அனோஜனுக்கு மரணதண்டனை இரத்து சவூதிஅரேபிய உச்சநீதிமன்றம் தீர்ப்பு

மரண தண்டனையை எதிர்நோக்கிய அனோஜனுக்கு பெரும் நிம்மதி; உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு!சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியிருந்த இலங்கையரான சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைத் தீர்ப்பை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் இரத்து செய்துள்ளதாக வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

 

தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றின் ஊடாக அவர் இந்த முக்கிய தகவலை அறிவித்துள்ளார்.

 

அதன்படி, சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனைத் தீர்ப்பை சவூதி அரேபிய உச்ச நீதிமன்றம் நேற்று (13) இரத்து செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

இலங்கை அரசாங்கத்தினால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட இராஜதந்திர மற்றும் சட்ட ரீதியான முயற்சிகளின் பலனாகவே இந்த முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

தீவுகள் ஆராயுங்கள்

 

இந்தத் தீர்ப்பு அனோஜனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பெரும் நிம்மதியை ஏற்படுத்தும் செய்தியாக அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

மேலும், இந்த விவகாரத்தில் ஒத்துழைப்பு வழங்கிய சவூதி அரேபிய அரசாங்கத்திற்கு தனது நன்றிகளைத் தெரிவித்துள்ள பிரதி அமைச்சர், இலங்கைத் தூதுவர், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் மற்றும் அதிகாரிகள் ஆகியோருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

 

அத்துடன், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், இலங்கை மற்றும் சவூதி அரேபிய சட்டத்தரணிகள் குழுவினர் ஆகியோரின் அர்ப்பணிப்பான முயற்சிகளுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

 

எனினும், மரண தண்டனைத் தீர்ப்பு இரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அனோஜனின் தற்போதைய சட்ட நிலைமை மற்றும் வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பான மேலதிக விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

 

சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியிருந்த சிவராசா அனோஜனின் உயிரைக் காப்பாற்றுவதற்காகப் பல்வேறு தரப்பினரும் தொடர்ச்சியாகக் கோரிக்கைகளை முன்வைத்து வந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this article

More News