சவூதி அரேபியாவில் கடந்த வியாழக்கிழமையன்று நடாத்தப்பட்ட ஏவுகணை அல்லது ட்ரோன் தாக்ககுதலில் ஒரு முக்கிய எண்ணெய் குழாய் கட்டமைப்பு தேமடைந்துள்ளதாக அமெரிக்க செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் சவூதி அரேபியாவின் எரிசக்தி அமைச்சகம் வெள்ளிக்கிழமையன்று தனது இணையதளத்தில் வெளியிட்ட அறிக்கையில், அக்குழாய் கட்டமைப்பு தாக்கப்பட்டதாகவும், அதனைத்தொடர்ந்து “முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அது மூடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
ஆரம்பகட்ட ஆய்வில், குழாய் கட்டமைப்புக்கு அருகில் அமைந்துள்ள பம்ப் நிலையங்கள் (எண்ணெய் உந்து நிலையங்கள்) தாக்கப்பட்டிருப்பது தெரியவந்ததாக அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறினார். வெள்ளிக்கிழமையன்று எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படம் ஒன்றில், ஒரு பம்ப் நிலையத்தில் தீயினால் ஏற்பட்ட பெரும் சேதம் தெரிவது போல் உள்ளது; அதேவேளையில், வியாழக்கிழமையன்று எடுக்கப்பட்ட மற்றொரு பம்ப் நிலையத்தின் படத்தில், அடர்த்தியான கரும்புகை எழும்பி வரும் சிறிய அளவிலான தீ விபத்து காணப்பட்டது.
இத்தாக்குதல்களுக்கு யார் பொறுப்பு என்பது அல்லது குழாய் கட்டமைப்பின் பகுதிகள் ஏதேனும் சேதமடைந்தனவா என்பது உடனடியாகத் தெரியவில்லை; இருப்பினும், ஈராக்கிலிருந்து ஏவப்பட்ட ட்ரோன்கள் மூலம் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பின்னர் சவூதி வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில், “ஈராக்கிலிருந்து வந்த பல ட்ரோன்கள் மூலம் ரியாத் மற்றும் மதீனா பிராந்தியங்களில் உள்ள கிழக்கு-மேற்கு குழாய் வழித்தடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை” கண்டித்திருந்தது. இத்தாக்குதலால் காயங்களும் சில சேதங்களும் ஏற்பட்டுள்ளதாகவும், அவை தற்போது சரிசெய்யப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பி;டப் பட்டுள்ளது.
சவூதி அரேபியா மற்றும் அண்டை நாடுகளுக்கு எதிராக ஈராக் மண்ணிலிருந்து தொடுக்கப்படும் தாக்குதல்களைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க “சகோதர ஈராக் அரசாங்கத்திற்கு”,வாய்ப்பளிக்குமாறு ஈராக் பிரதமர் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், ஈராக் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் விதமாக, இந்த நிலையில் இத்தாக்குமலுக்கு பதிலடி வேண்டாம் என சவூதி அரேபியா முடிவு செய்துள்ளதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
ஈரான் தொடர்பான மோதல்கள் தொடரும் நிலையில், சவூதி அரேபியாவின் எண்ணெய் வளங்கள் மற்றும் அவற்றை ஏற்றுமதி செய்யும் திறன் ஆகியவை அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி வருகின்றன என்பதை இத்தாக்குதல் உணர்த்துகிறது. இப்பிராந்தியத்தில் எரிசக்தி போக்குவரத்திற்கு மேலும் அச்சுறுத்தலாக அமையக்கூடிய ஏமனின் முக்கிய செங்கடல் துறைமுக நகரத்தை, ஈரானுடன் தொடர்புடைய ஆயுதக் குழு ஒன்று கைப்பற்றிய சில நாட்களிலேயே இந்தக் குழாய் வழித்தடத் தாக்குதல்கள் நடந்துள்ளன.







