இலங்கை பொலிஸாருக்கான புதிய சீருடை சாம்பல் நிறச் சட்டை மற்றும் நீல நிறக் காற்சட்டையைக் கொண்டதாக அமையவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கனடா பொலிஸார் அணியும் சீருடையை ஒத்த வகையில் இந்தப் புதிய சீருடை வடிவமைக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் திணைக்களத்தின் உள்வட்டாரத் தகவல்களை மேற்கோள்காட்டி வெளியிடப்பட்டுள்ள இந்தச் செய்தியில், 2027ஆம் ஆண்டு ஜூன் மாதம் அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ள புதிய சீருடைக்கான பரிசீலனையில் இந்த வடிவமைப்பும் உள்ளடங்குவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்தபோது, நவீன தொழில்நுட்ப உபகரணங்களுடன் கூடிய புதிய பொலிஸ் சீருடை அறிமுகப்படுத்தப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அறிவித்திருந்தார்.
இலங்கையின் காலநிலைக்கு ஏற்ற வகையிலும், பொலிஸாரின் பணிகளுக்கு வசதியாகவும் புதிய சீருடை வடிவமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, பொலிஸ் சீருடையை மாற்றுவதற்கான அதிகாரம் ஜனாதிபதியிடமே உள்ளதாகவும், அதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
காலனித்துவ ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட தற்போதைய காக்கி நிறச் சீருடை, இலங்கையின் வெப்பமண்டல காலநிலைக்கு ஏற்றதாக இல்லை என்றும், அதன் கனமான துணியினால் பொலிஸார் அசௌகரியங்களை எதிர்கொள்வதாகவும் நீண்டகாலமாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது







