வடமாகாண பனைதொழில் வல்லுனர்களுக்கு இடையிலான மாபெரும் போட்டி

முதன் முதலாக வடமாகாணத்தின் பனைத்தொழில் வல்லுனர்கள் அனைவரும் வயது கட்டுப்பாடுகள ஏதும இன்றி பனை மரம் ஏறும் போட்டியில் கலந்து கொண்டனர்.

இலங்கை பனை அபிவிருத்திச் சபையும், வடமாகாண பனை தென்னவள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களும் இணைந்து நாடாத்திய இந்தப் போட்டியானது 17.07.2026 வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் கைதடி மேற்கு கோப்பாய் வீதியில் அமைந்த பனைமர தோப்பு ஒன்றில் நடைபெற்றது.

மிகச்சிறப்பாக நடந்த இந்தப்போட்டியை சாவகச்சேரி பிரதேச சபை விளையாட்டு உத்தியோகத்தர், யாழ்ப்பாண பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தின் தலைவர், மற்றும் பளை பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச்சங்க தலைவர் ஆகியோர் நடுவர்களாக நின்று வழிநடத்தியதோடு வெற்றியாளர்களையும் தெரிவு செய்தனர்.

பனையேறுதலில் பனைத்தொழில் வல்லுனர்களிடையே பல்வேறு உத்திகள் இருந்தாலும் பாரம்பரிய முறையான ‘தழுவி ஏறும்” முறையே போட்டியில் பயன்படுத்தப்பட்டது

இந்த நிகழ்வின் சிறப்பு நிகழ்வாக சுன்னாகம் சங்க உறுப்பினரான புதிய தலைமுறை பனைத்தொழில் வல்லுனர் தலைகீழாக பனையில் இருந்து இறங்கி சாதனை படைத்தார். அவரது தந்தையாரும் 50 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் போட்டியாளராக கலந்து கொண்டது கூடுதல் சிறப்பு.

இதற்கான பரிசில்கள், சான்றிதழ்கள் ஆவணி 7 8 9 ம் திகதிகளில் வவுனியா மாநகரசபை மைதானத்தில் நடைபெறும் தேசிய பனைவளக் கண்காட்சி இறுதிநாளில் பனை அபிவிருத்திச் சபை க்கு பொறுப்பான அமைச்சர் அவர்களால் வழங்கிக் கௌரவிக்கப்படும் எனவும் அறியபடுகின்றது.

இந் நிகழ்வு தொடர்பாக பனம் பொருள் அபிவிருத்தி சபை பணிப்பாளர் சபை உறுப்பினர் கமலாகரன் நடராசா கருத்து தெரிவிக்கையில்

ஆபத்துகள் நிறைந்த போட்டியாக இருந்தாலும் தமிழர்களின் கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை சுமந்து வரும் பனையேறுதல் என்பது ஒர் அறுவடை நிகழ்வாக மாறவேண்டும் என்பதோடு, அனைத்துத் தொழில்களையும் அனைவரும் மேற்கொள்வது போல சகலதரப்பு இளைஞர்களும் இத்தொழிலை பழக வேண்டும்.

இதன்மூலம் தமிழரின் பிரதான மூலவளமான பனையும், அதன் பயனும்,பனை வளம்சார்ந்த தொழில்துறையும் சர்வதேசத் தரத்துக்கு உயரும் என்பதில் சந்தேகமில்லை.

நாளைய சந்ததிக்கு பனைத்தொழிலை நவீன தொழில் நுட்பங்களோடும்
தேசத்தின் பொருளாதாரச்
சக்கரத்தின் அச்சாணி என்ற தகுதியோடும் விட்டுச் செல்ல வேண்டும் என்பதே பனையை நேசிக்கும் அத்துணை நல்லுள்ளங்களின் கனவுமாகும் என தெரிவித்ததோடு, .

இப் போட்டியை நடாத்த காரணமாயிருந்த
பனைஅபிவிருத்திச் சபைக்கும் , போட்டியில் கலந்து கொண்ட பனைத்தொழில் வல்லுனர்களுக்கும்
நன்றி தெரிவித்தார்.

Share this article

More News