
தென்னாபிரிக்கரான நவநீதம் பிள்ளை, இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை பெற்றிருக்கின்றார். முகநூல்களில் பல தமிழர்களும் தங்களின் கொண்டாட்ட மனோநிலையை வெளிப்படுத்தியிருக்கின்றனர். அவருடன் எடுத்து புகைப்படங்களை பதிவிட்டு, தங்களின் மகிழ்சியை காண்பித்துவருகின்றனர். அவர் ஒரு தமிழர் என்றவாறான புரிதலும் பலரிடம் இருப்பதாக தெரிகிறது. தமிழ்ச் சூழலின் அரசியல் வறுமைக்கான சான்றுகளில் இதுவும் ஒன்று – எதைக் கொண்டாடுவது என்பதைக் கூட அறிய முடியாத மொட்டை மூளையாளர்களாகவே பெரும்பாலானவர்கள் இருக்கின்றனர். ஆனால் நவநீதம் பிள்ளை எங்குமே தன்னை இனரீதியாக அடையாளப்படுத்திய ஒருவரல்ல. அதற்கான தேவையும் அவருக்கில்லை.
நவிப்பிள்ளை, 2008 – 2014 வரையான காலப்பகுதியில் ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளராக இருந்தவர். இந்தக் காலத்தில்தான் இலங்கையின் இறுதி யுத்தம் தொடர்பான மனித உரிமை மீறல் விவகாரம் சர்வதேச மயப்பட்டது. 2013இல், பிள்ளை, இலங்கையின் நிலைமைகளை ஆராய்வதற்காக விஜயம் செய்திருந்தார், வடக்கு கிழக்குப் பகுதிகளின் நிலைமைகளை நேரடியாக ஆராய்ந்திருந்தார். அவர் திருகோணமலைக்கு விஜயம் செய்த போது, அவரைச் சந்தித்த சிவில் சமூகப் பிரதிநிதிகளில் இந்தக் கட்டுரையாளரும் ஒருவர்.
இலங்கையின் மனித உரிமைகள் விவகாரத்தில் இறுதி கட்ட யுத்தம் தொடர்பான விடயங்களை கவனத்தில் கொள்கின்றீர்களா அல்லது அதற்கு பின்னரான காலப்பகுதியையும் கவனத்தில் கொள்கின்றீர்களா – என்று நான் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதிலோ புதிரானது. மனித உரிமைகள் பேரவை என்பது ஜக்கிய நாடுகள் சபை அல்ல – அங்கு பொதுச் சபை உண்டு, பாதுகாப்புப் பேரவை உண்டு. அவரின் பதில் உடனடியாக எனக்கு விளங்கவில்லை பின்னர் மீண்டும் ஒரு முறை யோசித்த போதுதான் விளங்கியது. மனித உரிமைகள் பேரவையில் முடிவுகளை எடுப்பதால் மட்டும், விடயங்கள் நகர்ந்துவிடப் போவதில்லை என்பதைச் சுட்டிக் காட்டுவதற்காகவே அவர் அவ்வாறு பதிலளித்திருக்கின்றார்.
அவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர், கனடிய புலம்பெயர் அமைப்பு ஒன்றின் அழைப்பில், நினைவுப் பேருரை ஆற்றியிருந்தார். அதில் இப்படிக் கூறியிருந்தார், ஜக்கிய நாடுகள் சபை என்பது, புவிசார் அரசியல் போட்டிக்குள்ளும், நாடுகளின் குறுகிய தேசியவாத நலன்களுக்குள்ளும் சிக்குப்பட்டிருக்கின்றது. இதற்கு எனது சொந்த நாடான தென்னாபிரிக்காவும் விதிவிலக்கல்ல. அவருடைய மேற்படி இரண்டு கருத்துக்களையும் ஒப்பிட்டு நோக்கினால் உங்களால் உலக அரசியலை ஒரளவு புரிந்துகொள்ள முடியுமல்லவா!
நவநீதம் பிள்ளை அவரது பதவிக்கும் சிந்தனைக்கும் உண்மையாக இருந்தவர் என்பதில் இரண்டாவது பேச்சுக்கு இடமில்லை. நோபல் பரிசுக்கான அவரது தகுதி தொடர்பிலும் எவரும் கேள்வி எழுப்ப முடியாதுதான் ஆனால் அவர் தற்போது பெற்றிருக்கும் அமைதிக்கான நோபல் பரிசு என்பது அதிகம் அரசியல்மயப்படுத்தப்பட்ட ஒன்று என்பதையும் எவராலும் மறுக்க முடியாது. கடந்த ஆண்டு, வெனிசுலாவின் எதிர்கட்சித் தலைவரான மரியா கொரினா மச்சாடோவிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அப்போதைய வெனிசுலாவின் ஆட்சியாளராக இருந்த நிக்கலோஸ் மதுராவின் சர்வாதிகாரப் பிடியிலிருந்து, இரகசியமா நாட்டை விட்டு வெளியேறியிருந்த நிலையிலேயே அவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
வெனிசுலாவில் ஜனநாயகத்தை மீட்பதற்கான இரும்புப் பெண்மணியாக செயற்பட்டார், அமைதியான வழியில் ஜனநாயகத்தை ஏற்படுத்துவதற்காக தன்னை அர்ப்பணித்திருந்தார், என்னுமடிப்படையிலேயே அவருக்கு பரிசு அறிவிக்கப்பட்டது. ஆனால் உண்மையில் மதுராவை ஆட்சியிலிருந்து இராணுவரீதியாக அகற்றிக் கொண்டு சென்றதன் மூலம்தான், அங்கு ஜனநாயகம் ஸ்தாபிக்கப்பட்டது. இந்த ஆண்டு, ஜனவரியில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் விசேட உத்திரவிற்கு அமைவாக, இரண்டு மணித்தியாலய இராணுவ நடவடிக்கையின் மூலம், மதுரோ அதிரடியாக ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டார். அப்படிப் பார்த்தால், இறுதியில் அமெரிக்காவே வெனிசுவேலாவில் ஜனநாயகத்தை ஸ்தாபித்தது என்பதுதானே உண்மை. அப்படிப் பார்த்தால் நவிப் பிள்ளையை விடவும் ஜனாதிபதி ட்ரம்ப்தானே நோபல் பரிசுக்கு அதிகம் தகுதியானவர். ஏனெனில் ஏற்கனவே அமைதிக்கு பங்களித்தார் என்னுமடிப்படையில்தான், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவிற்கு 2009இல், நோபல் பரிசு வழங்கப்பட்டிருந்தது. இந்த அடிப்படையில்தான் நோபல் பரிசு அதிகம் அரசியல்மயப்படுத்தப்பட்ட ஒன்று என்பதை குறிப்பிட்டிருந்தேன்.
நவீப்பிள்ளைக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு, ஒரு மணித்தியாலத்திற்கு பின்னர், உலகில் என்ன நடந்தது? உலக அரசியல் எந்தளவு சிக்கலானதாக மாறியிருக்கின்றது என்பதை புரிந்து கொள்ளுவதற்கு இது போதுமானது. அமெரிக்கா, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை முற்றிலுமாக தடைசெய்திருக்கின்றது. கடந்த மாதம், ஜக்கிய நாடுகள் சபையில் உரையாற்றும் போது, ஜனாதிபதி ட்ரம்ப்;, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து நாடுகளை வெளியேறுமாறு குறிப்பிட்டிருந்தார். அதன் தொடர்சியாக தற்போது நீதிமன்றம் முற்றிலுமாக தடை செய்யப்பட்டிருக்கின்றது. ஏற்கனவே நீதிமன்றத்தின் நீதிபதிகள் பலர் மீது அமெரிக்கா தடைவிதித்திருந்த நிலையில், தற்போது முற்றிலுமான தடையை அறிவித்திருக்கின்றது. நவநீதம் பிள்ளை, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னைநாள் நீதிபதியாவார். முன்னைநாள் நீபதி அமைதிக்கான நோபல் பரிசை பெற்றிருக்கின்ற போது, சர்வதேச குற்றவியல் நீதிமன்றமே அமெரிக்காவின் தடைப்பட்டியலில் இருக்கின்றது.
சர்வதேச அரசியல் எதை நோக்கி நகர்கின்றது என்பதில் பல்வேறு குழப்பங்கள் காணப்படுகின்ற நிலையில், மேலும் ஒரு குழப்பமாக இந்த விடயம் இடம்பெற்றிருக்கின்றது. நவீப் பிள்ளைக்கு நோபல் பரிசு கிடைத்ததை அவரும் அவருடைய குடும்பமும் கொண்டாட முடியும் ஏனெனில் அவரைப் பொறுத்தவரையில் இது அவருக்கான ஒரு உயரிய அங்கீகாரம் ஆனால் இதனால் உலகெங்கும் அமைதியை, நீதியை, பரிவை எதிர்பார்த்து காத்திருக்கும் கோடிக்கணக்கான மக்களுக்கு எதுவும் கிடைக்கப் போவதில்லை. அவர்களுடைய வாழ்வில் அமைதி திரும்பப் போவதில்லை. எத்தனையோ அமைதி ஒப்பந்தங்கள், மனித உரிமைகள் பேரவையில் எத்தனையே பிரகடணங்கள் ஆனாலும் பாலஸ்தீன மக்களின் வாழ்வில் நிம்மதி திரும்பவில்லையே – ஏன்?
அவர்களுடைய வாழ்வில் நிம்மதி திரும்ப வேண்டும் என்றால், அது முற்றிலும் அந்தப் பிராந்தியத்தில் இஸ்ரேலுடன் ஒரு புரிந்துணர்வு இல்லாமல் நிகழவே முடியாது. இதனைத்தான் இதுவரையான நிகழ்வுகள் நிரூபித்திருக்கின்றன.
சமாதானம், இப்படியொரு சொல்லை கேட்க நேர்கின்ற போதெல்லாம், துருக்கிக்கான அமெரிக்கத் தூதுவராக இருந்த டொம் பராக் (Thomas Joseph Barrack Jr) ஒரு முறை கூறியதுதான் நினைவுக்கு வருவதுண்டு. அவர் இவ்வுலக அரசியலை மிகவும் அச்சொட்டாக புரிந்திருக்கின்றார் எனலாம். அவர் கூறுவார் – சமாதானம் என்பது ஒரு மாயை. ஒரு போதுமே சமாதானம் இருந்ததில்லை – பெரும்பாலும் இருக்கவே போவதில்லை ஏனெனில் ஒவ்வொருவரும், அவர்களின் நியாயம் என்னும் உரிமைகளுக்காக சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றனர். இதற்கு முடிவில்லை. இதில் யாரோ ஒருவர்தான் மேலாதிக்கம் செலுத்த முடியும்.
இதுதான் இன்றைய உலக நிலைமை. உள்ளுரிலும் இதுதான் நிலைமை – அமைதியின்மை காணப்படும் அனைத்து இடங்களிலும் இதுதான் நிலைமை. ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய வாதம் சரியாக இருக்கின்ற போது, இறுதியில் ஒருவருடைய ஆற்றலும், அவருக்கு இருக்கின்ற வாய்ப்புக்களுமே அவருக்கான வெற்றியை வழங்கும். அது இன்னொருவருக்கோ தோல்வியையும் அவமானத்தையும் வழங்கும். தோல்வியையும் அவமானத்தையும் எதிர்கொண்டவர், தனக்கான வாய்ப்பு கிடைக்கும் வரையில் தனக்குள் குரோதத்துடன் அமைதியாக இருப்பார். இதுதான் நிலைமை என்றால் அமைதி என்பது ஒரு மாயைதானே!
நான் யோசிப்பதுண்டு, இந்த அடிப்படையில் நோக்கினால் உலகின் பல பாகங்களிலும் அமைதியின் பெயரில் தலையீடு செய்யும் ஆற்றலோடு அமெரிக்காதானே இருக்கின்றது. ஆகக் குறைந்தது தற்காலிகமாகவேனும் மக்கள் நிம்மதிப் பெருமூச்சுவிட அமெரிக்காவினால் பங்களிப்பை வழங்க முடிகிறதல்லவா. அப்படியென்றால், ஜனாதிபதி ட்ரம்;ப் அமைதிக்கான நோபல் பரிசை கோருவதில், ஒரு தவறும் இல்லையே. உண்மையில் அமெரிக்கத் தலைவர்களுக்குத்தானே அதிக தகுதியுண்டு. உலகில் யுத்தங்களை தீர்மானிக்கவும் தேவைப்பட்டால் அமைதியை ஏற்படுத்தும் வல்லமையோடு இருக்கின்றவர்களுக்குத்தானே அமைதிக்கான பரிசு போக வேண்டும். நவீப் பிள்ளை போன்றவர்களால் எதைச் சாதித்துவிட முடியும். அவர் சர்வதேச சட்டங்களுக்கு பங்களித்திருக்க முடியும், தீர்மானங்களை நிறைவேற்றுவதற்காக பங்களித்திருக்க முடியும் – ஆனால், அவற்றை நடைமுறைப்படுத்துவது யார்? யுத்தம் முடிந்து பதினேழு ஆண்டுகளாகிவிட்டது, ஒரு சிறிய முன்னேற்றம் கூட, தமிழரின் மனித உரிமைக் கோரிக்கையில், அரசியல் தீர்வுக் கோரிக்கையில் ஏற்படவில்லையே! பிறகேன் நோபல் பரிசை எண்ணிக் கொண்டாட்டம்?







