அன்பிற்கினிய தமிழ் மக்களே!
அவர்கள் குறிப்பிட்ட இரண்டு விடயங்களில் மக்களுக்குச் சிறிது நம்பிக்கை இருந்தது. ஒன்று லஞ்ச லாவண்யங்களை ஒழிப்பது மற்றும் ஊழலுக்கு முடிவு கட்டுவது, இரண்டாவது போதையற்ற ஒரு நாட்டை உருவாக்குவது. இவை தொடர்பாகப் பல்வேறுபட்ட நடவடிக்கைகள் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டது. முன்னாள் அமைச்சர்கள் கைது செய்யப்பட்டார்கள், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டார், மஹிந்த ராஜபக்ச, அவரது மனைவி, பிள்ளைகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். பல்வேறு நிலையில் இருந்த அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். வெளித்தோற்றத்திற்கு இவை அனைத்தும் இவ்வரு அரசு ஊழலுக்கு எதிரான காத்திரமான நடவடிக்கைகள் மேற்கொள்வதாக மக்களை நம்ப வைத்தது.
இதில் மிகப் பெரும்பான்மையினர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் யாரிடமிருந்தும், ஊழலில் பெற்றுக் கொண்ட நிதிகள், அல்லது சொத்து பத்துக்கள் இதுவரை அறவிடப்பட்டதாக இல்லை. முழு அமைப்பு முறையையும் மாற்றப் போகின்றோம் (System Change) என்று கூறியவர்களால் எந்த மாற்றமும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. மாறாக மாற்றத்தைக் கொண்டு வருவோம் என்ற அரசின் மீதும் அமைச்சர்கள் மற்றும் ஜனாதிபதி மீதும், பல்வேறுபட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் தொடுக்கப்பட்டுள்ளன.
NPP அரசாங்கம் ஆட்சிக்கு வந்து சில மாதங்களில் 300க்கும் மேற்பட்ட கொள்கலன்கள் (Containers) எந்தவித ஆய்வுக்கும் உட்படுத்தாமல் விடுவிக்கப்பட்டது. அக்கொள்கலன்களுக்குள் என்ன இருந்தது, யாருக்கு வந்தது, ஏன் இவை ஆய்விற்கு உட்படுத்தாமல் விடுவிக்கப்பட்டன என்ற விபரங்கள் யாருக்கும் தெரியாது. நாடாளுமன்றத்திலும், வெளியிலும், இது தொடர்பாக எதிர்க்கட்சியாலும், பொது மக்களாலும் கேள்விகள் எழுப்பப்பட்ட போதும், அரசு எதற்கும் பதில் சொல்ல முன்வரவில்லை.
இது தொடர்பாக விசாரிக்க நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்று நியமிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் இதுவரை அவ்வாறான விசாரணை அறிக்கைகள் எதுவும் சமர்ப்பிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. ஒன்று இரண்டல்ல 300 க்கும் மேற்பட்ட கொள்கலன்கள் தொடர்பாக அரசாங்கம் உண்மைத் தன்மைகளை வெளியிடத் தயங்குவதாக இருந்தால், ஏதோ தவறு நடந்திருக்கின்றது என்றுதான் அர்த்தப்படுத்த வேண்டி இருக்கும்.
அதே போல நுரைச்சோலை அனல் மின்நிலையத்தை இயக்குவதற்கான நிலக்கரியை இறக்குமதி செய்வதிலும் பாரிய ஊழல் நடைபெற்றிருப்பதாகப் பேசப்படுகின்றது. மிகவும் தரம் குறைந்த நிலக்கரியை இறக்குமதி செய்ததால் அரசுக்கு பல நூறு மில்லியன் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகப் பேசப்படுகின்றது. இதனால் மின்சார உற்பத்தியும் குறைவடைந்துள்ளதாகக் கூறப்படுகின்றது. தென்னாபிரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்நிலக்கரியானது, முதலாவது கப்பல் பரிசோதிக்கும் போதே இது தரம் குறைந்தது என்பது கண்டறியப்பட்டதாகக் கூறப்படுகின்றது. அதனை உடனடியாகவே நிறுத்தி இருக்கலாம். மாறாகத் தொடர்ந்து அது தரம் குறைந்த நிலக்கரியுடன் மேலும் எட்டு கப்பல் வர அனுமதி அளிக்கப்பட்டது. தரம் குறைந்தது என்பது தெரிந்தும் தொடர்ந்து கப்பல்களை அனுமதித்ததன் பின்னணி என்ன? இதுவரை அரசாங்கம் இது தொடர்பாக நம்பத்தகுந்த விளக்கத்தை மக்களுக்கு முன்வைக்கவில்லை.
இவற்றை அவதானிக்கின்ற பொழுது இங்கும் ஏதோ பிழைகள் நடப்பதாகவே தோன்றுகின்றது. இவர்கள் சொன்ன ஊழலற்ற ஆட்சி இந்த லட்சணத்திலா தொடரப் போகின்றது?
இவை ஒரு புறமிருக்க, மத்திய வங்கி, திறைசேரி இவற்றை உள்ளடக்கியதாகப் பல்வேறு நிறுவனங்கள் அனைத்தையும் உள்ளடக்கியதாக நிதி அமைச்சு இருக்கின்றது. இந்த நிதி அமைச்சின் அமைச்சராக ஜனாதிபதி அவர்களே செயற்படுகின்றார். அண்மைக்காலத்தில், இவ்வமைச்சுக்குட்பட்ட நிறுவனங்களில் இருந்து பல்லாயிரம் கோடி ரூபாய் இவர்களது கணினி கட்டமைப்பிற்குள் புகுந்து திருடப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
முதலாவதாக இலங்கை அரசாங்கத்தால் ஆஸ்திரேலிய கடனை அடைப்பதற்காக 2.7 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அனுப்பப்பட்டதாகவும் (பின்னர் இது 3.7 மில்லியன் எனத் திருத்தப்பட்டது) அது சம்பந்தப்பட்ட ஆஸ்திரேலிய வங்கிக்கு போய்ச் சேரவில்லை என்றும் அறியவருகின்றது. 2025ம் ஆண்டு நவம்பர் மாதம் மூன்று முறையாகவும் 2026ம் ஆண்டு இரண்டு முறையாகவும் இப்பணம் அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகின்றது. நிதி அமைச்சகத்தின் கணினி கட்டமைப்பு மற்றும் மின்னஞ்சல் சேவைகளுக்குள் ஊடுருவி, இலங்கைக்கும், ஆஸ்திரேலிய அதிகாரிகளுக்குமிடையிலான மின்னஞ்சல் தொடர்புகளைக் கையாண்டு பணப்பரிமாற்ற இயக்கத்தை மாற்றி அமைத்து நிதியைத் திசைதிருப்பி உள்ளதாகக் கூறப்படுகிறது.
3 மாதத்திற்குள் 5 முறை பணம் அனுப்பப்பட்டுள்ளது (மொத்தமாக 3.7 மில்லியன் டாலர்). ஆனால் ஒவ்வொரு முறையும் பிழையான வங்கி கணக்கிற்குப் போயுள்ளது என்பதை கண்டறிய முடியாத நிர்வாகம்தான் நிதி அமைச்சில் உள்ளதா? அல்லது யாரோ சிலருக்குத் தெரிந்துதான் இது நடந்ததா? ஆஸ்திரேலியாவின் வேறு வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்ட இந்நிதியானது அங்கிருந்து அமெரிக்க வங்கி கணக்கொன்றிற்கு மாற்றப்பட்டு, அங்கிருந்து முழுப் பணமும் வங்கியிலிருந்து எடுக்கப்பட்டுவிட்டது என்பது இறுதித் தகவல். என்ன விசாரணை கமிஷன் அமைத்தாலும் இப்பணத்தை மீளப் பெற்றுக்கொள்ள எந்த வழிமுறையுமில்லை என்று கூறப்படுகின்றது.
இது ஒரு புறமிருக்க இலங்கை தபால் துறை ஊடாக அமெரிக்க தபால் துறைக்கு அனுப்பப்பட்ட 625,000 அமெரிக்க டாலர்கள் சம்பந்தப்பட்ட தரப்புக்கு சென்றடையாமல் மாயமாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதுவும் கூட இணையத்துள் ஊடுருவி இப்பணத்தை வேறொரு தரப்பு தமக்கு மாற்றிக் கொண்டதாக இப்பொழுது கூறப்படுகின்றது. இப்பணமும் திரும்பி வரப்போவது கிடையாது.
மூன்றாவதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் என்ற அரசு விமான சேவை நிறுவனமானது துபாயிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கு சேவை கொடுக்கும் நிறுவனத்திற்கு அனுப்பிய ஐக்கிய அரபு அமீரக பணமான 97,000 திராம் (Dirham) – இலங்கை மதிப்பில் 89 மில்லியன் இலங்கை ரூபாய், இதுவும் கணினிக்குள் புகுந்து திருடப்பட்டதாகவும் சம்பந்தப்பட்ட தரப்பிற்கு போய்ச் சேரவில்லை என்றும் கூறப்படுகின்றது. மேற்கண்ட மூன்று கொடுப்பனவுகளும் அண்மைக்காலத்தில் கணினிக்குள் புகுந்து திருடும் வரை அரசு நிர்வாகம் என்ன செய்து கொண்டு இருந்தது என்பதற்கு யாரிடமும் பதில் இல்லை.
இவை தவிர மக்கள் வங்கியிலிருந்து 2023 – 2026க்கு இடைப்பட்ட காலத்தில் 645 மில்லியன் இலங்கை ரூபாய் அமைப்புமுறை மாற்று விகிதப் பிழை மூலம் (Systematic Exchange rate Error) இல்லாமல் போனதாகவும், அதனை மீளப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்பதாகவும் கூறப்படுகின்றது. இவை மீளப் பெறப்படுமா இல்லையா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
அடுத்ததாக தேசிய அபிவிருத்தி வங்கியிலிருந்து 13.2 பில்லியன் ஏறத்தாழ 1,300 மில்லியன் ரூபாய் வங்கி அதிகாரிகளால் திருடப்பட்டுள்ளது. சில பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். ஆனால் இப் பெருந்தொகை நிதியானது அரசாங்கத்திற்கு மீளக் கிடைக்குமா என்பதெல்லாம் பெரும் கேள்வியாகவே இருக்கின்றது. புதிய சிஸ்டத்தை உருவாக்குவோம் என்று கூறியவர்கள், ஊழலை, நிர்வாகச் சீர்கேட்டை இல்லாதொழிப்போம் என்று கூறியவர்களால் ஊழலை ஒழிக்க முடிந்ததா? இல்லை இவர்களும் அதே ஊழலைத் தொடர்கின்றார்களா? அதுவும் ஜனாதிபதி பொறுப்பாக இருக்கக்கூடிய நிதி அமைச்சில் இவ்வளவு முறை கேடுகள் நடக்கின்ற பொழுது, ஜனாதிபதிக்கே நிர்வாகத்தை சரியான முறையில் கொண்டு நடத்தத் தெரியவில்லை என்று கூறுவதா? அல்லது எல்லோருக்கும் பங்குகள் போகின்றதா? என்ற கேள்வியும் எழுகின்றது.
அன்பிற்கினிய தமிழ் மக்களே!
அநுர அரசாங்கத்திடம் இருந்து இந்த நாட்டு மக்கள் அதிகம் எதிர்பார்த்தனர். வளமான நாட்டை உருவாக்குவோம் என்றனர். அனைத்துப் பிரச்சினைகளும் தீர்க்கப்படும் என்றனர்.
நாடு மீண்டும் வங்கித்ரோத்து நிலையை நோக்கி நகர்வதையே அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக இந்த அரசின் மேல் நம்பிக்கை வைத்து வடக்கு-கிழக்கில் இருந்து NPP சார்பாக பல நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்து அனுப்பியுள்ளீர்கள். ஆனால் அவர்களாலும் பிரயோஜனம் இல்லை, அவர்கள் அங்கம் வகிக்கும் அரசினாலும் பிரயோஜனம் இல்லை என்ற நிலையே உருவாகியுள்ளது. குறைந்தபட்சம் மாகாண சபைத் தேர்தலையாவது நடத்தி அதிகாரங்களை தமிழ் மக்களிடம் ஒப்படைக்கவும் தயாராகவில்லை.
ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜன பெரமுன போன்றவற்றுக்குப் பதிலாக ஓர் மாற்றம் தேவை என்று எதிர்பார்த்தோம். ஆனால் அவர்களது சகல நடவடிக்கைகளும் அனைத்துக் கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதையே வெளிச்சம் போட்டு காட்டுகின்றது.
இந்த பின்னணியில் நாம் அனைவரும் இணைந்து தமிழ் மக்களின் எதிர்காலத்தை திட்டமிட வேண்டும். தமிழ் மக்களும், தமிழ் கட்சிகளும் இவற்றை உணர்ந்து செயற்படுவது காலத்தின் தேவை. மறு மடலில் சந்திப்போம்.
இப்படிக்கு,
சுரேஷ்.க.பிரேமச்சந்திரன்







