
இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் (IMF ) இடையில் செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் உத்தியோகபூர்வ காலப்பகுதி அடுத்த வருடம் மார்ச் மாதத்துடன் நிறைவடைந்ததன் பின்னர் மீண்டும் ஒப்பந்தம் செய்து கொள்ளாதிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி 2027 மார்ச் மாதத்தில் இந்த ஒப்பந்தத்தின் உத்தியோகபூர்வ காலப்பகுதி நிறைவடைவதோடு அதிலிருந்து விலகுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அறியமுடிகிறது.
விலகி கொள்வதற்கான காரணங்கள்
நாணய நிதியத்துடன் ஒப்பந்தத்திற்கு கட்டுப்பட்டிருக்கும் போது அரசாங்கத்திற்குத் தேவையானவாறு மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கோ மானியங்களை வழங்குவதற்கோ அல்லது வரி வீதங்களைக் குறைப்பதற்கோ முடியாமையே இதற்கு காரணமாகக் கூறப்படுகின்றது.
2027 ஆம் ஆண்டின் நடுப்பகுதிக்குப் பின்னர் முக்கியமான தேர்தல்கள் நடத்தப்படும் காலப்பகுதி ஆரம்பமாகவுள்ளதால் தேர்தல்களை இலக்கு வைத்து மக்களுக்குப் பெருமளவில் நிவாரணங்களை வழங்குவதற்கான திட்டமொன்றில் அரசாங்கம் இருப்பதாக தெரியவந்துள்ளது.
அதன்படி மேலும் நாணய நிதியத்துடன் ஒப்பந்தத்தில் கட்டுப்பட்டிருந்தால் திறைசேரியில் ட்ரில்லியன் கணக்கில் பணம் மிஞ்சியிருந்தாலும் நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைவாக மக்களுக்கு மானியங்களை வழங்க முடியாது என்பதால் இவ்வாறு அந்த நிதியத்துடன் புதிய ஒப்பந்தத்திற்குச் செல்லாதிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.






