வவுனியா வடக்கு வெடுக்குநாறிமலையில் விசேட பௌத்த வழிபாடுகள் நடைபெறவுள்ள நிலையில் ஆதி லிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்துக்கு எதிராக நெடுங்கேணி பொலிஸார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
வழக்கினை விசாரித்த , வ வுனியா நீதிமன்றம் , 1979 ஆண்டு இலக்கம் 15ம் குற்றவியல் நடவடிக்கை சட்டக் கோவை சட்டத்தின் 106 (1)இன் பிரகாரம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது .
அந்த நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
2026/09/12ஆம் திகதி நெடுங்கேணி பொலிஸ் பிரிவில் நைனாமடு காட்டுப் பகுதியில் அமைந்துள்ள புராதன பெறுமதி வாய்ந்த எச்சங்கள் கொண்ட பூமி பிரதேசத்தினுள் இந்து சமய வழிபாட்டாளர்கள் மூலமாகவும் மற்றும் பௌத்த மத வழிபாட்டாளர்கள் மூலமாகவும் சமய வழிபாடுகள் நடத்தப்படுவதாகவும் பூஜை நடவடிக்கைகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்து மத வழிபாட்டாளர்கள் மற்றும் பௌத்த மத வழிபாட்டாளர்கள் ஒரே திகதியில் ஒரே நேரத்தில் ஒரே பூமியில் தொல்பொருள் அமைந்துள்ள இடத்தில் சமய வழிபாடுகளில் ஈடுபடவிருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இக்காரணங்களை அடிப்படையாகக் கொண்டு இரு தரப்பினர்களுக்கும் பொது மக்களுக்கும் வன்முறைகள் மற்றும் முரண்பாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதுடன் இரு தரப்பினரின் சமய வழிபாடுகளுக்கும் இடையூறு ஏற்படவும் பிரதேசத்தில் சமாதான சீர்குலைவு ஏற்படவும் இவ்வாறாக இடப் பிரச்சினைகள் தொடர்ந்தும் ஏற்படுவதாலும் இத்தளத்தினை பிரதான மையமாகக் கொண்டு நாட்டுக்குள் இன மோதல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளமையினால் நெடுங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம், மேலதிக காரணங்கள் தொடர்பான விசாரணைக்கு இன்று 10ஆம் திகதி மாலை 3 மணிக்கு நீதிமன்றத்தில் தோன்றுமாறு ஆதி லிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொது மக்களுக்கும் வன்முறைகள் மற்றும் முரண்பாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதுடன் இரு தரப்பினரின் சமய வழிபாடுகளுக்கும் இடையூறு ஏற்படவும் பிரதேசத்தில் சமாதான சீர்குலைவு ஏற்பட வாய்புள்ளதாக நீதிமன்றத்துக்கு அறிக்கையிட்ட நெடுங்கேணி பொலிசார், அதே ஆலயத்தில் 12 ம் திகதி சனிக்கிழமை வழிபாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கும் வடக்கு மாகாண தலைமை பெளத்த சங்கம் பற்றி அறிக்கையிடாமல் இருப்பது , தேசிய மக்கள் சக்தி அரசும் பெளத்த மதம் சார்ந்த அரசாகவே இருக்கின்றது என வவுனியா பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.







