சிறு குற்றங்களில் ஈடுபடுவோரைச் சிறையிலடைக்காது வீட்டில் கண்காணிக்கும் புதிய முறைமை

போதைப்பொருள் குற்றங்கள் மற்றும் ஏனைய சிறு குற்றங்கள் தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் சந்தேகநபர்களில் தெரிவு செய்யப்பட்ட சிலரைச் சிறைச்சாலையில் அடைக்காது, வீட்டில் தடுத்து வைத்து கண்காணிக்கும் புதிய முறைமையையொன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகப் சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சேனக பல்லேதென்ன தெரிவித்துள்ளார்.

 

இவ்விடயம் தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு மேலும் தெரிவிக்கையில்,

 

புதிய திட்டத்தின் கீழ் சந்தேகநபருக்கு சிப் ஒன்று பொருத்தப்பட்டு, அவர்களை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

 

தற்போது சிறைச்சாலைகளில் காணப்படும் கடுமையான நெரிசலைக் கருத்திற்கொண்டே இந்த புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், சிறைச்சாலைகள் திணைக்களம், நீதி அமைச்சு மற்றும் பொலிஸார் இணைந்து இதனைச் செயற்படுத்த எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.

 

மேலும், சிறைச்சாலைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்குப் பதிலாக, தற்போதுள்ள சிறைச்சாலைகளை வேறு இடங்களுக்கு இடமாற்றி, சர்வதேச வசதிகளைக் கொண்ட இடங்களாக மாற்றுவதற்கே அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகத் குறிப்பிட்ட ஆணையாளர், போகம்பறை சிறைச்சாலை தற்காலிகமாகவே சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதாகவும், அதனை மிக விரைவில் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Share this article

More News