அக்கினியுடன் சங்கமித்தார் எம்.கே. சிவாஜிலிங்கம்! திரண்ட அரசியல் தலைவர்கள்!

தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகமும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளருமான எம்.கே. சிவாஜிலிங்கத்தின் பூதவுடல் இன்று (16) பிற்பகல் அக்கினியுடன் சங்கமித்தது.

 

அன்னாரின் இறுதிக்கிரியைகள் வல்வெட்டித்துறை நெடியகாட்டிலுள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்றதைத் தொடர்ந்து, வல்வெட்டித்துறை சத்தியில் விசேடமாக அமைக்கப்பட்ட கூடாரத்தில் நினைவஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன.

 

இதன்போது, பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மதத் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருமளவானோர் கலந்துகொண்டு அன்னாருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

 

குறிப்பாக, தென்னிந்தியாவிலிருந்து வருகை தந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனும் நினைவஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்.

 

அத்துடன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் ந. ஸ்ரீகாந்தா, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அக்கட்சியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், ஐக்கிய சோசலிசக் கட்சியின் செயலாளர் சிறிதுங்க ஜயசூரிய உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

 

இதனையடுத்து, வல்வெட்டித்துறை ஊரணி இந்து மயானத்தில் அன்னாரின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

 

நீண்ட காலமாகச் சிறுநீரக செயலிழப்பு உள்ளிட்ட உடல்நலக் குறைவுகளால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த அவர், கடந்த 14ஆம் திகதி இரவு தனது இல்லத்தில் காலமானார்.

 

வடமராட்சி வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட எம்.கே. சிவாஜிலிங்கம், தமிழீழ விடுதலை இயக்கத்தின் (TELO) போராளியாகத் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கி, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் (TNA) சார்பில் 2001 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 

அதனைத் தொடர்ந்து வடக்கு மாகாண சபை உறுப்பினராகவும், கடந்த ஆண்டு முதல் வல்வெட்டித்துறை நகரசபையின் தலைவராகவும் மக்கள் சேவையாற்றி வந்தார்.

 

தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்காக ஜனநாயக வழியில் சமரசமின்றிக் குரல் கொடுத்து வந்த அவரது திடீர் மறைவு, தமிழ் தேசிய அரசியல் வட்டாரத்திலும் அவரது சொந்த ஊரான வல்வெட்டித்துறை மக்களிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share this article

More News