
கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசித்த 11 இளைஞர்களைக் கப்பம் கோரி கடத்திச் சென்று, சட்டவிரோதமாகத் தடுத்து வைத்து, பின்னர் கட்டாயமாகத் காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பான வழக்கில் பாரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், இலங்கை முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜேகுணரத்ன இவ்வழக்கில் ஒரு முக்கிய சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளார்.
இதனடிப்படையில், எதிர்வரும் ஜூலை மாதம் 27 ஆம் திகதி கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாகுமாறு முன்னாள் கடற்படைத் தளபதிக்கு நீதிமன்றம் இன்று அழைப்பாணை பிறப்பித்துள்ளது.
2008-2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில், கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவமே 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டனர். பணம் மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக கடற்படை அதிகாரிகளின் உதவியுடன் இந்த கடத்தல்கள் மேற்கொள்ளப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் கல்வி பயிலும் மற்றும் தொழில் புரியும் 11 தமிழ் இளைஞர்கள் திட்டமிட்டு கடத்தப்பட்டனர். பின்னர் இவர்கள் திருகோணமலை மற்றும் கொழும்பு கடற்படை முகாம்களில் இரகசியமாக தடுத்து வைக்கப்பட்டனர்
இவ்விடயம் தொடர்பில் கடற்படை அதிகாரிகள் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் மீது குற்றம் சாட்டப்பட்டு, குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) தீவிர விசாரணைகளை மேற்கொண்டது.
குறித்த வழக்கில் சந்தேகநபராக உள்ள சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி நாட்டை விட்டுத் தப்பிச் சென்று தலைமறைவாவதற்கு உதவியதற்காக, ரவீந்திர விஜேகுணரத்ன சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார். பின்னர் சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் விடுவிக்கப்பட்டார். அதன் பின்னர் பாதிக்கப்பட்ட தரப்பினரின் கோரிக்கையின் பேரில் மீண்டும் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்.
கடத்தப்பட்டவர்களைப் பாதுகாப்பதற்கோ அல்லது கடத்தல்காரர்களுக்குத் புகலிடம் அளித்ததற்கோ முன்னாள் கடற்படைத் தளபதிக்குத் தொடர்பு இருப்பதாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதை அடுத்தே, நீதிமன்றம் அழைப்பாணை உத்தரவை பிறப்பித்துள்ளது.







