ஒஸ்லோவில் இலங்கை – நோர்வே அமைச்சர்கள் சந்திப்பு! ஈழத்தமிழர் நல்லிணக்கம் குறித்தும் பேச்சு! 

இலங்கையின் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவுக்கும், நோர்வேயின் போக்குவரத்து அமைச்சர் காம்ஸி குணரத்னத்துக்கும் இடையிலான இருதரப்புச் சந்திப்பு நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் நடைபெற்றது.

 

இந்தச் சந்திப்பில் நோர்வேக்கான இலங்கைத் தூதுவர் கபில பொன்சேகாவும் கலந்துகொண்டார். யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட காம்ஸி குணரத்னம், நோர்வே அரசாங்கத்தின் போக்குவரத்துத் துறையில் முக்கிய பொறுப்பை வகிக்கும் இலங்கைத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவராக இருப்பது இச்சந்திப்புக்குக் கூடுதல் முக்கியத்துவத்தை அளித்துள்ளது.

 

இரு நாடுகளுக்கும் இடையிலான போக்குவரத்துத் துறை ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து அமைச்சர்கள் கலந்துரையாடினர். பசுமைப் போக்குவரத்து மாற்றம், பொதுப் போக்குவரத்துச் சேவைகளை மேம்படுத்துதல் மற்றும் போக்குவரத்துத் துறையில் முறையற்ற தொழிலாளர் சுரண்டலைத் தடுப்பது உள்ளிட்ட முக்கிய விடயங்கள் ஆராயப்பட்டன.

 

இலங்கையில் சாலை விபத்துகளால் ஆண்டுதோறும் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்துக் கவலை தெரிவித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க, கடந்த ஆண்டில் மாத்திரம் 2,700க்கும் மேற்பட்டோர் சாலை விபத்துகளில் உயிரிழந்ததாகச் சுட்டிக்காட்டினார். இவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள் என்றும் குறிப்பிட்டார்.

 

இதனையடுத்து, நோர்வேயில் நடைமுறையில் உள்ள மேம்பட்ட சாலைப் பாதுகாப்புத் தொழில்நுட்பங்கள் மற்றும் உத்திகளை இலங்கையில் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

 

சந்திப்பின்போது இலங்கையின் உள்நாட்டுப் போருக்குப் பின்னரான சமூக நல்லிணக்க முயற்சிகளும் பேசப்பட்டன. யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட காம்ஸி குணரத்னம், நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும், இந்தச் செயல்முறையில் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் பங்களிப்பையும் எடுத்துரைத்தார்.

 

இலங்கை – நோர்வே உறவுகளைப் போக்குவரத்துத் துறை ஒத்துழைப்புக்கு அப்பால் சமூக நல்லிணக்கம் மற்றும் மக்களிடையிலான தொடர்புகளை வலுப்படுத்தும் திசையிலும் முன்னெடுத்துச் செல்வதற்கான வாய்ப்பாக இந்தச் சந்திப்பு அமைந்துள்ளது.

Share this article

More News