இஸ்ரேலின் டிமோனா (Dimona) பகுதியில் கடந்த 21ஆம் திகதி இரவு நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் காயமடைந்த நான்கு இலங்கையர்களும், முறையான மருத்துவச் சிகிச்சையின் பின்னர் தற்போது தங்களது இருப்பிடங்களுக்குத் திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
தாக்குதல் நடைபெற்ற தருணத்தில், குறித்த நால்வரும் திறந்தவெளியில் இருந்ததே அவர்கள் காயமடையக் காரணம் எனத் தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில், ஏவுகணை வெடிப்பின் அதிர்வினால் சிதறிய கண்ணாடித் துண்டுகள் அவர்களின் தலை மற்றும் உடல் பகுதிகளில் பட்டதில் காயங்கள் ஏற்பட்டுள்ளன.
இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினரால் (IDF) வழங்கப்பட்ட பாதுகாப்பு வழிகாட்டல்களைப் பின்பற்றத் தவறியதே இந்த விபத்திற்கு முக்கியக் காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவித்த அவர், “ஏவுகணைத் தாக்குதலுக்குச் சுமார் மூன்று நிமிடங்களுக்கு முன்னதாகவே எச்சரிக்கை ஒலிகள் (Sirens) எழுப்பப்படுகின்றன.
அந்தச் சத்தம் கேட்டவுடன் இலங்கையர்கள் அனைவரும் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று தஞ்சமடைய வேண்டும்” என அவர் அவசரக் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.







