காணிகளை விடுவிக்காது ஏமாற்றும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்! பலாலி மக்கள் குற்றச்சாட்டுமக்களின் காணி மக்களுக்கு என வாக்குறுதி வழங்கி ஆட்சிக்கு வந்த அநுர தலைமையிலான அரசாங்கம் இரண்டு வருடங்கள் கடந்தும் வலி வடக்கு காணிகளை விடுவிக்காது கபட நாடகம் ஆடுவதாக பலாலி காணி விடுவிப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
இன்றையதினம்(20.9.2026)பலாலி காணி விடுவிப்பு கோரி மக்கள் போராட்டம் 14ஆவது வாரமாக இடம்பெற்ற நிலையில் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு குற்றச்சாட்டை முன்வைத்தனர்.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், யுத்தம் நிறைவடைந்து 17 வருடங்கள் கடக்கின்ற நிலையில் எமது நிலத்தை விட்டு சென்று 35 வருடங்கள் கடக்கின்றது.
வாக்குறுதி
இன்றும் நாம் அனாதைகளாக வாடகை வீட்டில் வாழ்ந்து வருகின்ற நிலையில் எங்களின் வளமான காணிகளுக்குள் இராணுவம் விவசாயம் செய்து மேலதிக வருமானத்தை உழைத்து வருகிறது.
தற்போது நாட்டின் ஜனாதிபதியாக இருக்கின்ற அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதி தேர்தலுக்காக யாழ்ப்பாணம் வந்த நிலையில் பாதுகாப்பு தரப்பிடமுள்ள மக்களின் காணிகள் மக்களுக்கு வழங்கப்படும் என வாக்குறுதி வழங்கினார். கொடுத்த வாக்குறுதி இன்று வரை நிறைவேற்றப்படாமல் இரண்டு வருடங்கள் கடந்து விட்டது.
கோரிக்கை
கடந்த ஜனாதிபதி தேர்தலில் அநுர தலைமையிலான அரசாங்கத்தை அமைப்பதற்கு தமிழ் மக்கள் கணிசமான பங்களிப்பை வழங்கிய நிலையில் அவர் கொடுத்த வாக்குறுதிகளை உதாசீனம் செய்துவருகிறார்.
கடந்த கால அரசாங்கங்களை விட தற்போதைய அநுர தலைமையிலான அரசாங்கம் மிகக் குறைவான காணிகளை விடுவித்துள்ள நிலையில் வழங்கிய வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை முன்வைத்தனர்.







