
யாழ்ப்பாணம்: இலங்கையின் கடந்த கால காயங்கள் இன்னும் ஆறவில்லை என்பதை செம்மணி மனிதப் புதைகுழி தெளிவாக நினைவூட்டுவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தொடர்ந்து உண்மையையும் நீதியையும் தேடி போராடி வருவதாகக் குறிப்பிட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியம், களத்தில் பணியாற்றும் குழுக்களின் முயற்சிகள் உறுதியான பலன்களை அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவினர், பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப பிரதிநிதிகளிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டதுடன், உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தும் முயற்சிகளுக்கு தமது தொடர்ச்சியான ஆதரவை மீண்டும் உறுதி செய்துள்ளனர்.
இது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இலங்கையின் கடந்த கால காயங்கள் இன்னும் முழுமையாக ஆறவில்லை என்பதற்கான மிகத் தெளிவான நினைவூட்டலாக செம்மணி மனிதப் புதைகுழி அமைந்துள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தொடர்ந்து உண்மையையும் நீதியையும் நாடி போராடி வருகின்றன.
களத்தில் பணியாற்றும் விசாரணைக் குழுக்களின் முயற்சிகள் உறுதியான பலன்களை வழங்க வேண்டும். அப்போதுதான் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் உண்மையை அறிந்து நீதியைப் பெற முடியும்.
செம்மணி மனிதப் புதைகுழி அகழாய்வு தளத்திற்குச் சென்றபோது, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட சமூகங்களின் பிரதிநிதிகளை சந்தித்து, அவர்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டோம். உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான அவர்களின் போராட்டத்திற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் தொடர்ச்சியான ஆதரவு மீண்டும் உறுதிப்படுத்தப்படுகிறது.
பாதிக்கப்பட்ட குடும்பங்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்து வரும் உண்மை மற்றும் நீதியை நிலைநாட்டும் முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.







