ஒரே நாளில் ஜனாதிபதியைச் சந்தித்த சீன – அமெரிக்கத் தூதுவர்கள் : உத்தியோகபூர்வ அறிவிப்பைத் தவிர்த்த ஜனாதிபதி செயலகம்

மத்திய கிழக்குப் போர்ச் சூழலைத் தொடர்ந்து கொழும்புத் துறைமுகம் தொடர்பில் அமெரிக்க உயர்மட்டத் தரப்பினர் விசேட கவனம் செலுத்தி வரும் பின்னணியில், ஒரே நாளில் சீன மற்றும் அமெரிக்கத் தூதுவர்கள் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவைச் சந்தித்திருந்தனர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நெருங்கிய சகாவும், மத்திய மற்றும் தெற்காசியப் பிராந்தியத்திற்குப் பொறுப்பான பிரதி இராஜாங்கச் செயலாளருமான செர்ஜியோ கோர், அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்தபோது ஜனாதிபதியைச் சந்தித்த பின்னர், நேரடியாக கொழும்புத் துறைமுகத்திற்குச் சென்று இந்து சமுத்திரப் பிராந்தியத்தைக் கண்காணித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, கொழும்புத் துறைமுகத்தை டிஜிட்டல்மயமாக்குவதற்காக 17 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான நிதியினை நன்கொடையாக வழங்க அமெரிக்கா தயாராக உள்ளதாகப் புதிய அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர் அறிவித்திருந்தார்.

 

தூதுவர் எரிக் மேயரின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, இத்திட்டம் தொடர்பில் சில சிக்கலான நிலைமைகள் உருவாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, நிதி அமைச்சின் உரிய நடைமுறைகள் மற்றும் பெறுகைச் செயற்பாடுகளைப் பின்பற்றியே இத்திட்டம் அமெரிக்காவுக்கு வழங்கப்பட்டதா என்ற பாரதூரமான கேள்வி எழுந்துள்ளது. கொழும்புத் துறைமுகத்தின் ஒரு முனையத்தை இந்தியாவும், மற்றொரு முனையத்தைச் சீனாவும் நிர்வகித்து வரும் நிலையிலும், கிழக்கு முனையத்தைத் தனியார் மயப்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தைகள் அரசாங்கத்திற்குள் ஆரம்பிக்கப்பட்டுள்ள சூழலிலும், முழுத் துறைமுகக் கட்டமைப்பையும் டிஜிட்டல்மயமாக்கும் நிதியுதவியை அமெரிக்கா வழங்க முன்வந்துள்ளமை பல தரப்பினரிடையே கேள்விகளை எழுப்பியுள்ளது.

 

இவ்வாறானதொரு சூழ்நிலையில், கடந்த புதன்கிழமை (நவம்பர் 18) ஜனாதிபதி செயலகத்தில் இரண்டு விசேட சந்திப்புகள் இடம்பெற்றுள்ளன. அன்றைய தினம் முற்பகல், இலங்கைக்கான புதிய சீனத் தூதுவர் வெய் {ஹவாஷியாங் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவைச் சந்தித்துள்ளார். இருதரப்பு உறவுகள் மற்றும் நடைமுறை ரீதியான ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இதன்போது ஆழமாகக் கலந்துரையாடப்பட்டதாகச் சீனத் தூதரகம் அன்று பிற்பகல் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

 

அதே தினம் பிற்பகல், புதிய அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயரும் திடீரென ஜனாதிபதி செயலகத்திற்குச் சென்று ஜனாதிபதியைச் சந்தித்துள்ளார். இணைய குற்றங்கள், அமெரிக்கத் தொழில்நுட்பப் பரிமாற்றம், டிஜிட்டல் பொருளாதாரம், பிரஜைகளின் பாதுகாப்பு மற்றும் வர்த்தகப் பாதைகளின் பாதுகாப்பு ஆகியவை குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதாக எரிக் மேயர் தனது ‘எக்ஸ்’ தளத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டதன் மூலமே இச்சந்திப்பு குறித்த தகவல் வெளியானது.

 

கொழும்புத் துறைமுக முதலீடுகள் சார்ந்து பல கேள்விகள் எழுந்துள்ள நிலையில், சீன இணைய ஊடுருவல்காரர்களிடமிருந்து ஏற்படும் இணைய தாக்குதல்களைத் தடுப்பதற்காக அமெரிக்காவின் எப்.பி.ஐ. உளவு பிரிவைச் சேர்ந்த இரண்டு விசேட அணிகள் இலங்கைக்கு வருகை தந்து செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளன. இதில் ஒரு அணி கணினித் தரவு நிபுணர்களையும், மற்றைய அணி விசாரணை அதிகாரிகளையும் உள்ளடக்கியுள்ளது. கொழும்புத் துறைமுக நகர முதலீடுகளின் போர்வையில் சீனக் குழுக்களால் முன்னெடுக்கப்படுவதாகக் கூறப்படும் சைபர் மோசடிகளைத் தடுப்பதே இவர்களின் பிரதான இலக்காகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share this article

More News