா தோழரின் (பத்திமநாயகம் வேதநாயகம் ) தாய் தந்தை இருவரும், மலையகத்தில் நீண்ட காலமாக ஆசிரிய பணியாற்றியவர்கள். தோழர் ஐயா, கண்டிமாவட்டத்தில் உள்ள கலகாவில், 1950 ம் ஆண்டு மார்ச் மாதம் 31 ம் திகதி பிறந்தார்.

1956 தென்னிலங்கையில், தமிழ் மக்களுக்கு எதிரான, இன அழிப்பு நடவடிக்கைகளை அடுத்து, வேதநாயகம் குடும்பத்தினர் வவுனியாவுக்கு இடம் பெயர்ந்து குருமன்காடு பகுதியில் வசித்து வந்தனர். தோழர் ஐயாவும் தனது ஆரம்ப கல்வியை வவுனியாவிலேயே கற்றார்.

1977 ம் ஆண்டு, தென்னிலங்கையில் ஏற்பட்ட , தமிழ் மக்களுக்கு எதிரான இன ஓழிப்பு நடவடிக்கையை அடுத்து , பெருமளவு மலையக மக்கள், வவுனியாவுக்கு இடம் பெயர்ந்த போது, அவர்களை கன்னாட்டி பிரதேசத்தில் குடியேற்றுவதில், தோழர் ஐயா பிரதான பங்காற்றினார். அவருடன் மறைந்த ஈபிஆர்எல்எப் செயளாளர் நாயகம் தோழர் பத்மநாபா, தோழர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தோழர் குன்சி ஆகியோர் இணைந்து பணியாற்றினர். அப்போது , தமிழ் இளைஞர்களின் ஆயுத போராட்டம் முகிழ்கின்ற காலகட்டம். கன்னாட்டி பண்ணையில் , நிகழ்ந்த அரசியல் சித்தாந்த விவாதங்கள், தோழர் ஐயா அவர்கள், தன்னை முழுமையாக அரசியல் பணிக்கு ஒப்படைக்கும் சூழ்நிலையை உருவாக்கியது. இக்கால கட்டத்தில் தோழர் ஐயா, ஓர் மலையகத்தில் இருந்து இடம் பெயர்ந்த, வனராணி என்ற பெயரை உடைய பெண்ணை காதலித்து திருமணமும் செய்து கொண்டார்.

1978 ,ல் கன்னாட்டியை விவசாய பண்ணையை பொலிஸ் முற்றுகையிட்டு ஐயா தோழர், குன்சி தோழர் உட்பட 30 தோழர்கள் கைது செய்யப்பட்டு போகம்பரையில் சிறையில் 3 மாதம் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

தமிழர் விடுதலை கூட்டணியின் தலைமையை நிராகரித்து, தமிழ் இளைஞர்கள் ஆயுத போராட்டத்தை ஆரம்பித்த காலகட்டத்தில், தமிழ் இனவிடுதலையுடன், வர்கவிடுதலையையும் இணைத்து செயற்பட்ட முற்பட்ட ஈழ புரட்சி அமைப்புடன் ( ஈரோஸ்) ஆரம்பத்திலும் பின்னர் ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணியுடன் தன்னை இணைத்து கொண்ட தோழர் ஐயா, 1981 ம் ஆண்டு நடைபெற்ற ஈபிஆர்எல்எப் அமைப்பாளர் மாநாட்டில், ஈபிஆர்எல்எப் நிறுவன உறுப்பினர்களில் ஒருவராக கலந்து கொண்டார். வன்னி பிராந்தியம் தொடர்பான சகல நில அமைப்பு, மக்கள் பிரச்சனைகள் பற்றி அனைத்தும் அறிந்த தோழர் ஐயா, அந்த மாநாட்டில் ஈபிஆர்எல்எப் ன் வன்னி பிராந்திய

( வன்னி,மன்னார் , முல்லைதீவு மாவட்டங்கள்) பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

மன்னாரில் இருந்து பெரிய தம்பனை, கன்னாட்டி, பூவரசம் குளம், வவுனியா நகர், மாங்குளம், ஓமந்தை, கனகராயன் குளம், கறிப்பட்ட முறிப்பு, ஓட்டிசுட்டான், முள்ளியவளை, முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு என்று பரந்த தேசத்தில் காடு, கரம்பை, மேடு என்று எங்கும் பரவி இருந்த அரசியல் செயற்பாடுகளை தோழர் ஐயா முன்னெடுத்து இருந்தார்.

இந்தக் காலங்களில் தோழர் ஐயாவிடம் இருந்த ,உற்சாகம் அற்பணிப்பு தெளிந்த பார்வை, தலமைத்துவப் பண்பு பல புதிய தோழர்களை கட்சியின் பால் ஈர்த்தது.

1983 ம் ஆண்டுகளில், ஆயுதப் பயிற்சிக்கு என , வன்னி பிரதேசத்தில் இருந்து இளைஞர்களை தெரிவு செய்து இந்தியாவுக்கு அனுப்புவதில் தோழர் ஐயாவின் பங்களிப்பு முக்கியமானது ஆகும். 1984 ம் ஆண்டு, கும்பகோணத்தில் இடம் பெற்ற ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியன் முதலாவது காங்கிரஸ்சில் தோழர் ஐயா மத்திய கமிட்டி உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.

1984 இன் நடுப்பகுதியில், இந்தியா செல்வதறகாக தோழர் சுகுவுடன் மயிலிட்டி கடற்கரையில் தங்கியிருந்த வேளையில், தோழர் சுகுவும், ஐயா தோழரும் கைது செய்யப்பட்டு ஆரம்பத்தில் இராணுவ முகாமிலும், பின்னர் வெலிக்கடை சிறைசாலையிலும் விசாரனை கைதியாக தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

அங்கும் சக மனிதர்கள் மீதான பரிவு அக்கறை கரிசனை தூய்மையும் கடின உழைப்பும் அவரின் இரத்தத்தில் கலந்த உணர்வுகள். சிறையில் கழிப்பறையில் அதனை சுத்தபடுத்துவதில் மிகுந்த பிரயத்தனம் எடுத்து கொள்வார். அவர் வாழும் இடங்களில் எழிமையான நேர்த்தியை கொண்டு வருவார். இதனால் அங்கிருந்த சக தமிழ் அரசியல் கைதிகளான தோழர்கள் போராளிகள் பொது மனிதர்களின் பேரபிமானத்தை தோழர் ஐயா பெற்றிருந்தார். ஏறதாழ ஒருவருட சிறைவாசத்தின் பின்னர், அவர் மீதான குற்றச்சாட்டுகள் எதுவும் நிரூபிக்கப்படாத நிலையில் விடுதலை செய்யப்பட்டார்.

1986 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 13 ம் திகதி ஈபிஆர்எல்எவ் புலிகளினால் இராணுவ ரீதியில் தாக்கப்பட்டு தடை செய்யப்பட்ட போது மன்னார் பகுதியில் புலிகளின் பொறுப்பாளர் ராதாவினால்

தோழர் ஐயாவும் வேறு சில தோழர்களும் கைது செய்யப்பட்டு அடம்பன் என்ற பிரதேசத்தில் சிறை வைக்கப்பட்டிருந்தார்கள்.

அன்றைய காலகட்டத்தில் அடம்பன் பகுதி புலிகளின் செல்வாக்கு மிக்க பாதுகாப்பு வலயமாக இருந்த நிலையில் இரவு இரவாக கிராமங்களில் பொது இடங்களில் தொலைக்காட்சி பெட்டியில் புலிகள் இந்திய திரைப்படம் போட்டுக் காட்டுவது வழக்கம்

திரைப்படத்தை பார்த்து தன் நிலை மறந்து மக்களும், புலிகளும் இருக்க இலங்கை இராணுவம் அப்பகுதியை சுற்றி வளைத்து தாக்க தொடங்கியது. இராணுவ தாக்குதலை எதிர் கொள்ள முடியாமல் ,புலிகள் தப்பி ஓடிய போது, சிறையில் அடைக்கப்பட்டிருந்த தோழர் ஐயா தலைமையிலான மாற்று இயக்கப் போராளிகள், காயப்பட்ட புலிகளை தூக்கி கொண்டு, இலங்கை இராணுவத்தின் துப்பாக்கி சூடுகளுக்கு மத்தியில், காட்டுக்குள் ஓடி சென்று , புலிகளின் பொறுப்பாளர் ராதாவிடம் ஒப்படைத்தனர்.

புலிகளின் கைதிகளாக இருந்த தாம் தப்பி ஓடாமல் புலிப் போராளிகளை மனிதாபிமானத்துடன் காப்பாற்றியதை நேரில் கண்ட புலிகளின் அன்றைய மன்னார் தளபதி ராதா “நீங்கள் என்ன மனுஷர்களடா”’ என்று கூறி அனைவரையும் விடுதலை செய்தார்.

இச்சம்பவம், இலங்கை இராணுவமே எமது பொது எதிரி , சக போராட்ட இயக்கங்கள் அல்ல என்ற ஈபிஆர்எல்எப் ன் நிலைப்பாட்டை தெளிவாக எடுத்தியம்பி இருந்தது. இப்படியான வரலாற்று சம்பவங்கள் எல்லாம், தற்போது எம் மீது வசைபாடுகின்ற பலருக்கு தெரியாது.

ஈபிஆர்எல்எப் இயக்கம் , புலிகளால் தடை செய்யப்பட்டு தோழர்கள் படுகொலைசெய்யப்பட்டு முடக்கப்பட்டதன் பின்னரான நாட்களில், இலங்கையில் புலிகளால் தொடர்ந்து பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்ட நிலையில், தோழர் பத்மநாபாவின் அழைப்பின் பேரில், தமிழகம் சென்று , தோழர்களை பராமரிப்பதில், ராமநாதபுர மாவட்ட கடற்கரைகளில் மண்டபம்- ராமேஸ்வரம்- நாலுபனையடி- தங்கச்சி மடம் ஆத்தங்கரை -கீழக்கரை- உச்சிபுளி தஞ்சை மாவட்ட கும்பகோணம் என சிதறுண்டு வாழ்ந்த தோழர்களை ஒருங்கிணைப்பதில் தென்பூட்டுவதிலும் ஈடுபட்டார்.

இந்திய இலங்கை ஒப்பந்தம் ஏற்பட்ட பின்னர், தற்போதைய மன்னார் மாவட்ட ஈபிஆர்எல்எப் பொறுப்பாளர், குமரேஸ், தோழர் ஏஜிஏ உட்பட இருபது தோழர்களுக்கு தலைமை தாங்கி, படகில் இலங்கை வந்து , வவுனியாவில் அலுவலகம் அமைத்து , மீண்டும் கட்சி பணிகளை துரித கதியில் செயற்படும் வேளையிலேயே அவருக்கு அந்த துயர சம்பவம் இடம் பெற்றது.

புலிகளிடம் சிக்காமல், இருக்க பாதுகாப்பு பாதையை தெரிவு செய்து , செட்டி குளம் வழியாக செல்லும் போது இன்னொரு சக போராட்ட இயக்கம் ஒன்றினால் , தோழர் ஐயாவும், தோழர் சாரங்கனும் கைது செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

ஈழவிடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப கர்த்தாவான ஒருவருக்கு கிடைத்த அவலச்சாவு இதுவாகும்.

தோழர் பத்மநாபாவின் முதல் நிலைத் தலமைப் போராளியாகிய தோழர் ஐயா,

திருமணமான பின்பும், இரண்டு முறை இலங்கை சிறையிலும், ஒரு முறை புலிகளின் சிறையிலும் இருந்த போதிலும், சோர்வடையாமல் போராட்டத்தில் இணைந்திருந்தார். மன்னார் தொடக்கம் முல்லைத்தீவு வரைக்கும் மக்கள் படையைத் திரட்டிய முன்னணித் தோழன் ஐயா.

இன்று ஈபிஆர்எல்எப் இயக்கம் பல்வேறு அரசியல் கட்சிகளாக பிரிந்து நின்றாலும் அவர்கள் யாவரும் தோழர் ஐயாவினால் வளர்த்தெடுகப்பட்ட அரசியல்வாதிகளே.

ஈழவிடுதலை போராட்டத்தில், தோழர் ஐயாவின், பங்களிப்பு மறக்கவியலாதது.

அவரது நினைவுகளை சுமந்து, அவரது 38வது நினைவு தினத்தில், அவருக்கு ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி அஞ்சலி செலுத்துகின்றது.

Share this article

More News