என்.டி.பி. வங்கியின் தரவுத் தள கட்டமைப்புக்குள் உட்புகுந்து சுமார் 13.2 பில்லியன் ரூபாய் நிதி மோசடி நடைபெற்ற சம்பவம் தொடர்பாக, சர்வதேச போலீஸின் உதவியுடன் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட உள்ளன.
இந்த மோசடியில் மின்னணு பரிவர்த்தனை முறைகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், விசாரணையை மேற்கொள்ள சர்வதேச போலீஸின் நிபுணர் குழு விரைவில் இலங்கைக்கு வரவுள்ளது.
பிரான்சின் லியோன் நகரில் அமைந்துள்ள சர்வதேச போலீஸ் தலைமையகத்திற்கு குற்றப் புலனாய்வு திணைக்களம் கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பெரும் நிதி மோசடி சம்பவம் தொடர்பாக இதுவரை நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் எதிர்வரும் 17ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களில் வங்கியின் தலைமையகத்தில் பணியாற்றும் கொடுப்பனவு தீர்வைப் பிரிவின் உதவி முகாமையாளர் மற்றும் அவரது சகோதரரும் அடங்குவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிதி மோசடி காரணமாக வங்கியின் எந்தவொரு வாடிக்கையாளரின் கணக்குகளுக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று என்.பி.சி. வங்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும், வங்கியின் வழமையான செயல்பாடுகளும் சேவைகளும் எந்தத் தடையும் இன்றி தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
அதேவேளை, வங்கியின் மூலதன அளவுகள் மற்றும் நிதி திடத்தன்மை தொடர்பான விகிதங்கள், இலங்கை மத்திய வங்கியின் குறைந்தபட்ச ஒழுங்குமுறை தேவைகளை விட உயர்ந்த நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வங்கியின் நிதி நிலைத்தன்மை குறித்து அச்சப்பட தேவையில்லை என மத்திய வங்கி விளக்கம் அளித்துள்ளது.







