
ஈழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவரும் மூத்த போராளிகளில் ஒருவருமான நண்பர் சிவாஜிலிங்கம் தனது எழுபதாவது வயதில் காலமானார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேச்சாளருமான சுரேஷ் க.பிரேமச்சந்திரன் ஊடக அறிக்கையினை வெளியிட்டுள்ளார்.
அவரது அறிக்கையின் முழுவிபரம் வருமாறு:
ஆயுதப் போராட்ட காலகட்டத்திலும் அதன் பின்னர் ஜனநாயக வழிமுறைகளிலும் போராட்டங்களை முன்னெடுத்தது மாத்திரமல்லாமல் ஜெனிவா போன்ற சர்வதேச அரங்குகளிலும் தமிழ் மக்களின் உரிமைக்காகக் குரல்கொடுத்தவர்.
அரசாங்கத்தின் பல்வேறுபட்ட அடக்குமுறைச் சட்டங்களுக்கு எதிராகவும் காணி விடுவிப்பிற்காகவும் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதற்காகவும் பாராளுமன்றத்திலும் மாகாணசபையிலும் அதற்கு வெளியிலும் குரல்கொடுத்தது மாத்திரமல்லாமல் அந்தத் தளங்களில் நின்று போராட்டங்களை முன்னெடுத்தவர்.
அன்னார் தமது வாழ்நாளில் தமிழ் மக்களின் உரிமைகள் தவிர்ந்த வேறு விடயங்களைக் கவனித்தவர் அல்லர். தனது உடல் உபாதைகளையும் நோய்களையும் கவனத்தில் எடுக்காமல் அனைத்து போராட்டங்களிலும் முன்னிலை வகித்தவர். பருவகால அரசியல்வாதிகள் மத்தியில் துணிச்சல் மிக்க தான்கொண்ட கொள்கைக்கு நேர்மையாகவும் விசுவாசமாகவும் விட்டுக்கொடுப்பின்றியும் நடந்து காட்டிய உன்னதமான போராளி. அவருக்கும் எனக்குமான உறவானது ஏறத்தாழ நாற்பதாண்டுகால நட்பாகும். நானும் அவரும் வௌ;வேறு இயக்கங்களில் பயணித்திருந்தாலும்கூட தமிழ் மக்களின் உரிமைகளுக்காக நாங்கள் இயன்றவரை ஒருமித்தே போராடி வந்திருக்கின்றோம். ஐக்கிய முன்னணியாக, நட்பு சக்தியாக களமுனையில் ஒருமித்து நின்றவர்களாக எமது போராட்டம் தொடர்ந்து வந்துள்ளது.
எமக்கு அடுத்த தலைமுறையானது உரிமைகளுடன் வாழக்கூடிய வகையில் அவர்களிடம் ஒரு முழுமையான உரிமைகளுடன் கூடிய அமைப்புமுறை ஒன்றை கையளிக்க வேண்டும் என்பதில் அவர் பற்றுறுதியுடன் செயற்பட்டார். அவரது கனவை நோக்கி பயணிப்பதே நாங்கள் அவருக்குச் செய்யக்கூடிய உண்மையான அஞ்சலியாகும்.
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி சார்பாகவும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சார்பாகவும் அன்னாருக்கு எமது ஆழ்ந்த அஞ்சலிகளைத் தெரிவிப்பதுடன், அன்னாரின் குடும்பத்தினருடன் எமது கவலைகளையும் பகிர்ந்துகொள்கிறோம்.
சுரேஷ் க.பிரேமச்சந்திரன் தலைவர் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி உத்தியோகபூர்வ பேச்சாளர்ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி







