
பல்லாண்டு காலமாக அல்லல்பட்டு வாழ்ந்து வந்த பனைத் தொழில் வல்லுனர்களின் வாழ்வும் அவர்கள் சார்ந்த சமூக ஏற்றத்தாழ்வும் அப்போது நடைமுறையில் இருந்த மரவரி முறையின் கீழ் சீர் கேட்டு இருந்த காலம் அது…..
கள் உற்பத்தி என்பது பனம் பொருள் உற்பத்திகளில் மிகவும் கடினமான ஆபத்தான ஒரு தொழில் முறையாகும். கடற்தொழிலிலும் பார்க்க ஆபத்தான ஒன்றாகும். இதனால் இன்றும் இதை ஒரு குறிப்பிட்ட சமூக மக்கள் மட்டும், பனை மரங்களில் ஏறித் தமது அனுபவம், பயிற்சி, தொழில்நுட்பம் என்பவற்றின் ஊடாக உற்பத்தியை மேற்கொண்டு வருகின்றனர்.
இத்தொழில் சார் மக்களை சமூகத்தில் அந்தஸ்து குறைந்தவர்களாகவும், பொது இடங்களில் அவர்களுக்கான மனித உரிமைகள் மறுக்கப்பட்டும், பொருளாதார கல்வி கலாச்சாரத்தில் மேம்பட முடியாதவர்களாகவும் வாழவேண்டிய இழிநிலை அன்றிருந்தது.
குறிப்பாக பனை வளரும் நிலங்களை சொந்தமாகக் கொண்ட உயர்சாதி நில உடமையாளர்கள் , இம்மக்களை உழைப்பு சுரண்டலுக்கு உள்ளாக்கி அடிமைகளாக அவர்களை வைத்திருந்தனர்.
1970 ஆம் ஆண்டில் , ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கா தலைமையில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி, இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்த பின்னர், பனை தொழில் வல்லுனர்களின் வாழ்கையில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டது.
சமசமாசக் கட்சியின் தலைவரான கலாநிதி என் எம் பெரேரா அவர்கள் நிதி அமைச்சர் ஆக பதவி வகித்தார். அக்
காலகட்டத்தில் சமசமாசக் கட்சியின் யாழ்மாவட்டத் தலைவராக திரு விஸ்வநாதன் இருந்தார். அவரது விருப்பத்திற்குரிய மாணவரும், அன்று ஆங்கில ஆசிரியாகவும் இருந்த கணபதி.நடராசா அவர்கள், திரு விஸ்வநாதன் அவர்களை சந்தித்து நீண்டகாலமாக நிலவுகின்ற பனை தொழில் வல்லுனர்களின் பிரச்சனைகளை எடுத்துரைத்து, அதன் நிமித்தம் நிதி அமைச்சர் கலாநிதி என் எம் பெரேரா அவர்களுடன் ஏற்படுத்திய சந்திப்புகள் எதிர்பார்த்ததற்கு மேலாக பெரும் நன்மைகளை அந்தச் சமூகத்துக்கு தேடித் தந்தது.
1972 ம் வருடம் நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட அறிக்கையின் போது, “எதிர்வரும் 1972 ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் தேதியான சர்வதேச தொழிலாளர் தினமான மே தினத்திலிருந்து, கள் உற்பத்தி, விற்பனை மற்றும் அவை தொடர்பான சகல நிர்வாகங்களும், பனைத்தொழில் வல்லுநர்களைக் கொண்ட கூட்டுறவு முறையின் கீழ் மட்டும் நடைபெறும்” என்று நிதி அமைச்சர் கலாநிதி என். எம் . பெரேரா அவர்கள் சரித்திர பிரசித்தி பெற்ற அறிவிப்பை வெளியிட்டார்.
சகல ஊடகங்களும் இச்செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டன. ஆனால் யாழ் குடாநாட்டில் இருந்த நிலவுடமையாளர்கள் இவ்வறிவிப்பினால் அதிர்ச்சியில் அதிர்ந்ததோடு குழப்பம் விளைவிக்க கூட்டம் கூட்டினர். பலர் சாதகமாகவும் சிலர் பாதகமாகவும் கருத்துக்களை வெளியிட்டனர்.
இந்த புரட்சிகரமான மாற்றத்துக்கு எதிராக பல கோணங்களில் இருந்தும் எழுந்த எதிர்ப்புகள் யாழ் மாவட்டத்தையே உலுக்கின. இக்கூட்டுறவு எப்படிப்பட்டது என்பதைப் பற்றி யாருமே சிந்திக்கவும் இல்லை , ஆராய முயலவும் இல்லை. தவறணை என்றால் ‘ஒரு முதலாளியின் கீழ் பல தொழிலாளிகள் சேர்ந்து கள்ளிறக்க வேண்டும்’ என்பது போல்தான் பெரும்பாலானோரின் எண்ணம் அன்றிருந்தது. ஒரு சிலர் இதற்கு மேல் ஒரு படி போய் ஆறு ஏழுபேர் சேர்ந்து ஒரு சங்கத்தை அமைத்து அச்சங்கத்தின் மூலம் ஒரு தவறணை எடுத்து நூற்றுக்கணக்கான பனைத் தொழில் வல்லுனர்களை வைத்து கள்ளிறக்கி விற்பது என்றும் தமது போக்கில் நினைத்தனர். அவ்வாறே பிரச்சாரமும் செய்தனர் .
உண்மையில் அப்போது இத்திட்டத்தைப் பற்றி யாருமே சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்றே சொல்லவேண்டும்.
இதற்கு காரணம் கூட்டுறவுத் துறையில் இச்சமூகத்தவர்களுக்கு அக்காலத்தில் பங்கு இல்லாமையும், கூடி வாழும் உரிமை மறுக்கப்பட்டமையும்தான்.
1.பனைத் தொழில் வல்லுனர்களின் கைகளில் அதிகாரம் இருக்க வேண்டும்.
2. வேலை வாய்ப்புகளில் பெரும்பகுதி பனைத்தொழில் வல்லுனர் சமூகத்திற்கு கிடைக்க வேண்டும்.
3. இச்சங்கங்களை நிதி அமைச்சரின் அனுமதியுடன் கூட்டுறவு முறையில் இயக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்ட மூன்று கோரிக்கைகளுக்கும் நூற்றுக்கு நூறு வீதம் சாதகமான பதில் நிதி அமைச்சர் அவர்களிடம் இருந்து கிடைத்தது.
இதன்படி ஒரு சில வாரங்களுக்குள் யாழ்ப்பாணம் கச்சேரியில் கடமையாற்றிய திரு கே. சண்முகலிங்கம் அவர்கள் பனம் பொருள்களுக்கான கூட்டுறவு உதவி ஆணையாளராக நியமிக்கப்பட்டார். அடுத்த நடவடிக்கையாக உபவிதி தயாரிப்பதற்கு என குழு ஒன்று அமைக்கப்பட்டது இக்குழுவின் செயலாளராக ஆசிரியர் திரு கணபதி நடராஜா அவர்களே தெரிவு செய்யப்பட்டிருந்தார். அப்போது இருந்த விவரம் தெரிந்த சில அங்கத்தவர்களை ஒன்று கூட்டி சங்கத்தின் நடைமுறை உபவிதிகளை தயாரிக்கப்பட்டது.
அவர்கள் உருவாக்கிய உபவிதிகளின்படி தெரிவு செய்யப்பட்டு அங்கத்தவர்கள் ஒன்பது பேரும், நியமன அங்கத்தவர்கள் மூவரும் நிர்வாக சபையினராக தெரிவாகினர். பனை தொழில் கூட்டுறவு சங்கங்களின், அதிகாரம் பனைத் தொழில் வல்லுனர்கள் கைகளிலே இருக்கும் வகையில் உபவிதிகளை அமைப்பதில் கவனமாக இருந்தார்கள்.
இதன் மூலம் வடபகுதியில் கூட்டுறவு தவறணை முறை இருக்குமானால் வடமாகாணம் முழுவதிலும் அவ்வாறே செயற்படும் என்று பிரகடனம் செய்யப்பட்டது. இதன் மூலம் 200 தவறணைகள் திறக்கப்பட்டு 450 பேர் முகாமையாளர்கள், கணக்காளர்கள் இலிகிதர்கள் விற்பனையாளர்கள் ஆகிய பதவிகளுக்கு நியமிக்கப்பட்டனர்.
ஆனால் இச்சங்கங்கள் ஆரம்பித்த ஒரு சில மாதங்களுக்குள்ளேயே இச்சமூகத்தின் எதிரிகள் அவர்களுக்கு பல சிக்கல்களை ஏற்படுத்தினார்கள். சில இடங்களில் மரவரி முறையின் கீழ் பல நன்மைகளை அனுபவித்த , சாதிமான்களான ஒரு சில நிலவுடமையாளர்கள் திட்டமிட்டு சதி செய்து அப்பாவி தொழிலாளர்களை பயன்படுத்தி தரமற்ற கலப்படம் செய்த கள்ளை தவறணைகளுக்கு வழங்க செய்தார்கள். வேறு சில இடங்களில் தவறணைகள் தோறும் பெரும் கலகங்கள் மூண்டன. பல தவறணைகள் தீக்கிரையாக்கப்பட்டன. சில இடங்களில் உடைத்தும் களவாடப்பட்டன. பொதுவாக சகல இடங்களிலும் நாளாந்தம் பொலிசாருக்கு வேலை இருந்தே வந்தது. இவை அனைத்தையும் தமது ஒற்றுமையின் பலத்தால் பனைத் தொழிலாளர்கள் முறியடித்தனர்.
ஆனாலும் 1972 க்கு பின்னர் சில சங்கங்கள் இயங்க முடியாத நிலையை அடைந்தன. நிதி நிலைமை மிகவும் மோசமாகியது அங்கத்தவர்களுக்கு கள் கொள்வனவு பணம் கொடுக்க முடியாத நிலை கூட உருவாகியது. இறுதியில் அங்கத்தவர்களுக்கு முழு பணத்தையும் கொடுக்காமல் ஒரு பகுதியை மட்டும் கொடுத்து எஞ்சியதை கணக்கில் வைப்பதென்றும் முடிவு செய்யப்பட்டது. இப்படிச் செய்யப்பட்டும் கூட ஒரு சில சங்கங்களால் தொடர்ந்தும் நல்ல நிலையில் இயங்க முடியாமல் போகவே, நாளடைவில் அருகே உள்ள இரண்டு சங்கங்களை ஒன்றாக இணைத்து பலம் வாய்ந்த பத்தொன்பது பெரிய சங்கங்கள் உருவாக்கப்பட்டன. இதன் பின்னர் இச்சங்கங்கள் வெற்றியுடன் செயல்பட தொடங்கின.
இக்காலகட்டத்தில் உலக சந்தையிலே சீனியின் விலையானது பெருமளவுக்கு உயர்ந்த காரணத்தினால் நாடு முழுவதும் சீனி தட்டுப்பாடு ஏற்பட்டது. அன்றைய பிரதமராக இருந்த திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா அவர்களால் உள்ளூர் சீனி உற்பத்திக்கு அல்லது சீனிக்கு பிரதியீடான பொருட்களின் உற்பத்திக்கு ஊக்குமளிக்குமாறு அறிவிப்பு விடப்பட்டது. இதனை வாய்ப்பாக பயன்படுத்தி பனை வெல்ல தொழிற்சாலைகள் அமைக்கும் வேலைகள் ஆரம்பமாகின. உற்பத்திக்கான அதிகாரமும் முழுமையாகப் பெறப்பட்டதோடு இவற்றை அமைக்கும் வேலைகளை கவனிக்கும் முக்கியமான பொறுப்பு சங்கங்களிடமே ஒப்படைக்கப்பட்டது.
இந்த சந்தர்ப்பத்தில் ‘கள் உற்பத்தி விற்பனவுச் சங்கங்கள்’ என்ற ஒரு நோக்கோடு இருந்த சங்கங்களை பல நோக்கங்களைக் கொண்ட ‘தெங்கு பனம் பொருள் உற்பத்தி விற்பனை கூட்டுறவு சங்கம்’ என பெயர் மாற்றிக் கொண்டார்கள். அத்தோடு பனைவெல்லம், பனஞ்சீனி, வினாகிரி, சாராயம், போன்ற மற்றைய உற்பத்திகளை மேற்கொள்வதற்கும் முனைந்தார்கள். அப்போது இப்பணிகளில் அவர்களுக்கு இருந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்காக யாழ் கச்சேரியில் மாபெரும் கருத்தரங்கொன்றை ஒழுங்கு செய்தார்கள். ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ரொனி டி மெல் அவர்கள் கருத்தரங்குக்கு விசேடமாக அழைக்கப்பட்டார். வானொலியும், பத்திரிகைகளும், இக்கருத்தரங்குக்கு முக்கியத்துவம் கொடுத்தன மாகாணத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களும், விசேடமாக அழைக்கப்பட்டிருந்தனர். யாழ் பல்கலைக்கழக உபவேந்தரும் அபிவிருத்தியுடன் தொடர்பான சகல அதிகாரிகளும் அழைக்கப்பட்டிருந்தனர்.
கள்ளின் தேக்கத்தை குறைக்க எடுத்த முயற்சியில் இத்தொழில் திட்டம் சங்கானை பலநோக்கு கூட்டுறவு சங்க கட்டிடத்தில் 1974 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு சங்கானை கூட்டுறவு சங்கத்தின் உற்பத்தி உத்தியோகத்தர் திரு இ. ரவுடேந்திரன் அவர்களால் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டதுடன் பலருக்கு தொழில்சார் பயிற்சி கூடமாகவும் அமைந்திருந்தது. இருப்பினும் இதனூடாக உற்பத்தி முழுவதையும் பராமரிக்கும் வசதியும் விற்பனைக்கான சந்தை வாய்ப்பும் களஞ்சிய வசதியும் குறைவாகவே இருந்தன. இதனால் இத்தொழில் திட்டத்தை சங்கங்களின் மட்டத்தில் பிராந்திய ரீதியாக நகர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் எல்லா சங்கங்களுமே தமக்கு என போத்தலில் கள்ளடைக்கும் தொழில் கூடத்தை நிறுவி இன்றும் பயன் பெற்றுக் கொண்டு வருகின்றன.
சங்கங்களுக்கு ஆரம்ப காலத்தில் மிக முக்கியமான பிரச்சினையாக இருந்தது ‘அகற்றுக்கள்ளாகும்’. நாளந்தம் ஒவ்வொரு தவறனையிலும் பெருமளவு கள் விற்பனையாகாமல் வீணாக ஊற்ற வேண்டியிருந்தது. இதை தடுப்பதற்கு கள்ளில் இருந்து சாராயம் வடிக்கும் பனஞ் சாராய வடிசாலைகள் பலவற்றை நிறுவ வேண்டும் என்ற கோரிக்கை சங்கங்களால் முன்வைக்கப்பட்டது. அவர்களது கோரிக்கைக்கு செவிமடுத்த அரசாங்கம் அரச வடிசாலை கூட்டு தாபனத்தின் அனுசரணையுடன் வடிசாலை ஒன்றை நிறுவுவதற்கு அனுமதி அளித்தது. அதை நிறுவதற்கான இடத்தை தேர்ந்தெடுத்து கட்டிடத்தையும் அமைக்கும் பொறுப்பு கணபதி நடராசா அவர்களிடமே விடப்பட்டது.
போக்குவரத்து வசதி; மின்சாரம் போன்ற பல்வேறு முக்கிய காரணிகளை கவனத்தில் கொண்டு கைதடியில் கண்டி வீதியில் அமைந்த இடத்தில் [ தற்போதைய வடக்கு மாகாணசபை கட்டிடம் அருகில்] வடிசாலை கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.
வடிசாலை கூட்டுத் தாபனத்தினர் ஒரு சில தினங்களுக்குள் வடிசாலைக்கு தேவையான இயந்திரங்களை பொருத்தி முடித்தனர். அமைச்சர் கலாநிதி என். எம். பெரேரா அவர்களால் வடிசாலை திறந்து வைக்கப்பட்டது. அன்று இந்த வடி சாலையை அமைப்பதில் அவர்கள் தோல்வி கண்டிருந்தால் வேறு எந்த வடி சாலையும் வட பகுதியில்
அமைக்க முடியாமல் போயிருந்திருக்கும். ஏனெனில் தென்னிலங்கையில் இருந்து அமைச்சரின் அங்கீகாரத்துக்கு எதிராக பல கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு இருந்தன. இது சங்கங்களுக்கும் சமூகத்துக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.
அன்று நல்ல முறையில் இயங்கி வருடாந்தம் பல லட்சம் ரூபாய்களை நிகர லாபமாக பெற்றிருந்த இந்த வடி சாலையே உலகில் உள்ள ஒரே ஒரு பனஞ்சாராயவடிசலையாக கருதப்பட்டது. இந்தியாவில் கூட இப்படி ஒன்றை உருவாக்க இன்னும் முடியவில்லை. அதுமட்டுமில்லாமல் ஏனைய சாராயங்களை விட பனஞ் சாராயம் மிகவும் சிறந்ததாக கருதப்படுகிறது. அவர்களது சாதனையைக் கண்டு மிரண்டு போன சிலர் இத்திறப்பு விழாவில் அமைச்சர நோக்கி கேள்வி எழுப்பினர் உலகில் உள்ள சிறந்த கல்விமான்கள் ஒருவராக கருதப்பட்ட கலாநிதி என்.எம் பெரேரா அவர்கள் ஆங்கிலத்தில் கூறிய வார்த்தைகள் யாழ் சாதிமான்களுக்கு பேரடியாக அமைந்தது.
அவர் கூறிய வார்த்தைகள் இதுதான்…
“Yes, you say that you are against alcohol, but you look to be drunk. I know that the Jaffna man drinks alcohol behind Almyrah but not under the Palmyrah”
இது மிகப்பெரிய நகைச்சுவையாக தமிழர்கள் மத்தியில் இந்த வசனம் அன்று நிலவியது ஏன் என்பதை புரிந்து கொள்வீர்கள்.
1977இல் நடந்த தேர்தலில் எதிர்க்கட்சியாக தமிழர் விடுதலைக்கூட்டணி வந்த பின் 1978ல் ஏற்பட்ட இனக் கலவரமும் அரசாங்க மாற்றமும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட சாதகமற்ற சில சூழ்நிலைகளும், சங்கங்களை மிகவும் பாதிக்க தொடங்கின. இதனால் பல சங்கங்கள் நிலை தழும்பத் தொடங்கின. ஆங்காங்கே பல நிர்வாக சிக்கல்கள் தோன்ற தொடங்கின. தகுதியான உதவி ஆணையாளரும் உத்தியோகத்தர்களும் இன்றி சங்கங்கள் தவித்தன. இதன் காரணமாக புதிய நிதி அமைச்சரை மீண்டும் சந்திக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. புதிய அரசாங்கத்தில் ரொனி டி மெல் அவர்கள் நிதி அமைச்சராகி இருந்தார்.
இந்த நிலையை சங்கங்களின் சமாசத்தினர் பயன்படுத்தி புதிய அரசாங்கத்தின் நிதி அமைச்சரைச் சந்தித்து தமது பிரச்சினைகளை எடுத்துக் கூறினர். இந்தச் சந்திப்பில் அன்று யாழ் கச்சேரியில்ல் நடந்த முன்னைய சம்பவத்தை அவர்கள் நினைவு படுத்த அவரும் அவர்களுடன் சிரித்து மகிழ்ந்து அதை நினைவு படுத்திக் கொண்டார்.
இச்சந்திப்பில் பிரதானமாக கள்ளிற்கான கலால் வரியைப் பற்றி ஆராயப்பட்டது. சங்கங்களின் கஷ்டங்களை நன்கு அறிந்த நிதியமைச்சர் தென்னங்கள்ளுக்கு 15 சதவீதமும் பனங்கள்ளுக்கு 10 சதவீதமும் ஒரு போத்தலுக்கு வரியாக [BTT] அறவிடுவதாக உறுதியளித்தார். வரிக்குறைப்பு சம்பந்தமாக கலந்துரையாடிய போது சமாசத்தினர் இலங்கையில் தென்னைக்கு அபிவிருத்தி சபை இருப்பது போல் தமது பிரதான மூலவளமான பனைக்கும் ‘பனம் பொருள் அபிவிருத்தி சபை’ ஒன்றை நிறுவ வேண்டியதன் அவசியம் பற்றி வலியுறுத்தினர். சந்தர்ப்பத்தை அவர்கள் நன்கு பயன்படுத்திக் கொண்டனர் என்றே சொல்ல வேண்டும்.
பனம் பொருள் அபிவிருத்திச் சபையின் தோற்றம் ….
அடுத்த பகுதியில் தொடரும்.
–கற்பகன்






