
இலங்கை தமிழ் அரசுக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர்கள் இன்று யாழ்ப்பாணத்தில் சந்தித்து முக்கிய அரசியல் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இச்சந்திப்பு, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே. சிவஞானத்தின் இல்லத்தில் இன்று காலை இடம்பெற்றது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் சி.வீ.கே. சிவஞானம் மற்றும் எம்.ஏ. சுமந்திரன் கலந்து கொண்டதுடன், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பங்காளி கட்சிகளின் சார்பில் த. சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், மு. சந்திரகுமார், சி. வேந்தன் மற்றும் நா. இரட்ணலிங்கம் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த சந்திப்பின் போது, தற்போதைய அரசியல் சூழ்நிலை, சிறுபான்மை கட்சிகள் இணைந்து உருவாக்கியுள்ள புதிய கூட்டணி மற்றும் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் எம்.ஏ. சுமந்திரன், இக்கலந்துரையாடல் எதிர்கால அரசியல் ஒத்துழைப்புக்கான ஒரு முக்கிய முன்னேற்றமாக அமைந்துள்ளதாக குறிப்பிட்டனர்.







