
அன்பிற்கினிய தமிழ் மக்களே!
தேசிய மக்கள் சக்தி என்று அழைக்கப்படும் ஜே.வி.பி அரசாங்கம் இலங்கை மக்களுக்கு பல்வேறுபட்ட உறுதிமொழிகளை தனது தேர்தல் விஞ்ஞாபனத்தின் ஊடாக முன்வைத்திருந்தது. அதில் தமிழ் மக்களை நோக்கியும், சிங்கள மக்களை ,நோக்கியும் பொதுவாகவும் பல உறுதிமொழிகள் இருந்தன. பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்குதல், படையினரால் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட காணிகள் அனைத்தையும் விடுவித்தல், மாகாண சபைத் தேர்தல்களை நடத்துதல், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக ஆக்கபூர்வமான தீர்வை எட்டுதல் போன்ற வாக்குறுதிகள் தமிழ் மக்களுக்கு அளிக்கப்பட்ட பிரத்தியேக வாக்குறுதிகள் என நாங்கள் எடுத்துக் கொள்ளலாம். இவை எல்லாவற்றிற்கும் மேலாக, இப்பொழுது இருக்கக்கூடிய நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட்டு புதிய அரசியல் யாப்பு ஒன்று உருவாக்கப்படும் என்றும், அப்புதிய யாப்பில் தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சனைக்கு தீர்வு உள்ளடக்கப்படும் என்றும் கூறப்பட்டது.
அன்பிற்கினிய தமிழ் மக்களே!
மேற்கூறிய உறுதிமொழிகளில் ஏதாவது ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டதா? தேசிய மக்கள் சக்தியானது ஒரு முற்போக்கு இடதுசாரி அரசாங்கம், அவர்கள் இந்த நாட்டில் நடைமுறையில் இருக்கக்கூடிய ஊழல் மிகுந்த நிர்வாக அமைப்பு முறைகள் மாற்றப்பட வேண்டும் (System Change) வழக்கத்தில் உள்ள System மாற்றப்பட்டு, புதிய System ஒன்று உருவாக்கப்பட வேண்டும், இதற்கு அவர்களுக்கு கால அவகாசம் வேண்டும். ஆகவே அரசாங்கத்திற்கு தேவையான கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என அரச ஆதரவு சக்திகளால் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டது. ஆகவே தமிழ் தேசிய இனப் பிரச்சனையைத் தீர்ப்பது தொடர்பாகவும் இவர்கள் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என தமிழ் மக்கள் எதிர்பார்த்தார்கள்.
ஆனால் தேசிய மக்கள் சக்தியானது ஆட்சி அதிகாரத்திற்கு வந்து 1, 1/2 வருடங்கள் கடந்து விட்ட நிலையிலும் அவர்கள் உறுதி அளித்த எந்தவொரு விடயம் தொடர்பாகவும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் இவர்களால் மேற்கொள்ளப்படவில்லை என்பது யதார்த்தப் பூர்வமான உண்மை.
நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சி அதிகாரத்திற்கு வந்து 1, 1/2 வருடங்கள் ஆகியுள்ள நிலையில் படைத்துறையினரின் வசமுள்ள, சட்டவிரோதமாக கபளீகரம் செய்யப்பட்ட காணிகளை ஏன் விடுவிக்க முடியவில்லை?
இவர்கள் எதிர்த்தரப்பில் இருந்த பொழுது பயங்கரவாத தடைச் சட்டத்தை கடுமையாக எதிர்த்தவர்கள், தாம் ஆட்சிக்கு வந்தால் இச்சட்டம் உடனடியாகவே நீக்கப்படும் என பலமுறை நாடாளுமன்றத்தில் இவர்களே கூறினார்கள். ஆட்சிக்கு வந்ததும் அரசை பாதுகாப்தற்கென பயங்கரவாத தடைச்சட்டம் என்ற பெயரில் முந்தைய சட்டத்தையும் விட பல மடங்கு ஆபத்தான சட்டத்தை நாடாளுமன்றத்தில் முன் மொழிகின்றார்கள்.
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக சர்வதேச விசாரணைப் பொறிமுறையொன்றை மறுதலிப்பது மாத்திரமல்ல, உள்நாட்டிலும் உருப்படியான விசாரணைப் பொறிமுறை எதுவும் இதுவரை உருவாக்கப்படவில்லை.மாகாண சபைத் தேர்தல்கள் கால வரையறையின்றி பின் போடப்பட்டுள்ளது. ஆட்சிக்கு வந்ததும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவோம் எனக் கூறியவர்கள் இன்று கால வரையறையின்றி மாகாண சபைத் தேர்தலைப் பின்போட்டுள்ளார்கள்.புதிய அரசியல் சாசனம் தொடர்பாக NPP அரசாங்கத்தால் அடிப்படை வேலைகளோ, விவாதங்களோ எதுவுமே ஆரம்பிக்கப்படவில்லை.மொத்தத்தில் கொடுத்த உறுதி மொழிகள் அனைத்தும் கைவிடப்பட்டு தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்பது நிதர்சனமான உண்மையாகும்.
அன்பிற்கினிய தமிழ் மக்களே!
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அநுரகுமார திசாநாயக்காவிற்கு நீங்கள் கணிசமான வாக்குகளை அள்ளி கொடுத்தீர்கள். அதே போல தமிழ் தேசியப் பரப்பில் உள்ள கட்சிகள் பெருமளவில் நிராகரிக்கப்பட்டு வடக்கு கிழக்கில் NPP கட்சிக்கு கணிசமான வாக்குகளை கொடுத்து பல நாடாளுமன்ற பிரதிநிதிகளையும் அவர்களுக்கு உருவாக்கி கொடுத்தீர்கள். அவ்வாறு செய்வதன் ஊடாக தமிழ் மக்களுக்கு ஓர் விடிவு ஏற்படும், வடக்கு-கிழக்கு புதுப் பொலிவு பெறுமென்று எதிர்பார்த்தீர்கள். ஆனால் நடந்தது என்ன? நீங்கள் ஏமாற்றப்பட்டீர்கள். முந்தைய அரசாங்கங்களை விட மிக மோசமாக நாங்கள் ஏமாற்றப்படுகின்றோம்.
அன்பிற்கினிய தமிழ் மக்களே!
ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். JVP என்பது கொள்கை ரீதியாக தமிழ் மக்களுடன் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ள அடிப்படையில் எதிரானது. தமிழ் மக்களை மொழி ரீதியாக, கலாச்சார ரீதியாக வித்தியாசமானவர்கள் என்பதை ஏற்றுக்கொள்ள அக்கட்சி தயாராகவில்லை. தமிழ் மக்கள் என்பவர்கள் ஒரு சிறுபான்மைச் சமூகம் என்ற வட்டத்திற்குள் உள்ளடக்கி சில சலுகைகளை வழங்கினால் போதுமென்றே அவர்கள் சிந்திக்கின்றார்கள். தமிழ் மக்களிற்கு ஆட்சி அதிகாரக் கட்டமைப்பு ஒன்று தேவையில்லை, அவர்கள் எப்பொழுதும் சிங்களப் பெரும்பான்மை ஆட்சிக்கு கட்டுப்பட்டவர்களாக அவர்களது நிழலில் வாழ்பவர்களாக இருக்க வேண்டும் என்பதே அவர்களது எதிர்பார்பாக இருக்கின்றது.
இந்திய இலங்கை ஒப்பந்தத்தினால் உருவாக்கப்பட்ட வடக்கு-கிழக்கு இணைப்பை 16 வருடங்களின் பின்பு நீதிமன்றம் சென்று அதனை இல்லாமல் செய்ததும் இவர்கள்தான்.யுத்தக் காலத்தில் இராணுவத்தினருக்கு ஆட்பற்றாக்குறை ஏற்பட்ட போது, கிராமம் கிராமமாகச் சென்று ஆயிரக்கணக்கில் இராணுவத்திற்கு ஆள்திரட்டியதும் இவர்கள்தான். இவ்வாறானவர்கள் தமிழ் மக்களின் இனப் பிரச்சனைக்கான தீர்வை காண்பார்கள் என எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது தங்களுக்கு ஆதரவு கேட்டு இப்போது அமைச்சர்களாக இருக்கும் இருவர் எனது வீட்டிற்கு வந்தார்கள். வடக்கு தமிழ் மக்களும் கிழக்கு தமிழ் மக்களும் ஒன்றாக இருக்க விரும்புகின்றார்கள். அவர்கள் ஒன்றாக இருப்பதை நீங்கள் ஏன் எதிர்க்கின்றீர்கள்? என நான் கேட்டேன் . 16 வருடங்கள் ஒன்றாக இருந்த இணைந்த வடக்கு கிழக்கு நிர்வாகத்தை, அரசியல் அலகை ஏன் பிரித்தீர்கள் எனக் கேட்டதற்கு அவர்களிடம் எந்தப் பதிலும் இருக்கவில்லை.
இவ்வாறானவர்களை நம்பி நாம் ஏமாற்றபடலமா என்பதை தமிழ் மக்களாகிய நீங்களே உணர வேண்டும். அடுத்ததாக
இரண்டு முக்கியமான விடயங்களை பற்றி நாம் பார்க்கலாம் முதலாவதாக மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படுமென்று கூறுகின்றார்கள். ஆனால் அதனை நடத்தாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றார்கள். புதிய விகிதாசார பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் தேர்தலை நடாத்துவதாயின் அதனை உடனடியாகவே நடத்த முடியும் ஆனால் இப்பொழுது நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை நியமிக்கபட்டு எந்த முறைமையில் தேர்தல் நடத்துவதென கேட்கப்பட்டுள்ளார்கள் . உதாரணத்திற்கு ஓர் கலப்பு முறையான தேர்தலில் 50% விகிதாசாரம், 50% தொகுதி அடிப்படை என அவர்கள் ஒரு முடிவிற்கு வந்தால் இலங்கை முழுவதற்குமான மாகாண சபைகளுக்கான தொகுதிகளை உருவாக்க எல்லை நிர்ணய குழு ஒன்று அமைக்கப்படும். அது தனது வேலையை முடிக்க 2-3 ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும். எனவே அண்மைக் காலத்தில் மாகாண சபைத் தேர்தல் என்பது கனவாகவே உள்ளது.
அடுத்ததாக புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் தொடர்பாகப் பார்ப்போமானால், அதற்கான எந்த ஏற்பாடுகளும் இதுவரை நடந்ததாகத் தெரியவில்லை. குறிப்பாகச் சொல்வதாக இருந்தால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்க அவர்கள் தயாராகவில்லை. ஜனாதிபதி முறைமையின் ஊடாக தாம் விரும்பிய அனைத்தையும் செய்யலாம் என்பதை 1 1/2 வருட அனுபவம் அவர்களுக்குக் கற்றுக் கொடுத்திருக்கும். எனவே புதிதாக ஆட்சி அதிகாரத்திற்கு வந்தவர்கள் ஆட்சி அதிகாரத்தைப் பாவித்து எவ்வாறு பதவியில் நீடிப்பது என்பதிலேயே குறியாக இருப்பார்கள். எனவே அவசரப்பட்டு புதிய அரசியல் யாப்பைக் கொண்டு வந்து தமது இருப்பை இல்லாமல் செய்யமாட்டார்கள்.
எனவே NPP ஆனது மாகாண சபைத் தேர்தலையும் நடத்தாது, புதிய யாப்பு உருவாக்கத்திற்கும் முயற்சிக்காது என்பது பட்டவர்த்தனமாகத் தெரிகின்றது. ஆனால் தமிழ் தரப்பில் EPRLF, TELO ,PLOTE, ஜனநாயகப் போராளிகள், சமத்துவக் கட்சி ஆகியவை அங்கம் வகிக்கும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியானது மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது தொடர்பாக வடக்கு கிழக்கில் தொடர் கருத்தரங்குகளை நடத்தி வருகின்றார்கள். தமிழரசுக் கட்சி மாகாண சபைத் தேர்தலுக்கு ஆதரவாக இருந்தாலும் நாடாளுமன்றத்திலும் வெளியிலும் அதற்கான காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளகி்றதா என்றால் இல்லை என்ற சூழல் தான் தோண்றுகிறது . தமிழ் தேசிய மக்கள் முன்னணி மாகாண சபை பற்றிப் பேசவே கூச்சப்படுகின்றது.
புதிய யாப்பு வருமோ வராதோ என்ற சூழ் நிலையில் கூட தமிழ் மக்களின் கோரிக்கைகளை முன்வைக்க விரும்புபவர்கள், அரசியல் சாசனத்தில் உள்ள தன் ஆகக் குறைந்த மாகாண சபைத் தேர்தலை நடத்தும்படி கேட்கவோ, அதற்கான அதிகாரங்களை முழுமையாக நடைமுறைப்படுத்தும்படி கேட்கவோ வெட்கப்படுகின்றார்கள், அல்லது பின்நிற்கின்றார்கள். மாகாண சபைக்கான அதிகாரங்கள் பறிக்கப்படும் பொழுது கூட எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதற்கு எதிராக குரல் கொடுக்காமல் மௌனம் காப்பவர்களாகவே உள்ளனர்.
அன்பிற்கினிய தமிழ் மக்களே!
தமிழ் மக்களின் கைகளில் ஆட்சி அதிகாரம் கிடைத்தாலே நாம் முன்னோக்கிச் செல்ல முடியும். எமக்கு நாடாளுமன்றத்தில் ஆட்சி அதிகாரம் கிடைக்கப்போவதில்லை. இன்றைய சூழலில் மாகாண ஆட்சி அதிகாரத்தை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கு இங்கேயுள்ள கட்சிகள், புலம் பெயர் தமிழர்கள் அனைவரும் இணைந்து குரல் கொடுக்க வேண்டும். அந்தப் பணியில் ஈடுபடுபவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் .
மீண்டும் அடுத்த கடிதத்தில் சந்திக்கும்வரை
உங்கள் சுரேஷ் க. பிரேமச்சந்திரன்