தோழர் பத்மநாபா அவர்களுடன் உயிர் நீத்த தோழர்கள்

தோழர் நாபா

எமது இன்னுயிர்த் தோழர், செயலாளர் நாயகம் பத்மநாபா அவர்கள் பௌதிக ரீதியாக இந்த நிலவுலகில் இன்றில்லை. ஈழ மக்களின் விடுதலைக்காக உழைத்த அந்த மாபெரும் நிறுவனரின் உயிர் பறிக்கப்பட்டுவிட்டது. மக்களை நேசித்த அம்மகத்தான மனிதனின் மூச்சுக்காற்றைப் பறித்துவிட்டார்கள்.

தோழர் பத்மநாபாவின் இழப்பு எம்மைப் பொறுத்தவரை ஈடுசெய்ய முடியாதது. ஏன், தெற்காசியாவிலேயே முக்கியமான ஓர் இடதுசாரித் தலைவர் அவர். மார்க்சிய-லெனினிய சித்தாந்தத்தில் உறுதியான பற்றுள்ள தோழர் பத்மநாபா வரட்டுவாதங்களை நிராகரித்தவர்; நடைமுறைச் செயல்பாடுகளில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர். தான் கொண்ட கொள்கையில் வளைந்துகொடுக்காத உறுதி படைத்தவர்.

 

ஈழ தேசத்தின் விடிவுக்கான போராட்ட வரலாறு, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (EPRLF) வரலாறு, தோழர் பத்மநாபாவின் வரலாறு ஆகிய இவை பிரிக்கப்பட முடியாதவை. அவர், ஒரு மகத்துவம் மிக்க தலைவனுக்கும் புரட்சிவாதிக்கும் என்னென்ன குணாதிசயங்கள் இருக்க வேண்டுமோ அத்தனையும் ஒருங்கே அமையப்பெற்றவர்.

ஈழதேச மக்களின் விடுதலைக்கு அப்பால் தோழர் பத்மநாபாவிற்கு வேறெந்த நலன்களும் இருந்ததில்லை. அவருடைய சொந்த வாழ்க்கை ஒரு சாமானிய மனிதனுடையதைப் போன்று எளிமையானது.

 

தோழர் பத்மநாதன்.
—————-

பாட்டு ரவி என்று தோழர்களால் தோழமையோடு அழைக்கப்படும் இவரை நினைத்தாலே மனம் இனிக்கும்.
பாட்டும் கலகலப்பும் பகிடிகளும் நிறைந்ததாகவே இவரது சூழல் அமைந்திருக்கும். துன்பத்திலும் சோராதிருக்கும் மனசுக்கு சொந்தக்காரன். தன்னோடு இருப்பவர்களையும் உற்சாகமாக வைத்திருக்கும் வித்தைக்காரன்.

தோழர் பாட்டு ரவி கிழக்கில் திருக்கோயிலை பிறப்பிடமாகக் கொண்டவர். படிக்கின்ற போதே ஈழமாணவர் பொதுமன்றத்தில் இணைந்து பணிகளை மேற்கொண்ட இவர் 1983இல் சத்துருக்கொண்டான் பண்ணையில் நடந்த அரசியல் வகுப்பில் கலந்து கொண்ட நேரம் ஸ்ரீலங்கா படைகளினால் சுற்றி வளைத்து பிடிக்கப்பட்டவர்களில் ஒருவராக சிறை சென்றார்.

பின்னர் மட்டக்களப்பு சிறை உடைப்பின் மூலம் வெளிவந்தார்.
அம்பாறை மாவட்டத்தில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முக்கிய தலைவர்களில் ஒருவராய் இருந்த தோழர் ரவி பெரும்பாலான மக்கள் ஆதரவுடன் மாகாண சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறந்த பேச்சு வன்மையும், நேசமொடு பழகும் சுபாவமும் கொண்ட இவர் அம்பாறை தமிழ், முஸ்லிம் மக்களால் நேசிக்கப்பட்ட இளம் தலைவராக வளர்ந்து வந்தார்.

நெருக்கடியான நிலைமைகளில் நீண்ட காலம் காடுகளிலும் ஈழத்தின் பல பகுதிகளுக்கும் மாறு வேடங்களில் சென்று துணிச்சலுடன் செயல்பட்டவர். மக்களின் விடிவைப் பற்றிய புரட்சிப் பாடல்களை உணர்ச்சி பொங்க பாடுவார்.

அவருடைய நகைச்சுவை நிறைந்த உரையாடலால் கவரப்பட்டு எப்போதும் அவரைச் சுற்றி கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். எத்தகைய இடர் சூழ்ந்த வேளைகளிலும் சிரித்த முகத்துடன் தோழர்களை உற்சாகப்படுத்தியும் கடமை ஆற்றிய தோழர் பாட்டு ரவி .

தோழர் லிங்கன்.
————-
திருகோணமலையை பிறப்பிடமாக கொண்ட தோழர் லிங்கன் துறைமுகத் தொழிலாளர் ஒருவரின் மகன் ஆவார் .சிங்கள ராணுவத்துக்கு எதிரான யுத்தத்திலும் ,பாசிசத்துக்கு எதிரான ஜனநாயக மீட்புப் போராட்டங்களிலும் முன்னணியில் நின்று செயல்பட்டார். மரணிப்பதற்கு ஒரு வருடத்திற்கு முன்னர் தான்
தோழர் லிங்கன் ஒரு குழந்தைக்கு தகப்பனாகவும் ஆனார்.

திருகோணமலையில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை தடுப்பதற்கான பிரச்சார செயல்பாடுகளிலும், கலவரங்களின் போது தமிழ் மக்களை பெரும்பான்மை இனத்தவரிடம் இருந்து பாதுகாப்பதிலும் தீவிர கடமையாற்றினார்.

மரணிப்பதற்கு ஏழு வருடங்களுக்கு முன் மிக உயர்ந்த யுத்தப் பயிற்சி ஒன்றினை முடித்துக் கொண்ட தோழர் லிங்கன் செயலாளர் நாயகம் பத்மநாபா அவர்களின் மெய்ப்பாதுகாவலராக அவருடன் கூடவே இருந்து வந்தார்.

தோழர் பத்மநாபா அவர்களிடமிருந்து கற்றுக் கொண்ட பாணியிலேயே ‘நோ பிராப்ளம்’ என்று சொல்லியபடி பிரச்சனைகளை சமாளிக்க சிரித்தபடி செயல்படுவார்.

மகத்துவம் வாய்ந்த தோழரான செயலாளர் நாயகம் பத்மநாபாவை எப்போதும் நிழல் போல தொடர்ந்து வந்த தோழர் லிங்கன் தோழரது மறைவிலும் கூடவே சென்று விட்டார்.

தோழர் அன்பு முகுந்தன்.
—————
திருகோணமலையை பிறப்பிடமாகக் கொண்ட தோழர் அன்பும் முகுந்தன் தமது இறுதி மூச்சு வரை பிறந்த மண்ணையும் மக்களையும் பாதுகாத்து வாழவைக்கும் முயற்சியில் சோர்வின்றி உழைத்துக் கொண்டிருந்தார்.

இலங்கை இந்தியா ஒப்பந்தம் கைச்சாத் தானபின் ஈழத்தில் அமைதி சமாதானம் ஜனநாயகத்தை ஏற்படுத்த அயராது பாடுபட்டார். சிரித்தபடியே எந்த சிக்கல்களையும் விடுவித்து செயல்படுவதில் நிபுணராய் இருந்த தோழர் அன்பு முகுந்தன் மாகாண அரசாங்கம் இயங்கிய காலத்தில் புனருத்தாரண தொண்டர் படைக்கு பொறுப்பு வகித்து புனர்நிர்மான பணிகளில் பெரும் அக்கறை செலுத்தினார்.
அகதிகளாக தமிழகம் வந்திருக்கும் மக்களை கண்டு பேசுவதற்காக சென்னை வந்திறங்கிய இரண்டாம் நாளே பாசிச கொலைஞர்களுக்கு அவரும்இரையானார்

 

தோழர் கிருபாகரன்
××÷÷÷××
தோழர் கிருபா என்றும் ரூபன் என்றும் தோழர்களாலும் வடக்கு கிழக்கு மாகாண மக்களாலும் அன்புடன் அழைக்க பெற்று வந்த தோழர் கிருபாகரன் ஈழ மக்களின் விடுதலைக்காக ஒரு தசாப்தத்திற்கு மேலாக அல்லும் பகலும் அயராது உழைத்தவர்.

யார் இந்து கல்லூரியின் பழைய மாணவரான தோழர் கிருபா கிழக்கின் காரைதீவை பிறப்பிடமாகக் கொண்டவர்.
1973இல் கிழக்கு மாகாணத்தை சின்னா பின்னப் படுத்திய சூறாவளியினால் அகதிகளான மக்களுக்கு நிவாரண பணிகள் மேற்கொள்வதில் முக்கிய தொண்டராக முன்னின்று உழைத்தார்.

ஈழமாணவர் பொது மன்றத்தை கட்டியமைப்பதில் பெரும் பங்களிப்பைச் செய்தவர் பொலிவான தோற்றம் கொண்ட தோழர் கிருபா அம்பாறை மட்டக்களப்பு கிராமங்களில் பட்டிதொட்டி எல்லாம் பிரச்சாரம் நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். கிழக்கு மாகாண மக்களின் பாசத்துக்குரிய தலைவராக உயர்ந்த தமது கடின உழைப்பின் மூலம் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினராகவும் ஆனார்.

இலங்கை இந்தியா ஒப்பந்தம் கைச்சாத்தான பின் வடக்கு கிழக்கு பகுதிகளில் அமைதி, சமாதானம் ஏற்பட தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு அல்லும் பகலும் அயராது உழைத்தார்.
சமாதானத்தின் பகைவர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும் விளங்கினார்.

வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் மத்தியில் தேர்தலே நடத்த முடியாது அவர்களிடம் ஆட்சி பகிர்வினை ஏற்படுத்திக் கொடுப்பது எவ்வாறு? என எக்காளமிட்ட சிங்கள அரசின் வாயை அடைத்து வடக்கு கிழக்கில் மாகாண சபைக்கு தேர்தலை நடத்துவதற்கான சூழலை
ஈ.பி.ஆர்.எல்.எவ் உருவாக்கியதில் தோழர் கிருபாவில் கடுமையான உழைப்பு பாரிகயதாய் இருந்தது கிழக்கு மாகாண மக்களின் மிகப் பெரும்பான்மையான ஆதரவுடன் அவர் மாகாண சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வடக்கு கிழக்கு மாகாண அரசாங்கத்தில் நிதியமைச்சராக கடமை ஆற்றி தோழர் கிருபா அவர்கள் மாகாண சபையில்
சிறப்பு வாய்ந்த வரவு செலவுத் திட்ட உரையை நிகழ்த்தி இருந்தார்.

மக்கள் நலன் ஒன்றையே மூச்சாகக் கொண்டு ஈழ மண்ணில் அமைதி சமாதானம் சுபீட்சம் ஏற்பட விடா முயற்சியுடனும் கடின உறுதியுடனும் உழைத்து வந்த தோழர் கிருபாவின் இழப்பினால் உண்டாகி இருக்கும் வெற்றிடத்தை வடக்கு கிழக்கு மக்கள் நிச்சயம் உணர்வர்.

தோழர் யோக சங்கரி.
×÷×÷×÷×
தோழர் யோசங்கரி அவர்கள் ஈழமாணவர் பொதுமன்ற ஸ்தாபகர்களில் ஒருவராக
தமது அரசியல்பணிகளை துவக்கினார். ஈழ மக்களின் விடுதலைப் போராட்டத்தை சர்வதேச அளவில் பிரச்சாரப்படுத்துவதிலும் சர்வதேச முற்போக்கு தேசிய விடுதலை இயக்கங்களுடனும், மனித உரிமை விரும்பிகளுடனும், உறவுகளைப் பேணுவதில் மகத்தான பங்களிப்பை வழங்கினார்.

யாழ்ப்பாணம் நவாலியை பிறப்பிடமாகக் கொண்ட தோழர் சங்கரி 1989 இல் நடந்த பொதுத் தேர்தலில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.. தமது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை அர்த்தமுள்ள வகையில் அவர் பயன்படுத்தினார். ஸ்ரீலங்கா பேரினவாத அரசின் செயல்பாடுகளை அம்பலப்படுத்துவதிலும்,
எம்மத்தியில் வேரூன்றிய எதிர்ப்புரட்சிகர சக்திகளின் கொடூரங்களையும் உலகறியச் செய்வதிலும் பாராளுமன்றத்தை ஒரு களமாக பாவித்தார்.

தோழர் சங்கரி மூன்று குழந்தைகளின் தந்தை ஆவார் சிவந்த உயர்ந்த கன்ற ஆகிருதி படைத்த இவர் சிரிக்க சிரிக்க பேசி அனைவரிடம் அன்போடும் கலகலப்பாகவும் பழகும் குழந்தை உள்ளம் கொண்டவர். கட்சி கட்டுப்பாடு கட்சி தலைமையின் மேல் உறுதியான பற்றும் வைத்திருந்தவர் தோழர் சங்கரி அவர்கள். கொலைபாதகர்களின் துப்பாக்கி குண்டு பாய்ந்து இறுதி மூச்சை விடும்போதும் கூட ” எஸ் ஜி தோழருக்கு என்னாச்சு?” என்று கேட்டு விட்டு தான் தவிப்போடு கண்களை மூடினார்.
அவரது பூத உடல் பொதுமக்கள் அஞ்சலியின் பின் இலண்டன் மாநகரில் வாழ்ந்த அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

தோழர் கமலன் (எ)
அலியார் மும்மது மிஃகிலார்.
××××××××××
தோழர் கமலன் என்று தோழர்களால் அழைக்கப்பட்டு வந்த தோழர் அ.மு மிஃகிலார் அவர்கள் அம்பாறை மாவட்ட மருதமுனையை பிறப்பிடமாகக் கொண்டவர். மனைவியையும் நான்கு பிள்ளைகளையும் சொந்த கிராமத்திலே தங்க வைத்து விட்டு சமூக கடமைகளை ஆற்றுவதில் முழுமூச்சாக ஈடுபட்டவர். இவர் மரணிப்பதற்கு எட்டு நாட்கள் முன்பு தான் கடைசி குழந்தை பிரசவமான செய்தியை அறிந்திருந்தார்.

மார்க்சிய லெனினிச சித்தாந்தத்தில் ஆழ்ந்த பற்றுக் கொண்ட தோழர் கமலன் மக்களின் விடுதலையை வென்றெடுப்பதற்கான களத்திலும், தமிழ் முஸ்லிம் ஒற்றுமைக்காகவும், அரும்பாடுபட்டார். சிறந்த பிரச்சாரகவும், அமைப்பாளராகவும், மக்கள் மதிப்பில் உயர்ந்தார். தோழர்களையும் மக்களை அரசியல் ரீதியில் வளர்த்தெடுக்க முன்னின்று உழைத்தார். மட்டக்களப்பு அம்பாறையில் குறைந்தது 100 அரசியல் கல்வி பாசறைகள் ஆவது நடத்தி இருப்பார்.

கலை இலக்கியத்தில் ஆழ்ந்த ஈடுபாடும் அதுசார்ந்த ஏராளமான நண்பர்களையும் கொண்டிருந்த தோழர் கமலன் எப்போதும் புன்முறுவல் பூத்த படியே காணப்படுவார். சிறந்த பேச்சாளர். பிரச்சினைகளை கையாளுவதிலும் தோழர்களுக்கு இடையான சிக்கல்களை விடுவிப்பதிலும் லாவகமுடன் அவர் வகித்த பொறுப்பு யாராலும் நிரப்ப முடியாதது.

 

தோழர் தருமன்.
————
கிழக்கில் காரதீவை பிறப்பிடமாகக் கொண்ட தோழர் தருமன் மரணமடைவதற்கு ஏழு வருடங்களுக்கு முன் சிறப்பு யுத்த பயிற்சி முடித்துக் கொண்டு நாடு திரும்பினார். ஸ்ரீலங்கா அரசு படைகளுக்கு எதிரான, பாசிசத்துக்கு எதிரான ஜனநாயகம் மீட்பு போராட்டங்களில் உறுதியோடும் தீரமுடனும் முன்னணியில் நின்று போராடினார். எதிரிகள் இவன் இறந்து விட்டான் என்று கருதும் அளவுக்கு பல தடவை துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கானதோடு தோழர் தருமன்
பல தடவைகள் உயிர்த்தெழுந்தவர்.

காரதீவு திருக்கோயில் தம்பிலுவில் பகுதிகளில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் வேலைத்திட்டங்களை விரிவுபடுத்தி செயல்பட்டுவந்த தோழர் தருமன் சில மாதங்களுக்கு முன்னர்தான் நேசித்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

ஸ்தாபனத்தின் இடர் மிகுந்த காலகட்டங்களில் நெருக்கடியான நிலைகளில் முன்னணி போராளியாக செயல்பட்டவர். பல்வேறு போதல்களை எல்லாம் முறியடித்து வெற்றி கண்டவர்.

ஆனால் தர்மன் நிராயுதபாணியாய் தமிழகத்தில் தஞ்சம் அடைந்திருந்த வேளையில் பாசிச வெறியர்களின்
வஞ்சக கொலைக்கு பலியாகி போனார்..

தோழர் கோமளராஜா.
—————
மட்டுநகரை பிறப்பிடமாகக் கொண்ட தோழர் கோமளராஜா அவர்கள் ஐயா என அனைவராலும் அன்போடு அழைக்க பட்டவர். கோமளமான தோற்றமும் குழந்தை உள்ளமும் கொண்டவர் . நான்கு சின்னஞ்சிறு குழந்தைகளின் தந்தையான தோழர் அவர்கள் குடும்ப பொறுப்புடன் சமூக பொறுப்பை விரும்பி ஏற்று சீர்மை குன்றாது செயற்பட்டார். வடக்குக் கிழக்கு மாகாணசபை உறுப்பினராக மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதிலும் புனரமைப்பு திட்டங்களிலும் அக்கறை செலுத்தி சிறப்புற்றார். சென்னையில் தோழர்களோடு நின்றவேளையில்
பாசிச வெறியர்கள் துப்பாக்கி குண்டுக்கு பலியானார்.

தோழியர் கவிதா –
தோழியர் ஜெசிந்தா.

——–‘-‘——
தோழியர் கவிதா தோழியர் ஜெசிந்தா ஆகியோர் ஈழ தேச விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கும் ஈடுபாடும் அவசியம் என்பதை உணர்ந்து செயற்பட்ட முன்னணி பெண் போராளிகள்.
பிரதேச விடுதலை அதனுடன் இணைந்த சமூகப் புரட்சியுடன் பெண்களின் விடுதலையும் பிரிக்க முடியாதபடி இணைந்தது என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்கள்.

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பெண்கள் அமைப்பாக விளங்கிய ஈழப்பெண்கள் விடுதலை முன்னணியில் பொறுப்பு வகித்து ஆரம்ப காலம் முதலே கிழக்கு மாகாண அரசியல் பணிகளை கவனித்து வந்தனர். மட்டக்களப்பு அம்பாறை பகுதிகளில் ஈழ விடுதலை போராட்டம் தொடர்பாக பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் அயராது பாடுபட்டனர். அவர்களும் எதிர்பாராத விதமாக பாசிச வெறியர்களின் படுகொலைக்கு உள்ளானார்கள்.

தோழர் ரவி – தோழர் புவிநாதன்.
——————————————

தோழர் ரவி தோழர் புவி ஆகியோர் ஈழத்தின் காடுகளிலும் மேடுகளிலும் அலைந்து திரிந்து தேசத்தின் விடியலுக்காய் தம்மை அர்ப்பணித்து உழைத்தவர்கள்.

மக்களின் விடிவுக்காகவும் வாழ்க்கையின் எழிலுக்காகவும் தங்களை வருத்திக் கொண்டு போராடியவர்கள்.

தமது சொந்த நலங்கள் அனைத்தையும் கட்சியினதும்
நாட்டு மக்களின் நலங்களுக்கும் கீழ்ப்படுத்திக் கொண்டு உருக்குறுதியோடு செயல்பட்டதிலும் மக்களுக்காக போராடுவது மகத்துவமானது என வாழ்ந்து உணர்த்துவதிலும் முன்னுதாரண புருசர்களாக திகழ்ந்தனர்.
இவர்களும் இந்த பாசிச த்தின் கொலைவெறிக்கு தப்பவில்லை

Share this article

More News