சில தினங்களுக்கு முன்னர் ஒரு ராஜதந்திரியுடன் உரையாடிக் கொண்டிருந்த போது, அவர் சில கேள்விகளை கேட்டார். அந்தக் கேள்விகள் எனக்கானது அல்ல – மாறாக, சமஸ்டி பற்றியும், ஒரு நாடு இரு தேசம் பற்றியும் பேசிவரும் அரசியல்வாதிகளுக்கானது. தங்களிடம் எவரேனும் சமஸ்டி பற்றி அபிப்பிராயம் கேட்டால், அது சிறந்தது – அதனை நாங்கள் வரவேற்கின்றோம் என்றுதான் நாங்கள் பொதுவாக கூறுவதுண்டு. ஏனெனில் அது உண்மையிலேயே சிறந்ததுதான். அதில் சந்தேகம் வேண்டியதில்லை. எனவே நீங்கள் சமஸ்டி பற்றி, எங்களுடைய அபிப்பிராயத்தை கேட்பீர்களானால் எங்கள் பக்கத்திலிருந்து, எப்போதும் உங்களுக்கு சாதகமான பதிலே கிடைக்கும் ஆனால் நாங்கள் கூடவே ஒரு கேள்வியையும் கேட்போம் – அதாவது, சமஸ்டி நல்ல விடயம் ஆனால் அதனை எவ்வாறு அடையப் போகின்றீர்கள்?
தமிழ் கட்சிகளின் தலைவர்கள் எங்களிடம் வருகின்ற சந்தர்ப்பங்களில் எல்லாம், நாங்கள் இவ்வாறுதான் பதலளிக்கின்றோம். இலங்கையில் சமஸ்டியை அடைவது என்றால் அது நாடாளுமன்ற பலத்தின் ஊடாகத்தான் அடைய முடியும். அவ்வாறான பலம் தமிழ் அரசியல்வாதிகளிடம் இருக்கின்றதா? தமிழ் அரசியல்வாதிகளால் எப்போதாவது அவ்வாறான நாடாளுமன்ற பலத்தை அடைய முடியுமா? இந்த இரண்டு கேள்விகளுக்கும் எந்தவொரு தமிழ் அரசியல்வாதியிடமும் பதில் இல்லை – ஏனெனில் இதற்கு பதிலளிக்கவே முடியாது.
அந்த ராஜதந்திரி இவ்வாறு கூறியபோது சமாதான உடன்பாட்டு காலத்தில், ஒரு கனடிய நாடாளுமன்ற உறுப்பினர் கூறிய விடயம் எனது நினைவில் வந்தது. அதனையும் அவருடன் பகிர்ந்து கொண்டேன். அதனை ஒரு ஆங்கிலப் பத்திரிகையாளர்தான் என்னிடம் கூறினார். அதாவது, அவர் சொன்னாராம் நீங்கள் உலகத்திடம் வருகின்றபோது முழக்கங்களோடு வரக் கூடாது. யதார்த்தபூர்வமான வாதங்களுடனும், சாத்தியமான விடயங்களுடனும் வர வேண்டும். 1976ல் வட்டுக்கோட்டையில் தீர்மானம் நிறைவேற்றினோம், 1977ல் மக்கள் ஆணை பெற்றோம் – இவ்வாறான கதைகளை கேட்க முடியும் ஆனால் அதனை ஒரு விடயமாக எடுத்துக் கொள்ள முடியாது. எப்போதும் ஒன்றைப் பெற்றுக் கொண்டு அதிலிருந்துதான் முன்னேறுவது தொடர்பில் சிந்திக்க வேண்டும். அவ்வாறில்லாது நீங்கள் ஒன்றை நினைத்துக் கொண்டு அதனை மற்றவர்கள் பெற்றுத் தர வேண்டும் என்றால், அது ஒரு போதும் நடக்ககூடிய ஒன்றல்ல எனவே முதலில் ஒன்றை பெற்றுக்கொள்ளுங்கள் – அது எவ்வளது குறைவானதாக இருந்தாலும் கூட.
அந்த ராஜதந்திரி கூறிய விடயங்கள் தொடர்பில் இந்தக் கட்டுரையாளர் பல்வேறு சந்தர்ப்பங்களில் பதிவு செய்திருக்கின்றார். அதே போன்று இன்னும் சிலரும் பதிவு செய்திருக்கின்றனர். ஆனாலும் தமிழ் சமூகத்தின் மத்தியில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியளவிற்கு விழிப்புணர்வு ஏற்படவில்லை. இப்போதும் கூட சமஸ்டி பற்றியும் வடக்கு கிழக்கு இணைப்பு பற்றியும், தமிழர் தாயகக் கோட்பாடு பற்றியும், திருகோணமலை ஈழத் தமிழரின் தலைநகரம் – இப்படியான கற்பனைகளை கூறும் போது, தமிழர்கள் கோபப்படவில்லை. உண்மையில் இவ்வாறான அரசியல் பாதகம் புரிவோரைக் கண்டால், அவர்கள் முகத்தில் காறி உமிழும் ஆவேசம் ஏற்பட வேண்டும் ஆனால் அவ்வாறான அரசியல் சீற்றத்தை எங்குமே காண முடியவில்லை.
இதற்கு இரண்டு காரணங்கள்தான் இருக்க முடியும்! ஒன்றில் ஈழத் தமிழர்களுக்கு அரசியலில் எவ்வித கரிசனையும் இல்லை அதாவது, ஒரு திரைப்பட்டத்தை பார்த்துவிட்டு சாதாரணமாக கடந்து செல்லும் உணர்வுடன்தான் அரசியலையும் புரிந்து கொள்கின்றனர் – அல்லது, அரசியல்ரீதியில் ஈழத் தமிழ் சமூகம் ஒரு படிப்பறிவற்ற சமூகமாக இருக்க வேண்டும் – அதாவது, தமிழரின் படிப்பு என்பது அவர்களின் மத்தியதரவர்க்க வாழ்க்கைக்கானது மட்டும்தான்? உதாரணமாக ஒரு வைத்தியராக வருவது – பொறியலாளராக வருவது – சட்டத்தரணியாக வருவது என்னுமளவிற்குத்தான் தமிழ் சமூகம் என்பது ஒரு படித்த சமூகமாக இருக்கின்றது.
இந்தக் கட்டுரை பற்றி யோசித்துக் கொண்டிருந்த போது, ஒரு செய்தியை பார்க்க முடிந்தது. அதாவது, மீண்டும் மண்குதிரையில் ஆற்றைக் கடப்பதற்கான முயற்சி பற்றி ஆலோசிக்கப்படுகின்றதாம். இனப்பிரச்சினையில் தனித்து செயற்படுவதில்லை என்னும் அடிப்படையில், சமஸ்டி அரசமைப்புக்கான சமூக ஒப்பந்தம் ஒன்றை தயாரிப்பதுதுதான் இந்த முயற்சியின் நோக்கமாகக் கூறப்படுகின்றது. இவ்வாறான முயற்சியை மேற்கொள்பவர்கள் அனைவருமே கொழும்பு சட்டத்தரணிகள் என்பதுதான் இதிலுள்ள வேடிக்கை. இந்த இடத்தில்தான் ஒரு படித்த சமூகத்திற்கும் அரசியலை படித்த சமூகத்திற்கும் இடையிலுள்ள வேறுபாட்டை ஒருவர் புரிந்துகொள்வது இலகுவாகின்றது.
இவ்வாறான முயற்சியில் ஈடுபடுவர்கள் அனைவருமே படித்தவர்கள் என்பதில் இரு வேறு கருத்துக்கள் இல்லை ஆனால் அவர்கள் அரசியலை படித்தவர்களா? ஆகக் குறைந்தது அவர்கள் அரசியலை படிக்க முயற்சிப்பதாகவும் தெரியவில்லை. இவ்வாறான சட்டத்தரணிகளின் விருப்பமும், அவர்களுடைய அழைப்பில் ஒன்றுகூடும் தமிழ் அரசில்வாதிகளின் விருப்பங்களும் பிரச்சினைக்குரியது அல்ல – மாறாக சிறந்தது, ஆனால் அதனை எவ்வாறு சாத்தியப்படுத்துவது? எந்தவொரு தீர்வு பற்றியும் கலந்தாலோசிக்கலாம் – அதனை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கலாம் ஆனால் அதனை ஏன் அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும் – அதற்கான நிர்பந்தம் என்ன? அரசாங்கத்தை நிர்பந்திப்பதற்கான ஆற்றல் தமிழ் அரசியல்வாதிகளிடம் இருக்கின்றதா? அவ்வாறான ஆற்றலை தமிழ் அரசியல்வாதிகளால் பெறத்தான் முடியுமா? இவை எவற்றுக்கும் இல்லை என்னும் பதிலைத் தவிர வேறு சிறந்த பதில் இல்லை.
அரசியல் தீர்வு தொடர்பில் சிந்திக்க முற்படும் படித்த சமூகத்தினர் என்போர் அரசியலை ஆழமாக உற்றுநோக்க முயற்சிக்க வேண்டும். இது ஒன்றும் அணுகுண்டு தொழில்நுட்பம் அல்ல – எனவே நமது வீறாப்பை, சட்டச் செருக்கை புறமொதுக்கி, சற்று சிந்திக்க முயற்சிப்பதன் மூலம், இலகுவாக புரிந்துகொள்ள முடியும். வரலாற்றில், இலங்கை தமிழரசு கட்சி சமஸ்டிக்கு முயற்சித்தது, விளைவு தோல்வி. அதன் பின்னர் தனிநாடு என்றது – விளைவு தோல்வி. ஆயுத பலத்தின் மூலம் தமிழ் மக்களுக்கான விடுதலையை அடைய முடியும் என்று தமிழ் இயக்கங்கள் முழக்கமிட்டன – விளைவு தோல்வி. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தனிநாட்டுக்காக தனித்து யுத்தம் செய்தது – விளைவு தோல்வி. இந்தக் காலத்தில் பல சந்திப்புக்கள், திரைக்கு முன்னும், திரைக்கு பின்னும் இடம்பெற்றது ஆனால் எதுவும் சாதகமான விளைவுகளைத் தரவில்லை.
இந்தக் காலகட்டத்தில் எத்தனையோ சட்ட நிபுனர்களை தமிழ் சமூகம் கண்டிருக்கின்றது. எத்தனையோ புரட்சியாளர்களை கண்டுவிட்டது? தியாகங்களை கண்டுவிட்டது? அர்பணிப்புக்களை கண்டுவிட்டது. ஒரு சிறிய இனம், அதன் ஆற்றலுக்கும் வளத்திற்கும் அதிகமாகவே இழந்துவிட்டது. இத்தனை விடயங்களால் நடக்காத ஒன்றையா நீங்கள் நடத்திக் காண்பிக்கப் போகின்றீர்கள்? நீங்கள் சாதாரணமாக ஒருசிலர் கூடி மேற்கொள்ளும் தீர்மானங்களால் மாற்றங்கள் நிகழும் என்பதை உங்களால் கூட நம்ப முடியாத போது, அதனை மக்கள் நம்ப வேண்டும் என்று எண்ணுவது எவ்வளவு மோசமானதொரு செயல்.
ஆனால் யுத்தத்தின் போதும் யுத்தத்திற்கு பின்னரும் ஒரு விடயம் அப்படியே இருக்கின்றது – அதுதான் மாகாண சபை. அரசியலமைப்பின் பதின்மூன்றில் உள்ளவற்றில் எதனை, எவ்வாறு அமுல்படுத்துவது என்பதில் முரண்பாடுகள் இப்போதும் இருகின்றன. அது இனியும் தொடரலாம் ஆனால் 38 ஆண்டுகளுக்கு பின்னரும், இப்போதும் அதனைத் தாண்டிய ஒன்றைப் பற்றி தென்னிலங்கையிடம் பதில் இல்லை. அது தோல்வியடைந்தது என்று சிலர் கூறலாம் – அதே போன்று அதில் போதாமையுள்ளது என்று இன்னொரு தரப்பு கூறலாம் ஆனால் அவ்வாறு கூறுபவர்களிடம் அதனைத் தாண்டிச் செல்லுவதற்கான தெரிவுகள் இல்லை. அவ்வாறாயின் ஈழத் தமிழர்கள் மத்தியில் அரசியலை படிக்க முயற்சிப்பவர்கள் எது பற்றி சிந்திக்க வேண்டும்? எதனடிப்படையில் தமிழ் கட்சிகள் மத்தியில் உடன்பாட்டை ஏற்படு;த்த முயற்சிக்க வேண்டும்?
இலங்கையின் அரசியல் நிலைமையை பொறுத்தவரையில், சமஸ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வை அடைய வேண்டுமாயின், அதற்கு ஒரேயொரு வாய்ப்புத்தான் உண்டு – அதாவது, இந்த நாட்டின் பெரும்பாண்மையான சிங்கள மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் சமூகம் இணங்கினால் மட்டும்தான், அது சாத்தியப்படும் ஆனால், அந்த அதிசயம் இலங்கைத் தீவில் நிகழும் என்று நம்பினால், அது முயலில் கொம்பு கிடைக்குமென்று நம்புவதற்கு ஒப்பானது. அது ஒரு போதும் நடக்காது. அவ்வாறாயின் தமிழ் அரசியல்வாதிகளும், புத்திஜீவிகள் என்போரும், சிவில் சமூகத்தினரும், கருத்துருவாக்கிகளும் (அனைவரும் அல்லர்) எந்த அடிப்படையில் சமஸ்டி பற்றி பேசிவருகின்றனர்?
இந்த இடத்தில்தான் தமிழர்கள் படித்த சமூகம் என்பதையும் தாண்டி, அரசியலை படித்த சமூகமா என்னும் கேள்வி எழுகின்றது. அரசியலை படித்த ஒரு சமூகம் எப்படியானதாக இருக்கும் – இருக்க வேண்டும்? அந்த சமூகம், தனது கடந்த காலத்திலிருந்து கற்றுக்கொள்ள முயற்சிக்கும், தன்னை புதுப்பித்துக் கொள்ள முயற்சிக்கும், வெறும் கற்பனைகளுக்குள் தன்னை புதைத்துக் கொள்ளாது. யுத்தத்தின் முடிவும் அதன் பின்னரான கடந்த பதினேழு ஆண்டு கால அரசியல் அனுபவங்களையும் தொகுத்துப் பார்த்தால், ஈழத் தமிழர் சமூகம் அரசியல் ரீதியில், ஒரு படித்த சமூகம் என்பதற்கான சான்றுகளை, பெரியளவில் காண முடியவில்லை.
யதீந்திரா







