
யாழ்.கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபை முன்பாக, வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சுகயீன விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் தொடர்பில் விரும்பத்தகாத கருத்துக்களை தெரிவித்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு மாகாண பிரதம செயலர் தலைமையில் கடந்த ஜூலை மாதம் 07 ஆம் திகதி இடம்பெற்ற துறைசார் மீளாய்வு கூட்டத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தரக்குறைவாக பேசிமைக்கு எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்தே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகிறது.
விரும்பத்தகாத கருத்து
வடக்கில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் தொடர்பில், வடக்கில் முக்கிய பொறுப்புக்களில் உள்ள அதிகாரிகள் சிலர் கூடி விரும்பத்தகாத கருத்துக்களை தங்களிடையே பகிர்ந்து கொண்டமை தொடர்பிலான ஒலி பதிவு சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பி இருந்தன.
குறித்த ஒலிப்பதிவில், உள்ள குரல்கள் தொடர்பில் ஆய்வு செய்து, அந்த குரல்களுக்கு உரிய அதிகாரிகளை இனம் கண்டு அவர்களுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இந்த விடயம் தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் நீதிமன்ற சட்ட நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.
மேலும், வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் இந்தப் போராட்டத்திற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் வடக்கு மாகாண தொழிற்சங்கங்களின் சம்மேளம் ஆகியன ஆதரவு வழங்கியுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் நேரில் சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து கொண்டார்.
அதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனுக்கும் வடமாகாண ஆளுநர் ஊடாக ஜனாதிபதிக்கும் அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் மகஜர் கையளித்துள்ளனர்.







