
1. தெற்கில் தமிழர் விரோத அரசு வேண்டுமென வடக்கில் தோல்வியடைந்த கட்சிகள் விரும்புகின்றன.
2. எம்மிடம் இனவாதம் கிடையாது.
3. தேசிய மக்கள் சக்தி என்பது இலங்கை மக்களுக்கான கட்சியாகும்.
மேற்கண்ட விடயங்கள் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்னாயக்க 22.04.2026 புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் திருவாய் மலர்ந்த மந்திரங்கள் ஆகும்.
தெற்கில் அதாவது கொழும்பில் தமிழர் விரோத அரசு வேண்டுமென வடக்கில் தோல்வியுற்ற கட்சிகள் விரும்புகின்றன எனக் கூறுவதன் மூலம் தாம் தமிழர் விரோத அரசில்லை தமிழ் மக்களை இரட்சிக்க வந்த அரசு என்று தமிழ்மக்கள் காதில் தாழம்பூ வைக்க அமைச்சர் பிமல் ரத்னாயக்க முயற்சிக்கிறார் தேசிய மக்கள் சக்தி இலங்கையில் எப்போதும் ஆட்சி செய்திராத கட்சி. ஓர் உள்ளுராட்சி சபையைக்கூட கடந்த தேர்தல் வரை ஆட்சி செய்த கட்சியல்ல. சாதாரண தமிழ் மக்களுக்கு பரீட்சையமில்லாத கட்சி. அரசியல் நிலைவரம் புரிந்த தமிழர்களுக்கு இது ஊழலுக்கெதிரான கட்சி. எனவே உங்கள் இனவாத முகத்தை அறியாத காரணத்தால் ‘மாற்றம்’ என்பதை தமக்கான மாற்றம் என நம்பி உங்களுக்கு தமிழ்மக்கள் வாக்களித்தமை ஓர் விபத்தே என்பதை அமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும்.
உங்களுக்கு முன்னர் இலங்கையில் மாறி மாறி ஆட்சியில் இருந்த தமிழர் விரோத ஆட்சியாளர்களுக்கும், தேசிய மக்கள் சக்தி முகமூடியுடனான ஜே.வி.பி. ஆகிய உங்கள் ஆட்சிக்கும் என்ன வேறுபாடுகளை உங்களால் காட்ட முடியும்? கௌரவ அமைச்சர் ஏமாற்று அரசியல் செய்யாத – நேர்மையான – வெளிப்படைத் தன்மையான அரசியல்வாதியாக இருந்தால் அறிவுபூர்வமாகவும் மனசாட்சியுடனும் ஒழிப்பு மறைப்பின்றி வெளிப்படையாக தமிழ்மக்களுக்குப் பதிலளிக்க முடியுமா?
தமிழ் மக்கள் இந்திய விஸ்தரிப்பு வாதத்தின் ஏஜென்டுகள்:
உங்கள் கட்சியின் மூலக்கோட்பாடுகள்; (Five Lessions) ஐந்து. அதில் ஒன்று, இந்திய விஸ்தரிப்பு வாதம் என்பதாகும். இந்தக் கோட்பாட்டின் சாராம்சம் இந்தியா இலங்கையை ஆக்கிரமிக்கும் சக்தி. அது இலங்கையின் இறையாண்மைக்கு ஆபத்தானது. தமிழர்கள் இந்திய விஸ்தரிப்பு வாதத்தின் ஏஜென்டுகள் (முகவர்கள்). எனவே தமிழர்களும் இலங்கையின் இறையாண்மைக்கு ஆபத்தானவர்கள். இது ஜே.வி.பி.யின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்று என்பதை உங்களால் மறுக்க முடியுமா?
இந்தக் கொள்கையின் அடிப்படையில்தானே இந்திய – இலங்கை ஒப்பந்தத்தையும,; அதனூடாக செயல்படுத்தப்படவிருந்த தமிழர்களுக்க அதிகாரப் பகிர்வையும் எதிர்த்து 1987 – 88 களில் ஒரு வருடத்திற்கு மேலாக மூர்க்கமான வன்முறைப் போராட்டத்தை தொடர்ந்தீர்கள் என்பதை மறுக்க முடியுமா?
உங்கள் இந்த வன்முறைப் போராட்டத்தில் இந்தியப் பொருட்கள் விற்கும் கடைகள் தீக்கிரையாக்கப்பட்டன. மலிவான இந்திய இறக்குமதிகளைத் தவிர்த்து அவற்றை ஐரோப்பிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்ததால் மக்களின் வாழ்க்கைச் செலவு பல மடங்கு உயர்ந்தது. அதிகாரப்பகிர்வை ஆதரித்த விஜயகுமாரதுங்க உள்ளிட்ட ஏராளமான சிங்கள் அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள், மாணவர் அமைப்பினரை கொன்றொழித்தீர்கள் என்பதை மறுக்க முடியுமா?
விடுதலைப்புலிகளுடனான இறுதி யுத்தம் என்பது அடிப்படையில் இன அழிப்பை நோக்கமாகக் கொண்ட யுத்தம் என்பதை பல்வேறு வார்த்தைகளிலும் வடிவங்களிலும் பல்வேறு சர்வதேச நிறுவனங்கள் அறிக்கையிட்டுள்ளன. இது இரகசியம் அல்ல. இந்த யுத்தத்திற்கு கிராமம் கிராமமாக உங்கள் உறுப்பினர்கள் ஆதரவாளர்களை இளைஞர்களை சேர்த்து நீங்கள் இராணுவத்திற்கு அனுப்பியமையை மறுக்க முடியுமா? தமிழ் மக்களுக்கு எந்த வகையிலேனும் அதிகாரம் அல்லது அதிகாரப்பகிர்வு வந்துவிடக்கூடாது – வரவிடக்கூடாது என்ற நோக்கத்தில் தானே இறுதி யுத்தத்தில் பங்களித்தீர்கள் என்பதை மறுக்க முடியுமா?
இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு 28 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே நிர்வாக அலகாக செயற்பட்டு வந்தது. அதனை நீதிமன்றத்தினூடாகப் பிரித்து இணைந்த தமிழர் பிரதேச ஆட்சியை இல்லாதொழித்ததை மறுக்க முடியுமா?
பிரித்ததன் மூலம் வேகமாக வடக்கு கிழக்கு மாகாணங்களை சிங்கள – பௌத்த ஆக்கிரமிப்பின் கீழ் கொண்டு வருவதும் அதனூடாக தமிழின அழிப்பை வேகப்படுத்துவதும்தானே; உங்கள் நோக்கம்? இதனை இல்லையென்று உங்களால் மறுக்க முடியுமா? மேற்கண்டவையலெ;லாம் சிங்கள – பௌத்த இனவாதமல்லாமல் வேறென்ன?
முன்னைய ஆட்சியாளர்கள் ஏட்டிக்குப் போட்டியாக சிங்கள – பௌத்த மேலாதிக்கவாத ஆட்சி புரிந்தவர்கள் தான். ஆனால் அவர்கள்தான் இனவாதிகள் என்று நீங்கள் கூறினால், மேற்கண்ட உங்கள் செயற்பாடுகள் இன ஒற்றுமை – இன சமத்துவம் வாய்ந்த செயற்பாடுகளா?
உங்கள் கட்சிக் கொள்கையிலும் இதுவரையான மேலே பட்டியலிடப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் தமிழர் விரோத, சிங்கள – பௌத்த மேலாதிக்க வெளிப்பாடுகளே. இல்லையென உங்களால் மறுக்க முடியுமா?
‘நாம் அவ்வாறு செயற்பட மாட்டோம். எம்மிடம் இனவாதம் கிடையாது’. உங்களிடம் இனவாதம் கிடையாதென்றால் முன்னைய இனவாத ஆட்சியாளர்கள் செயற்படுத்திக்கொண்டிருந்த சிங்கள – பௌத்த மேலாதிக்கவாத திட்டங்கள் – செயற்பாடுகளில் ஒன்றையேனும் இதுவரை நிறுத்தினீர்களா? மாறாக அவற்றை வேகமாக செயற்படுத்துவதில்தானே உங்கள் ஆட்சி வேலை செய்கிறது?
குருந்தூர் மலையில் அகழ்வாய்வு மட்டுமே நடத்தி வரலாற்று உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும். எந்தவித கட்டுமானமும் கட்டக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்ட பின் நீதிமன்ற உத்தரவை அலட்சியம் செய்து பொலிஸ், இராணுவம், தொல்லியல் திணைக்களம், பிக்குகள் இணைந்து சட்டவிரோதமாக கட்டியெழுப்பியது தானே குருந்தூர் விகாரை? நீதிமன்ற உத்தரவை மீறி செயற்பட்ட இவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுத்தீர்களா? அந்த சட்டவிரோத விகாரையை அகற்றினீர்களா?
தையிட்டியில் தனியார் காணியை ஆக்கிரமித்து இராணுவம் கட்டிய விகாரை! இது அப்பட்டமான ஆக்கிரமிப்பும் சட்டவிரோத கட்டுமானமும் ஆகும். இந்த சட்டவிரோத செயற்பாட்டை செய்த இராணுவத்தினர் மீது நடவடிக்கை எடுக்க ஏன் முடியவில்லை? சட்டவிரோத விகாரையை ஏன் அகற்ற முடியவில்லை?
வெடுக்குநாறிமலை பௌத்தத்திற்குரியது. அதுபற்றி விரைவில் வர்த்தமானி அறிவித்தல் விடப்படும். அது கி.மு. 2ம் நூற்றாண்டு பௌத்த அடையாளங்களைக் கொண்டுள்ளது என கரடி விடுகிறார் உங்கள் பௌத்த சாசன அமைச்சர். 2ம் நூற்றாண்டில் தமிழ் பௌத்தமே நிலவியது. சிங்கள பௌத்தம் அல்ல. இலங்கைக்கு பௌத்தம் அறிமுகப்படுத்தப்பட்டது கி.மு. 3ம் நூற்றாண்டு. அப்போது இலங்கையின் அரசன் தேவநம்பிய தீசன் (தேநம்பிய திஸா அல்ல). தேவநம்பிய தீசன் ஓர் தமிழ் அரசன். தேவநம்பிய தீசனின் தந்தை பெயர் மூத்தசிவன். தேவநம்பியதீசனின் சகோதரர்களில் ஒருவன் மகாசிவன். இந்தப் பெயர்களே சைவத் தமிழ் மன்னர் குடும்பம் என்பதை பறைசாற்றுகிறது.
இலங்கைக்கு பௌத்தம் அறிமுகப்படுத்தப்பட்ட போது இங்கு சிங்களம் என்றோர் மொழி தோன்றவே இல்லை. பௌத்தம் அறிமுகப்படுத்தப்பட்டு ஏறத்தாழ பத்து நூற்றாண்டுகள் கழித்தே சிங்களம் என்ற மொழி வழக்கிற்கு வந்தது. எனவே பௌத்தம் அறிமுகப்படுத்தப்பட்டதும் கணிசமாக வளர்க்கப்பட்டதும் தமிழ் மக்களால்தான். அதாவது பத்து நூற்றாண்டுவரை மேல் தமிழ் பௌத்தமே நிலவியது. எனவே வெடுக்குநாறி மலையில் பௌத்த அடையாளம் இருந்தால் அது தமிழ் பௌத்த அடையாளமாகத்தான் இருக்க முடியும். எனவே கண்டுபிடிக்கப்பட்ட ஆதாரங்களை உண்மை விளக்கங்களுடன் மக்களுக்கு காட்சிப்படுத்த வேண்டுமேயன்றி அதனை சிங்கள – பௌத்த மேலாதிக்கத்திற்குரிய இடமாக திரித்துக்கூறக் கூடாது. ஆனால் இந்த தொல்லியல் ஒழுக்க விதிகளை மீறி பௌத்த சாசன அமைச்சர் பௌத்த ஆக்கிரமிப்பு செய்ய முனைவதற்கு இன-மதவாதம் இல்லாமல் என்ன பெயர்?
திருகோணமலையில் குச்சவெளிப்பிரதேச சபைக்குரிய பிரதேசத்தில் தமிழ் முஸ்லிம் மிகப்பெரும்பான்மையாக வாழும் அப்பகுதியில் ஆயிரத்திற்கும் குறைவான சிங்களவர் வாழும் இப்பகுதியில் 25ற்கும் மேற்பட்ட புத்த கோயில்கள், தமிழர் பயன்படுத்தும் காணிகளை ஆக்கிரமித்து கட்டப்படுகிறது. இந்த ஒவ்வோர் விகாரையும் பல நூறு ஏக்கர் நிலங்களை விகாரையின் பெயரால் கையகப்படுத்த முனைகின்றனர். சிங்களவரே இல்லாத இடங்களில் இவ்வளவு விகாரைகள் கட்டப்படுவது மதவெறியின்றி வேறென்ன? நில ஆக்கிரமிப்பு நோக்கமின்றி வேறென்ன? கலாசார அழிப்பு நோக்கமின்றி வேறென்ன?
உங்கள் கட்சிக்கொள்கையிலிருந்து இன்றுவரையான செயற்பாடுகள் அனைத்தும் உங்களையும், உங்கள் கட்சியையும், உங்கள் ஆட்சியையும் அப்பட்டமான சிங்கள – பௌத்த மேலாதிக்க வாதிகளாக வெளிப்படுத்தவில்லையா?
தேசிய மக்கள் சக்தி என்பது இலங்கை மக்களுக்கான கட்சியாகும்.இலங்கை மக்களுக்கான கட்சி என்றுதான் ஐக்கிய தேசியக்கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, பொதுஜன பெரமுன, சிறிலங்கா சுதந்திரக்கட்சி அனைத்தும் தம்மைப் பிரகடனப்படுத்துகின்றன.
இலங்கையருக்கான கட்சி என்றால் பலமொழி, பலமத மக்களைக்கொண்ட நாட்டில் அனைத்து மொழிகளையும் மதங்களையும் கலாசாரங்களையும், எவரும் இன்னொன்றின் மீது ஆதிக்கம் செலுத்தாத அனைவரின் தனித்துவங்களையும் ஏற்று அவர்களது தனித்துவங்களைப் பாதுகாக்கும் வகையிலான அரசியல் யாப்பும் ஆட்சியும் அமைய வேண்டும். அல்லது நீங்கள் அமைக்க வேண்டும்.
வடக்கு, கிழக்கில் பௌத்தம் நான்காவது மதம். இலங்கையை மதச்சார்பற்ற நாடாகவோ குறைந்தபட்சம் வடக்கு – கிழக்கை மதச்சார்பற்றதாகவோ பிரகடனம் செய்ய முடியுமா?
அரசியல் யாப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மாகாண சபைத் தேர்தலை உடனே நடத்தி அதற்கு பகிரப்பட்ட பொலிஸ் காணி அதிகாரங்கள் உட்பட அனைத்து அதிகாரங்களையும் செயற்படுத்த வழிவகை செய்ய முடியுமா? மூன்றில் இரண்டு பெரும்பான்மை உங்களுக்கு உண்டு. செயற்படுத்தும் ஆற்றல் உங்களுக்கு உண்டு. ஆனால் செய்ய மாட்டீர்கள். ஏனென்றால் உங்கள் கொள்கையே தமிழருக்கு விரோதமானது. சிங்கள – பௌத்த மேலாதிக்க சிந்தனையின்பாற்பட்டது. எனவே இனிமேலும் நாம் இனவாதியல்ல, மதவாதியல்ல எல்லா மக்களுக்குமான கட்சி என சாத்தான் வேதம் ஓதுவது போன்று செயற்படாமல் அறிவுபூர்வமாகவும், உண்மையான தேசபக்தியுடனும் செயற்பட முயற்சி செய்யுங்கள். சிங்கள – பௌத்த மேலாதிக்கவாதத்தின் கைதியாக நீங்கள் இல்லை என்பதை நிரூபியுங்கள்.
கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன்







