பலாலியில் இடம்பெற்ற காணி விடுவிப்புப் போராட்டத்தின் காரணமாக இடையூறு ஏற்பட்டதாகத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக பொலிஸாரால் மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பலாலி உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் உள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்குமாறு கோரி போராட்டம் ஒன்று இடம்பெற்றது. பலாலி மீள்குடியேற்ற அமைப்பின் தலைவர் அன்டன் சுதாகர் உள்ளிட்டோரின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தின் போது பலாலி பிரதான வீதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதாக பொலிஸார் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.
இதையடுத்து சந்தேகநபர்களை எதிர்வரும் 22ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. பொறுப்பதிகாரி மற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.







