
பயங்கரவாதத்தடைச்சட்டத்தில் கண்டறியப்பட்ட குறைபாடுகள், புதிதாக முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவிலும் அவ்வாறே மாற்றமின்றித் தொடர்வதாகவும், இது புதிய அச்சுறுத்தல்களையும் தீவிர கரிசனைகளையும் தோற்றுவித்திருப்பதாகவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் அரசாங்கத்துக்கு ஏற்கனவே அனுப்பிவைக்கப்பட்ட ஆவணத்தில் தெளிவற்ற மற்றும் பரந்துபட்ட வரைவிலக்கணத்தின் விளைவாகப் பதிவாகக்கூடிய பரந்துபட்ட குற்றங்கள், சிவில் இடைவெளி வெகுவாக மட்டுப்படுத்தப்படல், குறைந்தளவிலான பாதுகாப்பு மற்றும் பரந்துபட்ட அதிகாரங்கள், முறையான நீதித்துறை மேற்பார்வையற்ற தன்னிச்சiயான கைதுகள், விசாரணைகளின்போது நியாயமான உரிய சட்ட நடைமுறைகள் இன்மை என்பன தொடர்பில் தீவிர கரிசனை வெளியிடப்பட்டுள்ளது.
அதேவேளை பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டமானது சர்வதேச நியமங்களுக்கு ஏற்புடையவாறு அமைவதை உறுதிசெய்வதற்கும், தன்னிச்சையான தடுப்புக்காவல், சித்திரவதைகளுக்கு உட்படுத்துதல் மற்றும் வலிந்து காணாமலாக்கப்படல் என்பன உள்ளடங்கலாக பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் ஊடாக சாத்தியமாக்கப்பட்ட மனித உரிமை மீறல்களை முடிவுக்குக்கொண்டுவருவதற்கும் அரசாங்கத்தினால் புதிதாக முன்மொழியப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவை மீள்வரைவு செய்யவேண்டியது அவசியம் என்றும் உயர்ஸ்தானிகர் அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.
அதேபோன்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையினாலும் உயர்ஸ்தானிகரினாலும் பரிந்துரைக்கப்பட்டவாறு பயங்கரவாதத்தடைச்சட்டத்தை சர்வதேச மனித உரிமைகள் சட்டங்கள் மற்றும் நியமங்களுக்கு அமைவாக மாற்றியமைப்பது குறித்து இலங்கை அரசாங்கம் வெளிப்படுத்தியிருக்கும் கடப்பாட்டை வரவேற்பதாகவும் அவ்வலுவலகம் தெரிவித்துள்ளது.
பொலிஸாரிடம் அளிக்கப்பட்ட வாக்குமூலம் சாட்சியமாக ஏற்கப்படும் என்ற சரத்து நீக்கப்பட்டமை உள்ளிட்ட சில முன்னேற்றங்கள் இப்புதிய வரைவில் உள்வாங்கப்பட்டிருப்பினும், சர்வதேச நியமங்களுக்கும் அரசியலமைப்புசார் உத்தரவாதங்களுக்கும் முரணான பல விடயங்கள் இவ்வரைவில் இன்னமும் உள்ளடங்கியிருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள உயர்ஸ்தானிகர் அலுவலகம், இது பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழழ் இடம்பெற்ற மிகமோசமான மீறல்கள் மீண்டும் நிகழக்கூடிய அபாயத்தைக் கொண்டிருக்கிறது எனக் கரிசனை வெளியிட்டுள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் புதிதாக முன்மொழியப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவை சர்வதேச மனித உரிமைகள் கடப்பாடுகளுக்கும் சர்வதேச சட்டங்களுக்கும் அமைவாக மாற்றியமைப்பதையும், ஏற்கனவே அடையாளங்காணப்பட்ட குறைபாடுகள் மீண்டும் பிரதிபலிக்காமல் இருப்பதை உறுதிசெய்வதையும் இலக்காகக்கொண்டு சிவில் சமூகம் உள்ளிட்ட சகல பங்காளிகளுடனும் பரந்துபட்ட ஆலோசனை செயன்முறைகளில் ஈடுபடுமாறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.







