
யாழ். தீவக மக்களுக்காக இந்தியாவின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் அதிநவீன புதுப்பிக்கத்தக்க வலுசக்தித் திட்டத்தின் முதற்கட்ட செயற்பாடுகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திற்குள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தின் நெடுந்தீவு, அனலைதீவு மற்றும் நயினாதீவு ஆகிய தீவுகளில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக, இந்தியாவின் 11 மில்லியன் டொலர் முழுமையான மானிய நிதியுதவியுடன் அதிநவீன புதுப்பிக்கத்தக்க வலுசக்தித் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
நெடுந்தீவில் அமைந்துள்ள திட்டப் பகுதிக்கு நேரடியாகச் சென்று கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்ட பின்னர் சமூகவலைத்தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ள சந்தோஷ் ஜா இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
அபிரதான மின்விநியோகக் கட்டமைப்புடன் இணைக்கப்படாத இந்தத் தனித்தனி தீவுப் பகுதி மக்களுக்கு நம்பகமான மற்றும் தூய்மையான பசுமை ஆற்றலை வழங்குவதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
அதற்கமைய, சூரிய சக்தி, காற்றாலை, மின்கலச் சேமிப்பு மற்றும் அவசரத் தேவைகளுக்கான டீசல் மின்பிறப்பாக்கி வசதிகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக 4.3 மெகாவோல்ட் மின் உற்பத்தித் திறனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
நிலையானதொரு எதிர்காலத்தை இலக்காகக் கொண்டு வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வரும் இந்த திட்டத்தின் முதற்கட்டப் பணிகள் ஓகஸ்டில் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், இந்த ஆண்டின் இறுதிக்குள் ஒட்டுமொத்தத் திட்டத்தினதும் முழுமையான செயற்பாடுகள் அனைத்தும் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார்.
இந்திய அரசாங்கத்தின் இந்த நிதிப் பங்களிப்பானது, தீவக மக்களின் அன்றாட மின் தேவையைப் பூர்த்தி செய்வதுடன் அவர்களின் பொருளாதார வாழ்வாதார மேம்பாட்டுக்கும் பெரும் பக்கபலமாக அமையும் என சந்தோஷ் ஜா மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான இந்தியத் தூதுவர் எச்.ஈ. சந்தோஷ் ஜா, யாழ்.நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு நேற்று (03) விஜயம் செய்து வழிபாடுகளில் ஈடுபட்டார்.
அதனைத் தொடர்ந்து ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தையும் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் யாழ் இந்திய துணைத் தூதர் சாய் முரளி மற்றும் தூதரக அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.







