
மாகாண சபைத் தேர்தலை தொடர்ந்து ஒத்திவைத்து, மாகாண சபை முறைமையையே இல்லாதொழிக்கும் நோக்கில் தற்போதைய அரசு செயல்படுகிறது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதாக தொடர்ந்து கூறிவரும் நிலையில், எந்த அரசுப் பதவியும் இல்லாத ஒருவரால் தேர்தல் 2027 ஆம் ஆண்டில்தான் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்தார்.
மாகாண சபைத் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதி வேறு தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டிருந்தால், அது நாடாளுமன்றத்தில் வெளிப்படையாக அறிவிக்கப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக கடந்த சில மாதங்களாக நாடாளுமன்ற விசேட குழு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் சூழலில், தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் தேர்தலை தாமதப்படுத்தும் முயற்சியை வெளிப்படுத்துவதாகவும் தெரிவித்தார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
முழு நாட்டிலும் தேர்தலை நடத்த முடியாவிட்டாலும், வடக்கு மற்றும் கிழக்கில் மட்டும் தேர்தலை நடத்துவதற்கு பெரிய நிதி தேவைப்படாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதாக கூறும் தேசிய மக்கள் சக்தி அரசு, வடக்கு மக்களின் அன்றாட பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்வு வழங்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்தை சர்வதேச தரத்திற்கு மேம்படுத்தினால், அது வடக்கு பகுதியின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், வடக்கு மாகாண அபிவிருத்திக்காக தற்போதைய அரசு என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளது என கேள்வி எழுப்பிய அவர், மாகாண சபைகளை செயல்படுத்துவதன் மூலம் மாகாண அரசுகள் தாமாகவே பல அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க முடியும் என்றும் கூறினார்.







