
யதீந்திரா
இது பதினேழாவது மே மாதம். ஒரு காலத்தில், கார்த்திகை என்றாலே எழுச்சியின் பூரிப்பு என்றிருந்த நாட்கள் போய், இப்போது, அழிவின் விளைவுகளை எண்ணி ஆண்டுகள் தோறும் ஒப்பாரி வைக்கும் மாதமாக, ஒவ்வொரு மே மாதமும் நம்மை சாதாரணமாக கடந்து செல்கின்றது. இங்கிருந்து எங்கு செல்வது என்று தெரியாமலேயே முள்ளிவாய்க்கால், நீதி, கஞ்சி என்னும் சொற்களுடன் சில நாட்கள் பரபரப்பாகி, அனைத்தும் சாதாரணமாகிவிடுகின்றது. இது போன்றதொரு மே மாதத்தில்தான் எல்லாமும் முடிந்து போனது – ஈழத் தமிழ் அரசியல் வரலாற்றின் இறுதி அத்தியாயம் முள்ளிவாய்க்காலில் பேரழிவானது. இந்தப் பேரழிவிற்கான விதையும் ஒரு மே மாதத்தில்தான் புதையுண்டது – அது தற்செயல்தான் ஆனால் அனைத்தும் எவ்வாறு தற்செயலானது என்பதுதான் விசித்திரம்.
அதே போன்று, இரத்தம் தோய்ந்த வரலாற்றிற்கு அடித்தளமிட்ட, 1976ம் ஆண்டு வட்டுக் கோட்டைத் தீர்மானமும் மே மாதத்தில்தான் நிகழ்ந்தது. ஈழத் தமிழர் மீது பரிவுணர்வு கொண்டிருந்த ஒரேயொரு வல்லரசான இந்தியாவின் இரக்கப் பார்வையை, ஈழத் தமிழர்கள் முற்றிலுமாக இழந்து போவதற்கான விதையும், ஒரு மே மாதம்தான் ஊன்றப்பட்டது. 1991. மே, 21ம் திகதி, தமிழ் நாட்டில் வைத்து, இந்தியாவின் முன்னாள் பிரதமரும், உலகின் செல்வாக்குமிக்க தலைவர்களில் ஒருவருமான நேரு குடும்பத்தின் வாரிசான ராஜீவ்காந்தி கொல்லப்பட்டார். வரலாற்றை பின்நோக்கி பார்த்தால் இந்தக் கொலையுடன் ஈழத் தமிழர் அரசியலுக்கான புதை குழியும் தமிழர்களாலேயே தோண்டப்பட்டது. அதற்கு பொறுப்பான, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூன்று தசாப்தகால அரசியல் சகாப்தமும் 2009 மே மாதத்தில் முடிவுற்றது. – அது உண்மையிலேயே தற்செயலானதா – நாமொன்றும் அறியோம் பராபரமே!
இந்த சம்பவம் இடம்பெற்ற பின்னர், பிற்காலத்தில் புளொட் இயக்கத்தின் தலைவராக இருந்தவரும், தற்போது ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கூறிய ஒரு கூற்றை, இந்தியப் பத்திரிகையாளர் நாராயணசுவாமி, ராஜீவ் மறைவின் முப்பதாவது ஆண்டை நினைவு கூர்ந்து எழுதிய கட்டுரையில் பதிவு செய்திருந்தார். சித்தார்த்தன் கூறினாராம் – அதாவது, “நான் தயக்கமின்றிக் கூறுகின்றேன், பிரபாரனுக்கு ஏழரைச் சனி பிடித்துவிட்டது, அவர் உயிரோடு இருக்கும் வரையில், அந்தச் சனி அவரை விடப்போவதில்லை. சாஸ்திர நம்பிக்கையின் படி, ஒருவர் ஏழரைச் சனிக்கு ஆளானால், அது ஏழரை ஆண்டுகளில் முடிந்துவிடும் என்பது நம்பிக்கை. ராஜீவ் காந்தியின் கொலையின் விலை மிகவும் கடுமையாக இருக்கும் என்பதை சித்தார்த்தன் ஆழமாக உணர்ந்திருந்தார் என்றும் கட்டுரையாளர் குறிப்பிட்டிருக்கின்றார்.
பிற்காலங்களில் நான் தனிப்பட்டரீதியில் உரையாடிய சந்தர்ப்பத்திலும் கூட, சித்தார்த்தன் அவ்வாறுதான் குறிப்பிட்டார் – அதாவது, ராஜீவ் கொலையுடன், ஈழத் தமிழர் போராட்டம் வெற்றிபெற வாய்பிருக்கும் என்னும் நம்பிக்கை தனக்கு அற்றுப்போய்விட்டதாகக் கூறியிருந்தார். இவ்வாறான பார்வை வேறு பலரிடமும் இருந்தது, ஆனாலும் விடுதலைப் புலிகளின் இராணுவ வெற்றிகள், இந்த யதார்த்தத்தை மறைக்கும் திரையானது. ஆனால் 1991 மே மாதத்தில் தலைநீட்டிய சனி, 2009 மேமாதம் முள்ளிவாய்க்காலில் ருத்திர தாண்டவமாடி ஒய்திருந்தாலும் கூட, ஈழத் தமிழர் அரசியலைப் பீடித்திருந்த, அந்தச் சனியின் தாக்கம் இப்போதும் விடுவதாக இல்லை.
இந்தியாவின் அன்றைய அரசியல் முடிவுகளுக்கு பின்னால், அன்றிருந்த பனிப்போர் கால அரசியல் அச்சங்களும், அதன் பிராந்திய தாக்கங்களுமே பிரதான காரணங்களாக இருந்தன என்பது எந்தளவிற்கு உண்மையோ, அதேயளவிற்கு உண்மை, அவ்வாறான அச்சங்களை இந்திய மூலோபாய சமூகத்திற்கு வழங்கியதும் கூட, அன்றைய ஆட்சியாளராக இருந்தவரான ஜே.ஆர்.ஜெயவர்த்தனதான். இந்தியாவின் அன்றைய மூலோபாய கவலைகளை புறம்தள்ளி, முற்றிலும் அமெரிக்க சார்பு நிலைப்பாட்டை மேற்கொண்டார். இதன் விளைவாகவே, இந்தியாவின் தலையீடுகள் நிகழ்ந்தன. அன்றைய சூழலில், அவ்வாறானதொரு தலையீட்டைச் செய்வதைத் தவிர, புதுடில்லிக்கு வேறு தெரிவுகள் இருந்திருக்கவில்லை. 1982இல், அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகனின் அழைப்பில், பிரதமர் இந்திராகாந்தி, வோசிங்கடனுக்கு விஜயம் செய்திருந்தார். அங்கு அவர், தெரிவித்திருந்த கருத்துக்கள், இந்தியாவின் பிராந்திய முதன்மைவாத அணுகுமுறையை தெளிவாக முன்வைத்திருந்தது, அங்கு அவர் பதிவு செய்திருந்தார், ஒரு நாடு இன்னொரு நாட்டிற்கு என்ன செய்ய வேண்டும் என்பதைக் கூறுவது ஒரு இலக்காக இருக்க முடியாது என்றே நான் நம்புகின்றேன், இதனையே எனது நாட்டிலும், எங்களுடைய அயல்நாடுகளிலும் ஏற்படுத்த முயற்சிக்கின்றேன் என்று குறிப்பிட்டிருந்தார்.
1984இல், ஜே.ஆர் அமெரிக்காவிற்கு விஜம் செய்திருந்தார், அதற்கு முன்பதாக, சீனாவிற்கு விஜயம் செய்திருந்தார். சீனாவிடம் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான ஆயுத உதவிகளை கோரியிருந்தார். வோசிங்கடனில் வைத்து, அமெரிக்க குரல் நிறுவனத்தை இலங்கையில் அமைப்பது, திருகோணமலை கடற்படைத் தளத்தை, அமெரிக்க கடற்படை பயன்படுத்து தொடர்பான விடயங்களின் முன்னேற்றங்களை ஆராய்ந்தார். அத்துடன், பாக்கிஸ்தான், இஸ்ரேல், தென்னாபிரிக்காவின் ஊடாக, ஹெலிகொப்டர்கள், ஆயுதங்களை பெறுவதற்கான உடன்பாடு தொடர்பிலும் உரையாடினார். இந்தியாவை எதிர்கொள்ளும் ஒரு உக்தியாகவே இவ்வாறான நகர்வுகளை மேற்கொண்டார்.
அமெரிக்க – சோவியத் இருதுருவ உலக ஒழுங்கில் இந்தியா அணிசாரா கொள்கையை உயர்த்திப் பிடிந்திருந்த நிலையில், அமெரிக்காவோ, பாக்கிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்திருந்தது. இந்த நிலையில், இந்தியாவின் சுயவிருப்பத் தீர்மானங்களை முன்கொண்டு செல்ல வேண்டுமாயின், ஒரு மேலாதிக்க சக்தியின் ஆதரவு தேவைப்பட்டது. அன்றைய உலக ஒழுங்கில் அமெரிக்காவிற்கு மாற்று என்றால் அது சோவியத் யூனியன் மட்டும்தான். கிழக்கு பாக்கிஸ்தானை உடைக்கும் முயற்சியின் போது, அமெரிக்காவின் தலையீட்டை சமநிலைப்படுத்த வேண்டுமாயின் சோவியத் ஆதரவு தவிர்க்க முடியாதது என்பதே இந்தியாவின் அணுகுமுறையாக இருந்தது. இந்த அடிப்படையில் அன்றைய இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் சிக்கலான உறவே இருந்தது. 1971இல் பாக்கிஸ்தான் யுத்தம் இடம்பெறுவதற்கு முன்னதாக, இந்திராகாந்தி வோசிங்டனுக்கு விஜயம் செய்திருந்தார். ஆனாலும் இருதரப்பு போச்சுக்களில் எதிர்பார்த்த முன்னேற்றங்கள் இருக்கவில்லை. அப்போதைய அமெரிக்க வெளிவிவகாரக் கொள்கையின் இன்னொரு பெயராக நோக்கப்பட்ட ஹென்றி கிஸ்ஸிங்கர், இந்திராகாந்தி தொடர்பிலும் இந்தியா தொடர்பிலும் மாறுபாடான பார்வைகளையே கொண்டிருந்தார். அப்போதைய ஜனாதிபதி நிக்சனுக்கும் கிஸ்ஸிங்கருக்கும் இடையிலான இரகசிய சம்பாசனைகள் பின்னர் கசிந்தது.
இந்திய-பாக்கிஸ்தான் யுத்தத்தின் போது, பாக்கிஸ்தானுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே நிக்சன் நிர்வாகம் மேற்கொண்டிருந்தது. இந்தியாவை அச்சுறுத்தும் நோக்கில், அமெரிக்கா அதன் சக்திவாய்ந்த 7வது கடற்படையை வங்காள விரிகுடாவிற்கு நகர்த்தியது. இந்தியா முதல் முதலாக ஒரு அனுவாயுத சக்தியை எதிர்கொள்ளும் நெருக்கடி ஏற்பட்டது. இந்தியர்கள் அடித்து வீழ்த்தப்பட வேண்டும் என்னும் நிக்சனின் வார்த்தைகள் பின்னர் அம்பலமானது. யஹ்யா கான் தலைமையிலான பாக்கிஸ்தான் வீழ்சியுற்றால், அமெரிக்காவின் சீனாவை நோக்கிய மூலோபாயம் சிக்கலுக்குள்ளாகலாம் என்பதே அமெரிக்காவின் பார்வையாக இருந்தது. இந்தியா மேற்கு பாக்கிஸ்தானுக்குள் நுழைந்தால் அப்போது ஏதாவது செய்வோம் என்பதே கிஸ்ஸிங்கரின் பதிலாக இருந்தது. அமெரிக்க நகர்வால் இந்திராகாந்தி பதட்டமடையவில்லை – பெரிய கப்பலை கொண்டு எங்களை அச்சுறுத்தலாம் என்று எண்ணுகின்றனர் என்னும் கூற்றுடன், யுத்தத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பதாக, சோவித் யூனியுடனும் அமைதி மற்றும் நட்புக்கான புதிய உடன்பாட்டில் கைச்சாத்திட்டார். இதன் மூலம், பாக்கிஸ்தானை உடைக்கும் நகர்வில் வெற்றிபெற்றார்.
இவ்வாறானதொரு பின்புலத்தில்தான், 1977இல், பெரும்பாண்மை பலத்துடன் அதிகாரத்திற்கு வந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன, கொழும்பின் அதுவரையான அணிசாரா வெளிவிவகார அணுகுமுறையிலிருந்து விலகி, அமெரிக்க சார்பு கொள்கையை நோக்கிச் சாய்ந்தார். இதன் விளைவாகவே புதுடில்லி கொழும்பு தொடர்பில் அதிருப்தியடைந்தது. கொழும்பின் அணுகுமுறைகளுக்கான பதிலாகவே தமிழ் ஆயுத அமைப்புக்களுக்கு பயிற்சியளிக்கும் தீர்மானத்தை இந்தியா மேற்கொண்டது. உண்மையில் கொழும்பின் அணுகுமுறைக்கு இந்தியா எதிர்வினையாற்றியது என்றே இதனை வரலாற்றுரீதியாக நோக்க வேண்டும்.
தமிழ் ஆயுத அமைப்புக்களுக்கு பயற்சியளித்தமை தொடர்பில், இப்போதும் தென்னிலங்கையில் அதிருப்தி வெளிப்படுவதுண்டு, ஈழத் தமிழர்களுக்காக இலங்கையை துண்டாட இந்தியா முற்பட்டதான அரசியல் பிரச்சாரங்கள் இப்போதும் ஆங்காங்கே கண்சிமிட்டுவதுண்டு. ஆனால் உண்மையோ வேறு, அன்றிருந்த அச்சமான அரசியல் சூழலில், தமிழ் ஆயுத இயக்கங்களை வேறு சக்திகள் பயன்படுத்திவிடக் கூடிய ஆபத்துக்களை உணர்ந்ததன் விளைவாகவே, இந்தியா அவர்களை தங்களுடைய முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர எண்ணியது. ஏனெனில் அப்போது, இங்கிலாந்தை தளமாகக் கொண்டியங்கிய ஈரோஸ் இயக்கத்தின் தலைவர்கள், பாலஸ்தீனத் தொடர்பை ஏற்படுத்தியிருந்தனர். அதன் ஊடாக ஏராளமான இயக்க உறுப்பினர்கள் பாலஸ்தீன பயற்சிக்கு அனுப்பப்பட்டனர். இவ்வாறு பயிற்சிக்கா செல்பவர்களை இந்தியாவிற்கு எதிரான சக்திகள் பயன்படுத்தக் கூடிய வாய்ப்பிருந்தது. இதனைத் தடுக்கும் நோக்கிலேயே இந்தியா அதன் அதுவரையான அமைதியை கலைத்தது. ஆனால் இலங்கையின் ஆள்புல ஒருமையை ஒரு போதும் உடைய விடக் கூடாது என்பதில் இந்திராகாந்தி உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார்.
2010இல், அப்போதைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இராசம்பந்தனுடனான நேர்காணலின் போது, அவர் கூறியது, நாங்கள், இந்திரகாந்தியை சந்தித்து பேசிய சந்தர்ப்பத்தில், அவர் கூறினார், “பெரும்பாண்மை மக்களின் மனதைப் புண்படுத்தாமல் உங்களுக்கு நான், ஒரு தீர்வை பெற்றுத் தருவேன்” இதனைக் கூறிவிட்டு, என்னைப் பார்த்து சம்பந்தன் அப்படியென்றால் என்ன தம்பி பொருள் என்றார்…
இந்தியாவின், இலங்கை தொடர்பான அன்றைய அணுகுமுறையை, அன்றைய அரசியல் சூழலிலிருந்தே புரிந்துகொள்ள வேண்டும். இந்திய பாக்கிஸ்தான் யுத்தத்திற்கு முன்பதாக, இந்திரா வழங்கிய நேர்காணல் ஒன்றில், பங்களாதேஸ் கெரிலாக்களை நீங்கள் ஆதரிக்கின்றீர்களா – நீங்கள் தனிநாட்டை ஆதரிக்கின்றீர்களா என்று கேட்ட போது – இந்திராவின் பதில் : அதனை ஆதரிக்கின்றோமா அல்லது இல்லையா என்பது அல்ல இங்கு கேள்வி – இது போன்ற விடயங்கள் ஏன் நடக்கின்றன என்பதுதான் கேள்வி. எங்களுடைய அயல்நாடுகளில் இடம்பெறும் விடயங்கள் தொடர்பில் எங்களுடைய கண்களை முடிக்கொண்டிருக்க முடியுமென்று நான் எண்ணவில்லை. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான், கொழும்பின் அணுகுமுறைகள் இந்தியாவின் நேரடித் தலையீட்டுக்கு வழிவகுத்தது.
ஆனால் அவ்வாறான நேரடியான தலையீட்டின் போது கூட, இந்திராகாந்தியின் இலங்கைக்கான விசேட பிரதிநிதி, ஜி.பார்த்தசாரதி ஒரு விடயத்தை ஆயுத அமைப்புக்களின் தலைவர்களுக்கு தெளிவாக எடுத்துரைத்திருந்தார். அதாவது, உங்களுக்கு ஆயுதப் பயிற்சியளிப்பது, தனிநாட்டை பெற்றுத் தருவதற்காக அல்ல, இந்தியா ஒரு போதும் தனிநாட்டை ஆதரிக்காது அத்துடன் அனுமதிக்கவும் மாட்டாது. இதற்கு சாட்சியாக இப்போதும் சிலர் இருக்கின்றனர். ஜக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்கள் கௌரவமாக வாழக் கூடிய ஒரு அரசியல் ஏற்பாட்டைப் பெற்றுக் கொடுப்பதுதான் இந்தியாவின் நோக்கமாக இருந்தது – தமிழ் நாட்டை போன்றதொரு அதிகார அலகு. ஆனால் இதனை ஜே.ஆரும் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை – அதே போன்று பிரபாகரனும் புரிந்துகொள்ளவில்லை. அன்று இந்தியா வழங்கிய வாய்ப்பை பயன்படுத்தியிருந்தால், இலங்கையின் உள்நாட்டு யுத்தம் சில நூறு உயிரிழப்புக்களோடு முடிவுற்றிருக்கும், ஈழத் தமிழர்கள் இந்தளவு பெரிய விலையொன்றை கொடுத்து, அரசியல் கையறு நிலைக்குச் சென்றிருக்கும் நிலைமையும் ஏற்பட்டிருக்காது. இந்தியாவை விரோதித்து தனிநாட்டை அடைய முடியுமென்னும் கற்பனைதான் ராஜீவ் கொலையாக உருமாறியது. ராஜீவ்காந்தி மீண்டும் தேர்தலில் வெற்றிபெற்றால், அவர் மீண்டும் இந்திய அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்புவிடுவார் என்னும் புரிதலிலேயே அந்த விசப்பரிட்சை நிகழ்ந்தது. ஏற்கனவே ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் பத்மநாபா தமிழ் நாட்டில் வைத்து வெற்றிகரமாக கொல்லப்பட்டமையானது, ராஜீவ் காந்தி கொலைக்கான ஒத்திகையாகியது. 1991 மே 21இல், விதைக்கப்பட்டது 2009 மே மாதத்தில் அறுவடையானது.
ஈழநாடு கட்டுரை – 24.05.2026







