யதீந்திரா
கடந்த காலத்தை அதிகம் பேசியாகிவிட்டது. அடுத்தது என்ன என்று சொல்லுங்கள். இப்படி கேட்பவர்கள் பலர். அவர்கள் கேட்பதில் தவறில்லைதான். அடுத்தது என்ன என்று சொல்வதற்குத்தானே புத்திஜீவிகள் தேவை. அரைத்த மாவை அரைப்பதற்கு எதற்கு ஆய்வாளர்களும் சிந்தனையாளர்களும்? ஆனால் பிரச்சினையோ – அடுத்தது என்ன என்று கேட்டால் பதிலளிக்க வல்லவர்கள் யார்?
அடுத்தது என்ன என்னும் கேள்விக்கு பதிலை காண வேண்டும் என்றால், முதலில் நாங்கள் எங்கிருக்கின்றோம் என்பதை கண்டுகொள்ள வேண்டும் அல்லவா! இருக்கும் இடம் அறிந்தால்தானே போகுமிடம் தொடர்பில் யோசிக்க முடியும். அடுத்த கட்டத்திற்கு செல்வது எவ்வாறு என்னும் கேள்விக்கு பலரும் பதிலளிக்க முற்படுகின்றனர். கடந்த காலத்தை காய்த்தல் உவத்தலின்றி நோக்க வேண்டும் – அப்போதுதான் நமது தவறுகளை அறிந்து கொள்ள முடியும். இப்படிக் கூறுவோர் உண்டு. தமிழ் சமூகத்திற்குள்ளேயே ஏராளம் பிரச்சினைகள் உண்டு – முதலில் அதனை ஈவிரக்கமின்றி பிரேதப்பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் கூறுவோர் உண்டு. போஸ்மோட்டம் என்னும் சொல்லுடன் சிலர் ஆரம்பத்திலேயே தங்களது வித்துவத்தை காண்பித்திருந்தனர். ஆனால் ஒரு விடயத்தை புரிந்து கொள்ள வேண்டும். போஸ்மோட்டம் என்பது மரணத்திற்கான காரணங்களை கண்டறிவது – ஆனால் மரணத்திற்கான காரணங்களை கண்டாலும் கூட, ஒருவர் இறந்துவிட்டார் என்பதுதான் உண்மை. எனவே ஒரு சமூகத்தின் வீழ்ச்சியை, பிரேத பரிசோதனை செய்வதால் மட்டும், அந்தச் சமூகம் வீழ்ச்சியிலிருந்து எழுந்துவிடப் போவதில்லை. ஏனெனில், அந்த சமூகம், அழித்தவைகள் அனைத்துமே, அழிந்தவைகள்தான். இழந்தவைகள் இழந்தவைகள்தான். போன வாய்ப்புக்கள் போனவைகள்தான்.
எனவே பிரச்சினை சமூகத்தை போஸ்மோட்டம் செய்வதல்ல மாறாக புதிதாக சிந்திப்பது. புதிதாக சிந்திப்பதற்குத்தான் கடந்தகால படிப்பினைகள் தேவைப்படுகின்றன. தமிழ்ச் சூழலைப் பொறுத்தவரையில், போகிற போக்கில் கூறப்படு;ம் அறிவுரைகள்தான் அதிகம். உதாரணமாக வரலாறு வழிகாட்டும் என்போர் உண்டு? உண்மையிலேயே வரலாறு வழிகாட்டுமா? அப்படியானால் இவ்வளவு காலமும் அந்த வரலாறு ஏன் உங்களுக்கு வழிகாட்டவில்லை? ஏன் தொடர்ந்தும் அரசியலில் தோற்றுக் கொண்டே இருக்கின்றீர்கள்?
ஆனால் உண்மை என்ன? வரலாறு என்பது ஒரு சடம். வரலாறு எவருக்கும் வழிகாட்டுவதில்லை. ஆனால் மனிதன் விரும்பினால்தான் வரலாற்றிலிருந்து அவன் பாடங்களை படிக்க முடியும். உதாரணமாக, உங்களிடம் ஒரு வரலாற்று நூல் இருக்கின்றது – ஆனால், அதனை நீங்கள் உங்களுடைய அலமாரியில் பாதுகாப்பாக வைத்திருக்கின்றீர்கள் – ஒரு நாள் கூட அதனை நீங்கள் வாசிக்க முற்பட்டதில்லை – அப்படியானால் அந்த வரலாறு உங்களுக்கு எப்படி வழிகாட்டும்? எனவேதான் நான் கூறுகின்றேன், வரலாறு தானாக எவருக்கும் வழிகாட்டுவதில்லை. மனிதனால்தான் வரலாறு ஆக்கப்படுகின்றது – பின்னர் மனிதனால்தான் அது படிக்கப்படுகின்றது. எனவே வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்ள விரும்பினால் மட்டும்தான் வரலாறு வழிகாட்டி. ஏனெனில் வரலாறு மனிதனை உருவாக்குவதில்லை மனிதனே வரலாற்றை படைக்கின்றான். இதனை, பிரெஞ்சு அறிஞர் வால்டேயரின் வார்த்தையில் கூறுவதனால், வரலாறு அதனளவில் மீண்டும் நிகழ்வதில்லை மனிதர்கள்தான் அதனை மீண்டும் நிகழ்த்துகின்றார்கள். மனிதர்கள் மீண்டும் நிகழ்த்தும் வரலாற்றிலிருந்து, அவர்களே கற்றுக்கொள்ள வேண்டியிருக்கின்றது. அப்படிக் கற்றுக் கொண்டு தவறுகளை திருத்தித், திருத்தி, முன்னேறுவது ஒன்றுதான் மனிதனுக்கு முன்னாலுள்ள பணி.
இந்த அடிப்படையில், ஈழத் தமிழர்களின் இன்றைய அரசியல் நிலைமை என்பது ஈழத் தமிர்களின் கூட்டுச் செயற்பாடுகளின், கூட்டு விளைவாகும். இதில் அனைவருக்குமே பொறுப்புண்டு. சிலருக்கு அதிகமான காலத்திற்கான பொறுப்பும், சிலருக்கு குறிப்பிட்ட காலப் பொறுப்பு என்று வேண்டுமனால் வகைப்படுத்திக் கொள்ளலாம். விடுதலைப் புலிகள் அமைப்பு தன்னால் தனித்து அனைத்தையும் அடைய முடியும் என்று கூறி, மற்றையவர்கள் அனைவரையும் ஓரங்கட்டியதால், அவர்கள் மீது அதிக குற்றம் சுமத்தப்படுவது இயல்பானதுதான் ஆனால் அதற்காக மற்றவர்களுக்கு எந்தவொரு பொறுப்பும் இல்லை என்பதாகிவிடாது. அன்றைய சூழலில் ஒவ்வொன்றையும் திட்டமிட்டவர்கள் அனைவரும், தாங்கள் சாதிக்கப் போவதாகவும், தாங்கள் செய்வது சரியென்றும் நம்பியே செய்தனர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்தவாறு எதுவும் நடக்கவில்லை. ஏன் நடக்கவில்லை என்பதுதான் படிப்பினை. அதிலிருந்து கற்றுக் கொள்வதுதான் வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்வது.
இந்த உலகில் நீங்கள் எந்தளவு உண்மையாக இருக்கின்றீர்கள் – எந்தளவு உறுதியாக இருக்கின்றீர்கள் – எந்தளவு அர்பணிக்கின்றீர்கள் – எந்தளவு தியாகம் செய்கின்றீர்கள் – இவற்றால் எல்லாம் ஒரு இயக்கம் வெற்றியை பெற்றுவிட முடியாது. ஏனெனில் தியாகங்கள் என்பதும், உண்மை என்பதும் எங்களுக்கு மட்டும்தான். எங்களுடைய தியாகத்தை மற்றவர்கள் தியாகம் என்று புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கு எந்த அவசியமும் இல்லை. எங்களுடைய உண்மையை, மற்றவர்கள், உண்மையென்று நம்ப வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் அவரவர் நீதிமன்றத்தில் ஒவ்வொன்றுக்கும் வேறு வேறு தீர்ப்புக்கள் உண்டு. ஆனால் எல்லோருக்கும் ஒரு விடயம் உண்டு. அதுதான் அவரவருக்கான நலன். அந்த நலன்களை நிறுத்துப் பார்த்துத்தான் அவர்கள் எங்களை எடை போடுவார்கள். இந்த இடத்தை சரியாக புரிந்து கொண்டிருந்தால் ஈழத் தமிழினம் இத்தனை இழப்புக்களை கண்டிருக்க வேண்டி ஏற்பட்டிருக்காது. சில எண்ணிக்கையானவர்களின் மரணத்துடனேயே, இந்த யுத்தத்தை முடித்திருந்திருக்கலாம்.
எப்போதும் ஒரு கேள்வி குறுக்கிடுவதுண்டு. இன்று பலரும் சுயவிமர்சனம் தேவை என்று கூறும் போதெல்லாம் அவர்கள் தங்களுக்குள் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி இருக்கிறதல்லவா! (இது விடுதலைப் புலிகளை ஆதரித்து செய்யப்பட்டவர்களுக்குத்தான் அதிகம் பொருத்தமானது) எந்த அடிப்படையில், எந்தத் துனிவில் இந்தப் பிராந்தியத்தில் ஒரு தனிநாட்டை அடைய முடியுமென்று நம்பீனீர்கள்? அந்த நம்பிக்கை தொடர்பில் நீங்கள் ஒரு முறை கூட சந்தேகப்படவில்லையா? விடுதலைப் புலிகள் வன்னியை மையப்படுத்தி ஒரு நடைமுறை அரசாங்கத்தை இயக்கிக் கொண்டிருந்த போது, புத்திஜீவிகள், சிந்தனையாளர்கள், இலக்கியவாதிகள் என்னும் அடையாளத்தோடு இருந்த ஏராளமானவர்கள் விடுதலைப் புலிகளின் வெற்றியை மட்டுமே கற்பனை செய்திருந்தனர். அவர்களில் பலர் அவர்களுடைய கட்டுப்பாட்டுப் பகுதியிலேயே இருந்தனர். உலகின் மிகப் பெரிய மனித வெடிகுண்டுத் தொழிற்சாலையிலிருந்து வருகிறோம் என்று பெருமிதப்பட்ட அறிவுஜீவிகளும் இருந்தனர்.
ஆனால் நிலைமை மோசமானால், கையை மீறிப் போனால், விடுதலைப் புலிகளை காப்பாற்றுவதற்கு இந்த உலகில் எந்தவொரு நாடும் இல்லை என்பதை உணர முடியாதவர்களாகத்தானே அனைவரும் இருந்திருக்கின்றனர் – ஏன்? எங்கு போனது உங்களுடைய மேதமை? மேற்குலக தாராளவாத ஜனநாயகம் வழங்கிய செழிப்பான சூலுக்குள் வாழ்ந்தும் கூட, புலம்பெயர் அறிவாளிகளால் ஏன் இவற்றை புரிந்து கொள்ள முடியாமல் போனது? ஒரு கட்சி அரசியலை முன்னெடுத்த விடுதலைப் புலிகளால், ஒரு வெற்றியை பெற முடியுமென்று எப்படி நம்ப முடிந்தது? அன்றைய சூழலில், புத்திஜீவிகளாக, சிந்தனையாளர்களா இருந்தவர்களால் எவ்வாறு விடுதலைப் புலிகளோடு முற்றிலுமாக ஒத்துப் போக முடிந்தது. எவ்வாறு அவர்களை ஊக்குவிக்க முடிந்தது?
இறுதியிலாவது தம்பி அல்லது அண்ணன் நீங்கள் போகும் பாதை தவறு, நிறுத்துங்கள் உங்கள் ஆட்டத்தை என்றல்லவா அறிவுத்தியிருக்க வேண்டும். ஆனால் அப்படி ஏதும் நடந்ததாக அறிய முடியவில்லையே. நடந்திருந்தால் வெளியில் வந்து கூறுங்கள். இ;ப்படியெல்லாம் அமைதியாக ஆதரித்துவிட்டு, பின்னர், பிரபாகரனையும் அவரது தலைமையிலான விடுதலைப் புலிகள் இயக்கத்தையும், மட்டுமே குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவது சரியானதாக இருக்க முடியுமா? என்னைப் போன்ற மாணவர்கள் அவ்வாறு தவறுதலாக சித்திருந்தால், அது ஒரு பெருந் தவறல்ல – ஏனெனில் எனக்கு விடங்கள் விளங்கயிருக்கவில்லை – ஏனெனில் அன்றைய சூழலில் பிராந்திய, சர்வதேச அரசியல் தொடர்பில் – குறிப்பாக இந்தியா தொடர்பில் போதிய புரிதல் என்னிடம் இருந்திருக்கவில்லை.
ஏன் இதனை கூறுகின்றேன் என்றால், இப்போதும் அதே தவறைத்தானே, படித்தவர்கள் என்போர், புத்திஜீவிகள் என்போர், பல்கலைக்கழக அறிவுஜீவிகள் என்போர் செய்து கொண்டிருக்கின்றனர். ஒரு கட்சியை பார்த்து மற்றைய கட்சியினர் ஒட்டுக் குழு, துரோகி என்று கூற முற்படும் போதெல்லாம், சிந்திக்கும் தரப்பு அமைதியாக இருக்க முடியுமா? – ஏனெனில் இப்படியான கதைகளால் எத்தனை அறிவுஜீவிகளை, பெறுமதியான மனிதர்களை நாங்கள் இழந்து போயிருக்கின்றோம். இவ்வாறானவர்களை கண்டிக்க வேண்டிய பொறுப்புள்ள சமூகமாக யார் இருக்க வேண்டும்? – புத்திஜீவிகள்தானே – உண்மையிலேயே நீங்கள் புத்திஜீவிகள் என்றால்.
ஆனால் அப்படியானவர்களை அரிதாகத்தானே காண முடிகின்றது. இன்றுள்ள சூழலில் எதனடிப்படையில் பயணிக்க முடியும் என்னும் கேள்வி வருகின்ற போது, புத்திஜீவிகள் என்போர் யதார்த்தத்தின் பக்கமாக அல்லவா அணிசேர வேண்டும் – ஆனால் அப்படி யாரும் வெளிப்படவில்லையே- ஏன்? அப்படியானால் நீங்கள் முன்னர் செய்த அதே தவறைத்தானே, இப்போதும் செய்து கொண்டிருக்கின்றீர்கள். முன்னர் அமைதியாக இருந்து, விடுதலைப் புலிகளை ஆதரிப்பதாகக் கூறி, அவர்களை அழிவுப் பாதையில் வீழ்த்தினீர்கள். இப்போதும் போக முடியாத ஊருக்கு வழி சொல்லி, மீதமிருக்கும் சமூகத்தை கையறுநிலைக்குத் தள்ளுகின்றீர்கள்.
அரசியல் என்பது வெறும் இலட்சிய வாதமல்ல – வெறும் இலட்சிய வாதங்கள் ஏட்டுச் சுரைக்காய் போன்றவை – அது ஒரு போதும் கறிக்கு உதவாது. அரசியல் என்பது வாய்ப்புக்களை கையாளும் ஒரு கலை. வாய்ப்புக்கள் இருக்கின்ற போது அதன் அளவிற்கு ஏற்ப அதனை கையாள வேண்டும். இல்லாவிட்டால் இருப்பதைக் கொண்டு இயங்கிக் கொண்டு, புதிய வாய்ப்புக்களுக்காக காத்திருக்க வேண்டும். அரசியல் என்பது மிகவும் துல்லியமான ஒரு நேர்கோட்டுப் பயணம் அல்ல. அது ஏற்ற இறக்கங்கள் கொண்டது. ஏற்றம் சில வேளை என்றால் இறக்கம் சில வேளை. ஏற்றம் வருகின்ற போது ஏறிச் செல்வதற்கும், இறக்கம் வருகின்ற போது, முற்றிலுமாக சறுக்கி வீழ்ந்துவிடாத வகையில், எங்களை தற்காத்துக் கொள்வதற்கும்தான், ஒரு மக்கள் கூட்டத்திற்கு, அரசியல் தலைமை என்பது தேவை. அவ்வாறான தலைமைத்துவத்தை கொடுக்கக் கூடியவர்களை தமிழர்கள் அடையாளம் கண்டால் மட்டும்தான் அடுத்தது என்ன என்னும் கேள்விக்கு பதில் கிடைக்கும். ஒரு வேளை அடையாளம் காணாது போனால், கேள்வி மட்டுமே மிஞ்சும்.







