தற்போதைய தொடருந்து பொது மேலாளரை நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடருந்து தொழிற்சங்கங்கள் நேற்று (16) நள்ளிரவு முதல் 48 மணி நேர வேலைநிறுத்தத்தைத் தொடங்கியுள்ளன.
இதன்படி நடைபெற்று வரும் தொழிற்சங்கப் போராட்டம் குறித்துக் கருத்து தெரிவித்த தொடருந்து நிலைய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன, வேலைநிறுத்தம் தொடங்குவதற்கு முன்பே நேற்று பல தொடருந்துகள் இரத்து செய்யப்பட்டதால் பயணிகளுக்கு சிரமம் ஏற்பட்டதாகத் தெரிவித்தார்.
தற்போதைய தொடருந்து பொது மேலாளரை நீக்க வேண்டும் என்ற தொழிற்சங்கங்களின் கோரிக்கைக்கு இதுபோன்ற பிரச்சினைகளும் காரணங்களில் அடங்கும் என்று அவர் கூறியுள்ளார்.
தொடருந்துகளை இயக்க முயற்சி
தொடருந்து வருவாயை அதிகரிப்பதற்கோ அல்லது பயணிகளுக்குத் தேவையான வசதிகளை வழங்குவதற்கோ முறையான திட்டம் எதுவும் தயாரிக்கப்படாத நிலையில், பொது மேலாளரும் நிர்வாக அதிகாரிகளும் தற்போது தொடருந்துகளை இயக்க முயற்சி செய்து வருவதாக சோமரத்னா மேலும் குற்றம் சாட்டியுள்ளார்.
48 மணி நேர வேலைநிறுத்தத்தில் குதித்த தொடருந்து தொழிற்சங்கங்கள் | Railway Unions Continue 48 Hour Strike
பெரும்பாலான தொடருந்து நிலைய அதிகாரிகள் வேலைநிறுத்தத்தில் இணைந்துள்ளதாகவும், அதே சமயம் அரசாங்கத்தை ஆதரிக்கும் பல நிலைய அதிகாரிகள் வேலைநிறுத்தத்தைக் கலைக்கவும், தற்போதைய பொது மேலாளரைப் பதவியில் தக்கவைக்கவும் முயற்சி செய்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
தொழிற்சங்கத்தின் இந்த நடவடிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டதல்ல என்றும், தொடருந்து துறையை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்டது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.







