போதைப்பொருள் மற்றும் மதுப் பாவனையால் ஏற்படும் பல்வேறு நோய்கள் காரணமாக இலங்கையில் ஆண்டுதோறும் சுமார் 20,000 பேர் உயிரிழப்பதாக மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையத்தின் திட்டப் பணிப்பாளர் அமரநாத் தென்ன தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் மாவட்ட ஊடகவியலாளர்களுக்காக மது மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டின் பாதிப்புகள் தொடர்பில் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அமரநாத் தென்ன, நாட்டின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 20 முதல் 22 சதவீதம் பேர் மதுப் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
அத்துடன், ஆண்களில் சுமார் 43 சதவீதம் பேரும், பெண்களில் 12 சதவீதம் பேரும் மதுப் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், போதைப்பொருள் பயன்பாட்டினால் நாளொன்றுக்கு சுமார் 55 பேர் உயிரிழப்பதாகவும், இதற்காக மக்கள் தினமும் சுமார் 56 கோடி ரூபாவைச் செலவிடுவதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை, போதைப்பொருளுக்கு அடிமையானவர்களில் பெரும்பாலானோர் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.







