அன்பிற்கினிய தமிழ் மக்களே!

அன்பிற்கினிய தமிழ் மக்களே!

யுத்தம் முடிந்து பதினேழு வருடங்கள் ஆகிவிட்டது. தமிழ்க் கட்சிகளை நோக்கி பொதுமக்கள் பல்வேறுபட்ட கேள்விக்கணைகளை வீசுகின்றார்கள். தமிழ்த் தேசிய நீரோட்டத்தில் இருக்கும் கட்சிகள் கடந்த பதினெட்டு வருடங்களாக என்ன விடயங்களைச் சாதித்திருக்கின்றன? இவர்களால் காணிப் பிரச்சினையைத் தீர்க்க முடியவில்லை, இனப்பிரச்சினையைத் தீர்க்க முடியவில்லை, மதப் பிரச்சினையைத் தீர்க்க முடியவில்லை என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன.

 

ஈழ விடுதலைக்காக பல்வேறு தமிழ் இயக்கங்கள் ஆயுதமேந்திப் போராடின. இறுதியாக, தமிழீழ விடுதலைப் புலிகள் தாம் அந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றனர். 2009ஆம் ஆண்டு அவர்களது போராட்டமும் இலங்கை அரசால் ஒரு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகள் உலகத்திலேயே உள்ள விடுதலை இயக்கங்களில் ஒரு பலமிக்க விடுதலை அமைப்பாக இருந்தது. தரைப்படை, கடற்படை, ஆகாயப்படை என படைபலங்களையும் தற்கொலை போராளிகளையும் உள்ளடக்கிய பல்வேறுபட்ட இராணுவ கட்டமைப்பையும் கொண்டிருந்தது. அப்படி இருந்தும்கூட, தேசிய இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வைக் காண முடியவில்லை.

இப்பொழுது நாங்கள் விரும்பியோ விரும்பாமலோ பாராளுமன்றத்தில் பலவீனமான ஒரு குழுவாகவே செயற்படுகின்றோம். ஆளும் தரப்பானது மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அதிகமான பிரதிநிதிகளைக் கொண்டிருப்பதால் எமது பாராளுமன்ற குழுவிற்கு அரசுடன் பேரம் பேசுவதற்கான வாய்ப்புகளும் அரிதாகவே உள்ளது. இவ்வாறான ஒரு சூழ்நிலையில் தமிழ் மக்களுக்கு இருக்கக்கூடிய மாற்றுவழிகள் எவை என்பதை சிந்திக்க வேண்டிய தேவை தமிழ் கட்சிகளுக்கு இருக்கின்றது.

கடந்த காலத்தில் விட்ட தவறுகள் என்ன? எமது போராட்டம் பின்னடைந்ததற்கான காரணம் என்ன? போன்ற விடயங்கள் யுத்தம் முடிந்து பதினேழு வருடங்கள் கடந்த நிலையில் இன்னமும் அலசி ஆராயப்படவில்லை. போராட்டம் சரியான திசைவழியில் போயிருக்குமாக இருந்தால் எமது போராட்டம் நியாயமான வெற்றியைப் பெற்றிருக்கும். ஆகவே ஏதோ தவறுகள் ஏற்பட்டதன் காரணமாகவே போராட்டம் பின்னடைவைச் சந்தித்தது. எனவே முதன்மையான விடயம் என்னவென்றால் கடந்த காலத்தில் அரசியல் ரீதியாக நாங்கள் விட்ட தவறுகளை அலசி ஆராய்ந்து புரிந்துகொண்டு, அந்தத் தவறுகளிலிருந்து மீண்டெழுந்து ஒரு புதிய பாதையை நாங்கள் அமைக்க வேண்டும்.

இளைஞர்கள் யுவதிகள் இன்னமும் இந்த மண்ணைவிட்டு எப்படி வெளியறலாம் என்றுதான் சிந்தித்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்த மண்ணில் அவர்கள் வாழலாம் என்ற நம்பிக்கை அவர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும். அதற்கான வெளிப்படையான வேலைத்திட்டங்கள் வேண்டும். அந்த வேலைத்திட்டங்கள் என்பன நிறைவேறக் கூடிய வேலை திட்டங்களாகவும் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வேலைத்திட்டங்களாகவும் அமைய வேண்டும்.

எமது முக்கியமான கோரிக்கைகளை மலினப்படுத்துவதற்காகவே அரசு பல்வேறுபட்ட திசை திருப்பும் தந்திரோபாயங்களை மேற்கொண்டு வருகின்றது. காணிகளை விடுவோம், நாங்கள் இனவாதிகளோ மதவாதிகளோ அல்ல, பொருளாதார அபிவிருத்திகளைச் செய்வோம் என்று கூறுவதுடன், ஆங்காங்கே புத்த கோவில்களை கட்டுவதும் போராளிகளின் நினைவுச்சின்னங்களை, அவர்களது உருவச்சிலைகளை அழிப்பதும் அவற்றை கடத்துவதும் இதனால் இளைஞர்கள் உணர்ச்சிவசப்பட்டு அந்தப் பிரச்சினைகளுக்கு முதன்மை ஸ்தானத்தைக் கொடுப்பதனூடாக முக்கியப்பிரச்சினைகள் திசைதிருப்பப்படுகின்றன.

தமிழ் அரசியல் கட்சிகள் இன்றைய காலகட்டத்தில் முதன்மையான பிரச்சினை என்ன என்பதையும் அதற்கான முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் உணராமல் இருப்பார்களாக இருந்தால் இன்று கைவசம் இருக்கக்கூடிய மாகாணசபை முறைகூட நாளை இல்லாமல் போகலாம். தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டுமாக இருந்தால், தங்களது அபிவிருத்தியை தாங்களே செய்ய வேண்டுமாக இருந்தால், தமது இளைஞர்கள் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக இருந்தால் தமிழ் தரப்பானது தன்னைத்தானே ஆளும் அதிகாரங்களைக் கையிலெடுக்க வேண்டும்.

இன்று எமது கைவசம் இருப்பது மாகாணசபைகளுக்கான அதிகாரங்கள் மாத்திரமே. மாகாணசபையில் தமிழ் மக்கள் விரும்பிய அளவுக்கு முழுமையான அதிகாரங்கள் இல்லாவிட்டாலும் கூட கல்வி, சுகாதாரம், விவசாயம், உள்ளுராட்சி அதிகாரங்கள், சட்டம் ஒழுங்கு என நாற்பதுக்கும் மேற்பட்ட அதிகாரங்கள் மாகாணசபைக்கு உள்ளது. இந்த அதிகாரங்களை ஓர் ஆரம்பப் புள்ளியாக வைத்துக்கொண்டு ஒரு முழுமையான அதிகாரப்பகிர்வை நோக்கிய தடத்தில் நாம் பயணிக்க வேண்டும்.

எம்மிடம் குறுகிய கால மூலோபாயமும் நீண்டகால மூலோபாயத்திற்குமான திட்டங்கள் இருக்க வேண்டும். மாகாணசபைகள் என்பன ஏற்கனவே அரசியல் சாசனத்தில் இருப்பதன் காரணமாக அவற்றை நடைமுறைப்படுத்திக்கொண்டு, நீண்டகாலத்தில் ஒரு சமஷ்டி அரசியல் அமைப்பை நோக்கி நாங்கள் நகரலாம். இப்பொழுது இருக்கின்ற தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது புதிய அரசியல் சாசனம் ஒன்றைக் கொண்டுவருவதாக இருந்தாலும்கூட ஒரு சமஷ்டி அரசியலமைப்பைக் கொண்டுவருவதற்கான எந்த உத்தேசமும் அவர்களிடமில்லை. மாறாக, மாகாணசபைகளுக்குப் பதிலாக உள்ளுராட்சி சபைகளை பலப்படுத்தினாலே போதுமென்று இப்பொழுது ஆளும்தரப்பாக இருக்கின்ற ஜே.வி.பியினர் சிந்திப்பதாக அறிகிறோம்.

ஒரு புதிய அரசியல் சாசனம் வரும் பட்சத்தில் சமஷ்டி அரசியலமைப்பிற்கான கோரிக்கையை தமிழ் மக்கள் முன்வைக்கலாம். ஆனால் அவை ஒரு சிங்கள பௌத்த மேலாதிக்க தன்மைகொண்ட ஒரு அரசியல் சூழ்நிலையல் அதனை அரச தரப்போ சிங்கள தரப்போ ஏற்றுக்கொள்ளுமா?

இன்றைய சூழலில், நாம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமாக இருந்தால் நான் ஏற்கனவே கூறியவாறு மாகாண ஆட்சி அதிகாரத்தைக் கையிலெடுப்பதனூடாகவே எம்மை அரசியல் ரீதியாகவும் பொருளதார ரீதியாகவும் ஒரு பலமிக்க சக்தியாக உருவாக்கிக் கொள்ள முடியும்.

மாகாண அரசொன்றை நிறுவ வேண்டும் நாங்கள் கூறியவுடன் நாங்கள் எல்லாவற்றையும் விட்டுக்கொடுத்து விட்டோம் என்ற ஒரு கற்பனா வாதத்திற்குள் ஆழ்ந்து, எம்மை கண்மூடித்தனமாக விமர்சிப்பதை விடுத்து, இன்றைய காலகட்டத்தின் உள்நாட்டு, பிராந்திய, பூகோள சூழ்நிலைகளைக் கவனத்திலெடுத்து யதார்த்தபூர்வமான முடிவுகளுக்கு வருவதனூடாகவே குறைந்தபட்சம் எமது மண்ணையும் மக்களையும் பாதுகாக்க முடியும்.

ஆகவே அன்பிற்கினிய தமிழ் மக்களே!

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இன்று எமக்கு இருக்கின்ற முதன்மையான கோரிக்கை என்ன என்பதில் நாம் ஒருமித்த முடிவுக்கு வரவேண்டும். அந்தக் கோரிக்கை என்பது இன்றைய காலகட்டத்தில் மாகாணசபைத் தேர்தல்களை நடாத்துவதும் 1988இல் கொண்டுவரப்பட்ட பதின்மூன்றாவது திருத்தத்தில் இருந்த அதிகாரங்களை முழுமையாக செயற்படுத்த வேண்டும் என்பதிலும் நாம் உறுதியாக இருப்போமாக இருந்தால் சர்வதேச அமைப்புகளும்கூட அந்த விடயத்தில் எமக்கு ஆதரவாகச் செயற்படும். இதனை முதன்மையான கோரிக்கையாக நாங்கள் கொண்டுவருவதுடன் காணிகள் விடுவிப்பு, பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குதல், பொறுப்புக்கூறலுக்கான சர்வதேச பொறிமுறை ஒன்றை உருவாக்குதல் போன்ற விடயங்களையும் எமது ஏனைய முக்கிய கோரிக்கைகளாகப் பட்டியலிடலாம்.

தமிழ் கட்சிகள் இவற்றைப் புரிந்துகொண்டு செயற்படுவதற்கு ஊடகங்களும் புத்திஜீவிகளும் கருத்துருவாக்கிகளும் சிவில் அமைப்புகளும் தமிழ் தேசியத்தின்பால் உண்மையான பற்றுள்ள சகல மக்களும் இதனை வலியுறுத்திப் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அடுத்த கடிதத்தில் சந்திக்கும்வரை

அன்புடன் உங்கள்

சுரேஷ். க.பிரேமச்சந்திரன்

Share this article

More News