புலிகளின் பணத்தை வளைத்துப் போட்ட ராஜபக்சர்கள்! சரத் பொன்சேகா அதிரடியாக தெரிவிப்பு…!

தென்னிலங்கை ஊடக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஃபீல்ட் மார்ஷல் சரத் ஃபொன்சேகா, வி*டுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேச வலையமைப்பை வழிநடத்திய ‘கே.பி.’ என அழைக்கப்படும் குமரன்பத்மநாதன் கைது செய்யப்பட்ட பிறகு, அந்த அமைப்பிற்குச் சொந்தமான சர்வதேசப் பணம் மற்றும் சொகுசுக் கப்பல்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்துப் பல மர்மங்கள் நீடித்து வருவதாகக் குறிப்பிட்டார்.

குறிப்பாக, பு*லிகள் அமைப்பின் அந்தப் பணத்தைப் பயன்படுத்தி மலேசியா போன்ற வெளிநாடுகளில் சொகுசு வணிகங்களைத் தொடங்க ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டார்கள் என்ற பலத்த குற்றச்சாட்டு இன்றும் தொடர்வதாக அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், முன்னாள் உளவுத்துறைத் தலைவர் சுரேஷ் சலே மேற்கொண்ட சர்ச்சைக்குரிய நடவடிக்கைகள் அனைத்தும் முற்றிலும் ராஜபக்சர்களின் அரசியல் நலன்களுக்காகவே மேற்கொள்ளப்பட்டன என்பது ஆதாரங்களுடன் தெரியவந்துள்ளதாகவும், இதன் உண்மையான சூத்திரதாரியும் திட்டமிடுபவரும் அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவே என்றும் பொன்சேகா பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.

யுத்த காலத்தில் இராணுவப் புலனாய்வுத் துறை மிகவும் பலவீனமாக இருந்ததுடன், பாதுகாப்புச் சபைக்குத் தவறான தரவுகளைச் சமர்ப்பித்ததாகக் கூறிய பொன்சேகா, “புலனாய்வுத் துறை ஒன்பதாயிரம் வி*டுதலைப் பு*லிகள் உறுப்பினர்கள் மட்டுமே இருப்பதாகப் பொய்யான அறிக்கைகளை வழங்கியபோதிலும், எனது போர்க்கள ஆய்வுகளின்படி அந்த எண்ணிக்கை முப்பதாயிரத்திற்கும் அதிகமாகும்.

ஹெண்டவிதாரன மற்றும் சுரேஷ் சலே போன்ற அதிகாரிகள் நான்காவது ஈழப் போருக்கு எந்தவொரு உண்மையான பங்களிப்பையும் செய்யவில்லை. அவர்கள் கோட்டாபயவின் அரசியல் நலன்களை நிறைவேற்றவே வேலை செய்தார்கள்” எனச் சாடினார்.

இறுதியாக, “நாட்டை அழித்த மகிந்த, கோட்டாபய மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தங்களின் பழைய ஊழல் கர்மவினைக்கு ஏற்ப தர்மத்தின் வேதனையான தண்டனையை அனுபவிக்கும் நேரம் வந்துவிட்டது” எனச் சரத் பொன்சேகா உருக்கமாகத் தனது உரையை நிறைவு செய்தார்.

Share this article

More News