
அன்பிற்கினிய தமிழ் மக்களே!
ஒரு புதிய அரசியல் யாப்பு தொடர்பாக தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஓர் உறுதிமொழி வழங்கப்பட்டது. “தாம் ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட்டு, மீண்டும் பாராளுமன்றமே அனைத்து அதிகாரங்களையும் கொண்ட ஆட்சி பீடமாக மாற்றி அமைக்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டது.
தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்து 18 மாதங்கள் கடந்த பின்னரும், புதிய யாப்பு தொடர்பாக அரசு தரப்பிலிருந்து எந்தவிதமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை. பிரதமர் அவர்கள் பாராளுமன்றத்தில் இது தொடர்பாக ஓரிரு முறை கருத்து வெளியிட்டதைத் தவிர, அரசு இதில் எத்தகைய அக்கறை கொள்வதாகவும் தெரியவில்லை. சிங்கள அரசியல் பரப்பிலோ அல்லது சிங்கள மக்கள் மத்தியிலோ இது ஒரு பேசுபொருளாகவும் இல்லை.
ஆனால் தமிழ் மக்கள் மத்தியில், இவை தொடர்பான பல்வேறு கருத்துப் பரிமாற்றங்கள், புதிய யாப்பு எவ்வாறு அமைய வேண்டும் என்ற கோரிக்கைகள், தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு இதில் இடம்பெற வேண்டும் என்ற வலியுறுத்தல்கள், அதற்கான தீர்வுகளை உருவாக்கும் வல்லுநர் குழுக்கள் என விவாதங்கள் விரிவடைந்து செல்கின்றன.
தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் என்பதும், அது ஓர் சமஷ்டி அரசியலமைப்பு முறையிலேயே சாத்தியம் என்பதும் தமிழ் மக்களின் நீண்டகாலக் கோரிக்கையாகும். இதற்காகவே “தமிழரசுக் கட்சி” என்ற பெயரில் தந்தை செல்வநாயகம் தலைமையில் சமஷ்டிக் கட்சி 1950களில் ஆரம்பிக்கப்பட்டது.
அடிப்படையில் தமிழ் மக்களின் மொழி பாதுகாக்கப்பட வேண்டும், அவர்களது நிலம் பாதுகாக்கப்பட வேண்டும், அவர்களது கலை, கலாசாரம், பண்பாடு பாதுகாக்கப்பட வேண்டும், தமிழர்கள் என்ற தனித்துவம் காப்பாற்றப்பட வேண்டும். அது “சமஷ்டி” என்று சொல்லக்கூடிய இணைப்பாட்சி முறையிலேயே சாத்தியமானது என்பது தமிழர் தரப்பின் நம்பிக்கையாகும்.
இலங்கையில் இணைப்பாட்சி (சமஷ்டி) தேவையில்லை, ஒற்றையாட்சியே போதுமானது, தமிழ் மக்களுடன் ஆட்சி அதிகாரங்களை பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை, முழு நாடும் சிங்கள மக்களுக்குச் சொந்தமானது, தமிழ் மக்கள் தமது பாரம்பரிய பூமியைப் பற்றி பேசுவதோ, தாம் ஓர் தேசிய இனம் என்று உரிமை கோருவதோ, தமக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்று கூறுவதோ அர்த்தமற்றதும் வேண்டத்தகாததுமாகும் என்று சிங்களத் தரப்பால் நிராகரிக்கப்படுகின்றது.
ஒரே நாட்டில் வாழும் இரண்டு இனக் குழுமங்கள், தமது நாட்டின் அரசியல் யாப்பு எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பாக எதிரும் புதிருமான இரு கருத்துக்களைக் கொண்டுள்ளன.
ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகள், மதங்கள், இனங்கள் உள்ள நாட்டில் சமஷ்டி அரசியலமைப்பு முறை அமையுமானால், தமது பிரதேசத்தின் அபிவிருத்தி, தமது மொழி, கலை, கலாசாரம், பண்பாடுகளின் வளர்ச்சி போன்றவற்றை தாமே தீர்மானித்துக் கொள்ள முடியும். அவ்வாறான நிலை இனங்களுக்கிடையில் புரிந்துணர்வையும், ஐக்கியத்தையும் உருவாக்கும். அமைதியான சூழல் உருவாகும். இது ஒட்டுமொத்த நாட்டின் அபிவிருத்திக்கும் அடிப்படையாக அமையும்.
உலகின் பல நாடுகளில் ஏதோ ஓர் வடிவத்தில் சமஷ்டி அரசு அமைப்பு நடைமுறையில் உள்ளது. அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, இந்தியா போன்ற பெரிய நாடுகளும், சுவிட்சர்லாந்து போன்ற சிறிய நாடுகளும் சமஷ்டி அரசியலமைப்பைக் கொண்ட நாடுகளாக உள்ளன.
ஆனால் இலங்கையில் “சமஷ்டி” என்றால் “தனி நாடு” என்ற தவறான கற்பிதத்தை சிங்கள அரசியல்வாதிகள் சிங்கள மக்கள் மத்தியில் விதைத்துள்ளனர். இது தவறென்பதை எடுத்துரைக்க சிங்களத் தரப்பில் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை.
மகாவம்சமும் சிங்கள பௌத்த நூல்களும் தமிழர்களை விரோதிகளாகவே சித்தரித்துள்ளன. அநாகரிக தர்மபால என்ற பௌத்த பிக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்பு தனது உரையில் தமிழர்களைப் பற்றிய இனவாதக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இவ்வாறான தவறான இனவாதக் கருத்துக்கள் நூற்றாண்டு காலமாக சிங்கள மக்கள் மத்தியில் விதைக்கப்பட்டு வருகின்றன.
இவற்றை மாற்ற வேண்டுமாயின் அடிப்படையில் அரசு சிந்தனையில் மாற்றம் வேண்டும். தமிழர், முஸ்லிம்கள் அனைவரும் இந்த மண்ணின் மைந்தர்கள் என்ற எண்ணம் உருவாக வேண்டும். அவர்களது மதம், மொழி, கலாசாரம், பண்பாடு ஆகியவை மாறுபட்டவை என்பதை சிங்களத் தரப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அவர்கள் தனித்துவமானவர்கள்; அவர்களது அடையாளங்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இது பல்லின, பலமொழி, பலமத நாடு என்பதை அங்கீகரிக்க வேண்டும். இவை அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டால், சமஷ்டி என்பதும் ஏற்றுக்கொள்ளப்படலாம்.
இவற்றை முன்னெடுத்துச் செல்வதற்கான வியூகங்களை வகுப்பது தமிழ் கட்சிகளின் கடமையாகும்.
அன்பிற்கினிய தமிழ் மக்களே!
தமிழர் தரப்பானது தமிழரசுக் கட்சி, TULF, TELO, PLOTE, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் பல குழுக்களாகப் பிரிந்து இருந்தாலும், தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வாக சமஷ்டி அரசியலமைப்பே இருக்க வேண்டும் என்பதில் ஒருமித்த கருத்தைக் கொண்டுள்ளது.
தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வாக ஒவ்வொரு ஜனாதிபதியும் ஒவ்வொரு தீர்வுத் திட்டத்தை முன்மொழிந்துள்ளனர்.
ஜே.ஆர். ஜெயவர்த்தன அவர்கள் இந்திய அரசுடன் இணைந்து மாகாண சபை முறையை உருவாக்கினார். அதுவே இன்று இலங்கை அரசியல் சாசனத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்வுத் திட்டமாக உள்ளது.
இது போதாது என்ற தமிழர் தரப்பின் வற்புறுத்தலால், ஜனாதிபதி பிரேமதாசா அவர்கள் மங்கள முனசிங்க தலைமையில் பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை அமைத்தார். அவர்கள் ஓர் தீர்வுத் திட்டத்தை தயாரித்தனர். ஆனால் அது பிரேமதாசாவால் கிடப்பில் போடப்பட்டது.
பின்னர் சந்திரிகா தலைமையில் ஓர் தீர்வுத் திட்டம் தயாரிக்கப்பட்டது. அது பாராளுமன்றம் வரை வந்தபோதிலும், ரணில் விக்கிரமசிங்க அவர்களால் எதிர்க்கப்பட்டு கைவிடப்பட்டது.
பின்னர் மகிந்த ராஜபக்ச அவர்களால் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையில் “All Party Representative Committee (APRC)” அமைக்கப்பட்டது. அவர்கள் ஓர் தீர்வுத் திட்டத்தை முன்வைத்தனர். ஆனால் அதுவும் மகிந்த ராஜபக்ச அரசால் கைவிடப்பட்டது.
மைத்திரி – ரணில் நல்லாட்சி காலத்தில் முன்வைக்கப்பட்ட தீர்வுத் திட்டமும் பின்னர் கைவிடப்பட்டது.
இவை தவிர, விடுதலைப்புலிகள் காலத்தில் முன்வைக்கப்பட்ட ISGA (Interim Self Governing Authority), P-TOMS போன்ற திட்டங்களும், 2016 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்டமும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் முன்வைத்த திட்டங்களும் இடம்பெற்றன.
இவ்வாறு பல தீர்வுத் திட்டங்கள் முன்மொழியப்பட்டாலும், காலத்தை விரயம் செய்ய அரசுகள் மேற்கொண்ட தந்திர முயற்சிகளாகவே அவை இருந்தன. எந்த அரசும் இப்பிரச்சினையைத் தீர்ப்பதில் உண்மையான அக்கறை கொண்டதாகத் தெரியவில்லை.
இந்த நிலையில் தமிழ் அரசியல் கட்சிகளும், தமிழ் சட்டத்தரணிகள் பேரவையும் இணைந்து, தமிழர்களின் அரசியல் உரிமைகளை பூர்த்தி செய்யக்கூடிய ஓர் தீர்வுத் திட்டத்தை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அதில் முக்கியமாக:
இலங்கையின் அரசியல் யாப்பு ஓர் சமஷ்டி அரசியலமைப்பாக அமைய வேண்டும்.
வடக்கு – கிழக்கு தமிழ் பேசும் மக்களின் மரபுவழித் தாயகம் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
மாநிலங்களின் அதிகாரங்களும் மத்திய அரசின் அதிகாரங்களும் தெளிவாக வரையறுக்கப்பட வேண்டும்.
தேசிய பாதுகாப்பு, நாணயம் மற்றும் வெளியுறவுக் கொள்கை போன்றவற்றைத் தவிர்ந்த ஏனைய அதிகாரங்கள் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட வேண்டும்.
தமிழ் மொழியும் சிங்கள மொழியும் சம அந்தஸ்துள்ள தேசிய, அரசு, நிர்வாக, சட்ட மற்றும் நீதிமன்ற மொழிகளாக இருக்க வேண்டும்.
இலங்கை ஓர் மதச்சார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என்ற அடிப்படைக் கோட்பாட்டை ஏற்றுக்கொண்டு, அதன் அடிப்படையில் தமிழ் மக்களின் தீர்வுத் திட்டம் அமைய வேண்டும் என்பதும் அனைவராலும் ஏகோபித்த முடிவாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இங்கு எழும் அடிப்படைக் கேள்வி என்னவென்றால், இவ்வாறான ஓர் தீர்வுத் திட்டத்தை தற்போதைய இடதுசாரி அரசாங்கம் என்று கூறப்படும் அனுர அரசாங்கம் ஏற்று, புதிய அரசியல் சாசனத்தில் உள்ளடக்குமா என்பதாகும்.
உள்நாட்டிலும் புலம்பெயர் தேசங்களிலும் இதற்கான வியூகங்கள் வகுக்கப்பட வேண்டும். தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இத்தீர்வுத் திட்டத்தை அரசுடன் பேசி ஏற்றுக்கொள்ள வைப்பதற்கு ஓர் மூன்றாவது மத்தியஸ்தம் மிகவும் அவசியமாகும்.
அந்த மூன்றாவது தரப்பை தமிழர்களும் சிங்களத் தரப்பும் ஏற்றுக்கொள்ள வேண்டும். பொருளாதார ரீதியாக இலங்கை அரசாங்கத்தை ஆதரிக்கும் நாடுகள் மற்றும் நிறுவனங்களின் ஊடாக, மூன்றாவது மத்தியஸ்தத்தின் தேவையை வலியுறுத்த வேண்டும்.
இந்த முயற்சிகள் எதுவும் வெற்றியடையாவிட்டால், இதுவும் ஓர் வீண் முயற்சியாக முடிந்து விடும்.
தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வைப் பற்றிப் பேசுவோர் இவ்விடயங்களை கவனத்தில் எடுக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
மீண்டும் மறுமடலில் சந்திக்கும் வரை.
அன்புடன்,
சுரேஷ் பிரேமச்சந்திரன்







