இலங்கைக்கு ஒரு கூட்டாட்சி அரசியலமைப்பு தேவை ! -DTNA இணைத் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன்

லஹிரு பெர்னாண்டோ

யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணியின் (DTNA) இணைத் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து தமிழ் அரசியல் கட்சிகள் தங்கள் நிலைப்பாடுகளை ஒருங்கிணைக்க மேற்கொள்ளும் புதிய முயற்சிகளின் பின்னணியில் தீவிரமாக செயற்பட்டுவரும் ஒருவர்.

அவர், ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணிக்கும் (DTNA) இலங்கைத் தமிழ் அரசு கட்சிக்கும் (ITAK) இடையிலான கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருகிறார். இதில், அரசாங்கம் முன்மொழிந்துள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிராகப் பரந்துபட்ட மக்கள் போராட்டத்தை முன்னெடுப்பது குறித்த ஆலோசனைகளும் அடங்கும். மேலும், மாகாண சபைத் தேர்தல்கள், நில உரிமைகள், அதிகாரப் பகிர்வு மற்றும் தமிழ் தேசியப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு போன்ற விவகாரங்களில் தமிழ் அரசியல் கட்சிகளிடையே கூடுதல் ஒருங்கிணைப்பும் ஓற்றுமையும் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்தப்பின்னணியில்,  தமிழ் சமூகம் எதிர்கொள்ளும் சவால்கள், அரசியல் ஒற்றுமையை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் மற்றும் அரசாங்கத்தின் கொள்கைகள் குறித்து ‘சண்டே ஒப்சர்வர்’ (Sunday Observer) இதழ் சுரேஷ் பிரேமச்சந்திரனிடம் நேர்காணல் நடாத்தியது..

நேர்காணலின் முக்கிய பகுதிகள் இதோ:

கேள்வி: அண்மையில் நீங்கள் ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணிக்கும் (DTNA) இலங்கைத் தமிழ் அரசு கட்சிக்கும் (ITAK) இடையே கூடுதல் ஒத்துழைப்பு தேவை என்று அழைப்பு விடுத்திருந்தீர்கள். பல ஆண்டுகளாக நீடித்து வரும் ஒற்றுமையின்மை மற்றும் அரசியல் பிளவுகளுக்குப் பிறகு, இப்போது என்ன அடிப்படையில்இத்தகைய ஒத்துழைப்பு சாத்தியமாகும் என நம்புகின்றீர்கள்?

பொதுவாக, அரசியல் கட்சிகளுக்கு இடையிலே கருத்து வேறுபாடுகள் அல்லது பிளவுகள் இருப்பது வழமைதான்.. கடந்த ஆறு மாதங்களாக, ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணியும் (DTNA) இலங்கைத் தமிழ் அரசு கட்சியும் (ITAK) பல்வேறு அரசியல் விவகாரங்கள் பற்றி, குறிப்பாக தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினைகள் தொடர்பில் இணைந்து செயல்படுவது குறித்து கலந்துரையாடி வருகின்றன.

உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பான சில விடயங்களில் இரு தரப்பிலும் சில சிக்கல்கள் உள்ளன. அவற்றை நீக்குவதற்காகவே நாங்கள் இணைந்து செயல்படுகிறோம். இதுவே நாங்கள் எடுத்துள்ள முதல் அடியாகும்.  தமிழ் மக்களுக்கு, தமிழ் கட்சிகள் ஒற்றுமைப் படவேண்டும், ஒருகுரலில் பேசவேண்டும் என்பது தமிழ்மக்களின் ஏகோபித்த விருப்பமாகும். எனவே, ஒற்றுமைக்கு முன்வரும் எந்தவொரு கட்சியுடனும் இணைந்து செயல்பட ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணி (DTNA) தயாராக உள்ளது.

கேள்வி: இந்த ஒத்துழைப்பு தமிழ் அரசியலில் ஒரு உண்மையான திருப்புமுனையா? இது ஒரு பொதுவான அரசியல் தளமாக உருவெடுக்குமா, அல்லது குறிப்பிட்ட சில விவகாரங்களில் மட்டும் இணைந்து செயல்படுவதற்கான ஒரு புரிதலாக மட்டுப்படுத்ப் பட்டுவிடுமா?

இது தற்போது பொதுவான பிரச்சினைகளில் தொடங்கினாலும், அனைத்து தமிழ் கட்சிகளையும் ஒன்றிணைத்து தமிழ் மக்களுக்கு நீதியையும்  சமவுரிமையும் பெற்றுக்கொடுக்கும் நீண்டகால இலக்கைக் கொண்டுள்ளது. ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணி (DTNA) ஏற்கனவே ஐந்து கட்சிகளைக் கொண்ட ஒரு கட்டமைப்பாக, பொதுவான புரிதல் மற்றும் ஒரு யாப்பின் அடிப்படையில் செயற்படுகின்றது.  இக்கூட்டணி, இலங்கைத் தமிழ் அரசு கட்சியுடனும் (ITAK) அல்லது இணைய விரும்பும் பிற கட்சிகளுடனும் இணைந்து செயல்பட  ஒரு பொது முன்னணியை உருவாக்குவது குறித்து கலந்துரையாடதயாராக உள்ளது.

கேள்வி: தமிழ் வாக்காளர்கள் தங்கள் அரசியல் பிரதிநிதிகள் மீது மீண்டும் மீண்டும் அதிருப்தியை வெளிப்படுத்தி வந்துள்ளனர். தமிழ் அரசியல் தலைமை, மக்கள் மத்தியில் தனக்கிருந்த நம்பிக்கையை இழந்துவிட்டதை உணர்கிறதா? அப்படியென்றால், அந்த நம்பிக்கையை மீண்டும் பெற என்ன மாற வேண்டும்?

மக்களிடையே ஏமாற்றம் இருக்கலாம், ஆனால் அவர்கள் தங்கள் பிரதிநிதிகள் மீதான நம்பிக்கையை முழுமையாக இழந்துவிடவில்லை.

ஏமாற்றத்திற்கு முக்கியக் காரணமான சிக்கல்களில் ஒன்று, போர்முடிந்து17 ஆண்டுகாலம் கடந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த நிலங்களுக்குத் திரும்ப முடியாமல் இருப்பதுதான். இவர்களது நிலங்கள் ஆயுதப் படைகள், மகாவலி அதிகாரசபை, வனவிலங்குத் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் உள்ளன.

அடுத்தடுத்து வந்த அனைத்து அரசாங்கங்களும் நிலங்களை விடுவிப்பதாக வாக்குறுதி அளித்தன, ஆனால்  அவ்வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை. இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் தற்போதைய அரசாங்கத்தின் கீழும், இந்த விடயத்தில் தமிழ்  வாக்காளர்கள் ஏமாற்றத்துடனேயே உள்ளனர்.

தமிழ் அரசியல் கட்சிகள் மீது தமிழ் மக்கள் கொண்டுள்ள ஏமாற்றத்திற்கு இதுவும் ஒரு காரணம்; ஏனெனில், தங்கள் பிரதிநிதிகள் இந்த விவகாரங்களை அரசாங்கத்திடம் போதுமான தீவிரத்தன்மையுடன் முன்வைக்கவில்லை என்று மக்கள் கருதுகின்றனர். ஆனால், இதைத் தமிழ் அரசியல் தலைவர்களால் மட்டுமே செய்துவிட முடியாது. நிலங்களை விடுவிப்பதற்கான அதிகாரத்தைக் கொண்ட இராணுவம் மற்றும் அரச அமைப்புகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால், அரசாங்கமே இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கேள்வி: 2009-ல் போர் முடிவுக்கு வந்த காலத்திலிருந்து இன்றுவரை, தமிழ் அரசியல் தலைவர்கள் செய்த மிகப்பெரிய தவறு எது? இதிலிருந்து அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் என்ன?

2009-ல் போர் முடிவுக்கு வந்தபின்னர்  ​தமிழ்மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சனையை  ஒரு கூட்டாட்சி முறையின் கீழ், ஐக்கிய இலங்கைக்குள் தீர்த்துக்கொள்ள முடியும் என்று தமிழ் அரசியல் தலைவர்கள் நம்பினர்.

இருப்பினும்,  சிக்கல் நீடிப்பதற்கு தமிழ் அரசியல் கட்சிகளின் தவறான அணுகுமுறையல்ல காரணம்.  மாறாக, 2009 முதல் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடந்தும், பிரச்சினைகளைத் தீர்க்க மத்திய அரசாங்கத்திற்கு விருப்பம் இல்லாததே இதற்குக் காரணம். அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் போதுமான ஒத்துழைப்பை வழங்கவில்லை; அவர்களுக்கு இனப்பிரச்சனைக்கு நியாயமான நிலையான தீர்வினைக் காணுவதில் பெரிய ஆர்வம் இருக்கவில்லை.

மாகாண சபைகள் முறையாகச் செயல்பட்டு, அரசியலமைப்பு முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால், பல சிக்கல்களைத் தீர்த்து வைத்திருக்க முடியும். எனவே, இதற்காகத் தமிழ் அரசியல் கட்சிகளை மட்டும் குறை கூற முடியாது.

மேலும், பலாலி விமான நிலையம் (யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம்) மற்றும் காங்கேசன்துறை (KKS) துறைமுகம் போன்ற முக்கியமான பிராந்தியக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் மத்திய அரசு தோல்வியடைந்துள்ளது. இத்தகைய கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டிருந்தால், புலம்பெயர்ந்தோரின் முதலீடுகள் அதிகரித்திருக்கும், சுற்றுலாத்துறை வளர்ந்திருக்கும், மேலும் வடக்கில் நேரடி வர்த்தகமும் ஊக்குவிக்கப்பட்டிருக்கும். இத்தகைய உள்கட்டமைப்பு நன்கு மேம்படுத்தப்பட்டால், இறக்குமதிகள் — குறிப்பாக இந்தியாவிலிருந்து வரும் இறக்குமதிகள் — கொழும்பு வழியாக வருவதை விட மிகக் குறைந்த நேரத்தில் நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய பகுதிகளுக்குச் சென்றடைய முடியும்.

கே: பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) ரத்து செய்வதாகவும், அதற்குப் பதிலாக ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்டமூலத்தை’ (PSTA) கொண்டு வருவதாகவும் அரசாங்கம் உறுதியளித்துள்ளது. முன்மொழியப்பட்ட இந்தச் சட்டம் குறித்து உங்கள் மதிப்பீடு என்ன?

நான் சுமார் இரு தசாப்தங்களாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தேன். தற்போதைய ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவும் அப்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்; அவரும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) ஒழிக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்திருந்தார்.

அவருடைய ஜனாதிபதித் தேர்தல்  அறிக்கையிலும் இதேதான் கூறப்பட்டிருந்தது. ஆனால் இப்போது ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், அரசாங்கம் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக PSTA-வை அறிமுகப்படுத்துகிறது.

PTA-வால் நமது ஆயிரக்கணக்கான இளைஞர்கள் எவ்வளவு மோசமாகப் பாதிக்கப்பட்டார்கள் என்பது தமிழ் அரசியல் கட்சிகளாகிய எங்களுக்கு நன்றாகத் தெரியும். அவர்கள் எந்த விசாரணையுமின்றி நீண்டகாலமாக சிறைகளில் அடைக்கப்பட்டனர். பாதுகாப்பு தொடர்பான கரிசனைகளைக் கையாள தற்போதுள்ள சட்டங்களே போதுமானவை என்று நாங்கள் நம்புகிறோம். எனவே, முன்மொழியப்பட்ட சட்டத்தை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். போர் இல்லாத இன்றய சூழலில், நமது சொந்த  மக்களுக்குப் பயப்படத் தேவையில்லாத எந்த அரசுக்கும், PTA போன்ற சட்டம் தேவையற்றது. ஆகவே  மாற்று ஏற்பாடு எதுவும்  இன்றி முழுமையாகத் திரும்பப் பெறப்பட வேண்டும்.

கேள்வி: அதிகாரப் பகிர்வு விவகாரம், வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையே ஒரு முட்டுக்கட்டையை எட்டியுள்ளது போல் தெரிகிறது, மேலும் அரசியல் தீர்வுக்கான செயற்பாட்டிலும் முன்னேற்றம் குறைவாகவே உள்ளது. தமிழ் அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் ஒரு விரிவான அரசியலமைப்பு ஏற்பாட்டைத் தொடர, 13-வது திருத்தத்திற்கு அப்பால் செல்ல தமிழ் அரசியல் தலைமை தயாராக உள்ளதா?

கடந்தகாலத் தலைவர்கள் அவ்வாறு செய்வதாக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியபோதிலும், தமிழ் பேசும் மக்களின் முழுமையான அபிலாஷைகளை அரசாங்கம் பூர்த்தி செய்தால், 13-வது திருத்தத்தைத் தாண்டிச் செல்வதை தமிழ் தலைமை ஆதரிக்கும்.

ஆனால் 10 ஆண்டுகளாகத் தாமதமாகி வரும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதே இன்றய உடனடி முன்னுரிமையாகும். இந்தத் தாமதம் மக்களின் உரிமைகளை மறுக்கும் ஒரு செயலாகும். தற்போதைய அரசாங்கமும் ஆட்சிக்கு வந்த ஓராண்டுக்குள் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதாக உறுதியளித்தது. ஆனால், இப்போது இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன, தேர்தல் நடத்தப்படவில்லை.

மாகாண சபைத் தேர்தல் தொடர்பான தேர்தல் முறையை மாற்றுவது குறித்து விவாதங்கள் நடந்தபோதிலும், அதை இப்போது செய்ய வேண்டிய அவசியமில்லை. மேலும் தாமதமின்றி, தற்போதுள்ள முறையிலேயே தேர்தலை நடத்த வேண்டும். தேர்தல் முறையில் ஏதேனும் மாற்றம் தேவைப்பட்டால், அதை பின்னர் முறையாகச் செய்துகொள்ளலாம்.

நாடாளுமன்ற, மாகாண மற்றும் உள்ளாட்சி மட்டங்களில் வெவ்வேறு தேர்தல் முறைகளைஉருவாக்குவதற்குப் பதிலாக, சீராகவும் நிலையானதாகவும் இருக்கும் ஒரே முறைமை வேண்டும். நாம் வினைத்திறன் மிக்க  மாகாண சபைகளையோ அல்லது உள்ளாட்சி அமைப்புகளையோ நடத்த வேண்டுமானால், ஒரே முறையான நிர்வாக அமைப்பு நடைமுறையில் இருக்க வேண்டும்.

கே: செம்மணி மற்றும் குருக்கள்மடம் அகழ்வாராய்ச்சிகள் போன்ற நிகழ்வுகள் மூலம் நீதிக்கான தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்த அரசாங்கம் ஆர்வமாக இருப்பதாகத் தெரிகிறது. போர்க்கால துஷ்பிரயோகங்களின் விளைவுகளைச் சரிசெய்ய அரசாங்கம் உண்மையாகவே தயாராக உள்ளது என்ற நம்பிக்கையை இந்த நிகழ்வுகள் உங்களுக்குத் தருகின்றனவா? பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் பொறுப்புக்கூறலையும் நீதியையும் உறுதி செய்ய சர்வதேச வழிமுறைகள் அவசியம் என்று நீங்கள் இன்னும் நம்புகிறீர்களா?

முன்னைய சில அரசாங்கங்களைப் போலவே, இந்த அரசாங்கமும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் (UNHRC) இந்த விவகாரத்தில் ஒரு சர்வதேச தாம் வழிமுறையை ஆதரிக்கவில்லை என்று கூறியுள்ளது.

செம்மணி மற்றும் மன்னார் போன்ற இடங்களில் நடாத்தப்பட்ட  கடந்தகால அகழ்வாராய்ச்சிகளில் நூற்றுக்கணக்கான எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டபோதிலும், அவை உறுதியான நடவடிக்கைக்கோ நீதிக்கோ வழிவகுக்கவில்லை. முறையான விசாரணைகளை நடத்துவதற்குத் தேவையான டி.என்.ஏ பரிசோதனை போன்ற தொழில்நுட்பமும் நிதித் திறனும் இலங்கையிடம் இல்லை. எனவே, நம்பகமான பொறுப்புக்கூறலுக்கு சர்வதேச வழிமுறைகளும் ஐ.நா.வின் உதவியும் அவசியமாகின்றன. அது அரசாங்கத்தின் மீது நம்பிக்கையை உருவாக்கும். அகழ்வாராய்ச்சி செய்வதைத் தவிர, இந்த கூட்டுப் புதைகுழிகள் தொடர்பாக அரசாங்கம் இன்றுவரை வேறு எதையும் செய்யவில்லை. வெறும் அறிக்கைகளை வெளியிடுவது மட்டும் போதாது.

உள்நாட்டு விசாரணைகள் நம்பகத்தன்மை அற்றவையாக உள்ளன. ஏனெனில், அரசாங்கம் உண்மையான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தத் தொடர்ந்தும் தவறி வருகிறது. இதனால், உள்நாட்டு செயல்முறைகள் மீது முற்றிலும் நம்பிக்கை இல்லாததால், பொதுமக்கள் சர்வதேச விசாரணைகளைக் கோருகின்றனர்.

கே: அதிகாரப் பகிர்வு, காணாமல் போனவர்கள் மற்றும் நில உரிமைகள் தொடர்பான வழமையான அரசியல் கோரிக்கைகளுக்கு அப்பால், வடக்கில் அவசர அரசியல் கவனம் தேவைப்படும் புதிய பிரச்சினைகள் எவை உருவாகியுள்ளன? தமிழ் அரசியல் பிரதிநிதிகள் போதுமான அளவு கவனிக்காத, புதிதாக உருவாகும் சமூக, பொருளாதார, மக்கள்பரம்பல் அல்லது வாழ்வாதாரம் தொடர்பான கவலைகள் ஏதேனும் உள்ளதா?

நிலம், காணாமல் போன மக்கள், மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பான கோரிக்கைகளை வழமையான கோரிக்கைகளாகக் கருதக்கூடாது. மாறாக, 17 ஆண்டுகளாக அரசாங்கங்கள் அவற்றைத் தீர்க்கத் தவறியதால், தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் போருக்குப் பிந்தைய மிக முக்கியமான பிரச்சினைகளாகவே இவற்றைக் கருத வேண்டும். அதனால்தான் நாம் எப்போதும் அந்தப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசுகிறோம். அரசாங்கம் அவற்றைத் தீர்த்திருந்தால், நாம் மீண்டும் மீண்டும் அவற்றைப் பற்றி விவாதிக்க வேண்டியிருக்காது.

பொருளாதார வளர்ச்சியைப் பொறுத்தவரை, போரினால் பாதிக்கப்பட்ட வடக்கில் புதிய தொழிற்சாலைகளோ அல்லது முதலீடுகளோ நிறுவப்படவில்லை. மத்திய அரசு முதலில் அந்தப் பகுதிகளில் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். இதற்கு, மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதும் அதிகாரப் பகிர்வு செய்வதும் அவசியமாகும். அப்போதுதான் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அமைப்பு, பிராந்திய வளர்ச்சிக்கான புலம்பெயர் முதலீடுகளை எளிதாக்க முடியும்.

கேள்வி: வட மாகாணத்தில் உள்ள பல நகர சபைகளில் வசிக்கும் மக்கள், குப்பை சேகரிப்பு, சாலைப் பராமரிப்பு, வடிகால், சுகாதாரம் மற்றும் கழிவு மேலாண்மை உள்ளிட்ட அடிப்படை நகராட்சி சேவைகள் புறக்கணிக்கப்படுவதாகப் புகார் கூறுகின்றனர். அதே நேரத்தில், உள்ளூர் அரசியல் பிரதிநிதிகள் அரசியல் நினைவுக் கொண்டாட்டங்களுக்கும் அடையாளப் பிரச்சினைகளுக்கும் கணிசமான கவனம் செலுத்துவதாகத் தெரிகிறது. அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்கான தனது முதன்மைப் பொறுப்பை தமிழ் உள்ளாட்சி அரசியல் தலைமை மறந்துவிடுகிறதா?

அந்தக் குற்றச்சாட்டை நான் ஏற்கவில்லை. வட மாகாணத்தைப் பொறுத்தவரை, நிதிப் பற்றாக்குறை இருந்தபோதிலும் உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் கடமைகளைத் திறம்பட ஆற்றி வருகின்றன.

நான் இப்பகுதிகளைச் சேர்ந்த மக்களைத் தொடர்ந்து சந்தித்து வருகிறேன்; அவர்கள் உள்ளூராட்சி அமைப்புகள் குறித்து எந்தக் குறையையும் தெரிவிப்பதில்லை. இருப்பினும், மத்திய அரசாங்கமானது தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூராட்சி அமைப்புகளைத் தவிர்த்துவிட்டு, தனக்குச் சார்பான ‘பிரஜா சக்தி’ (Praja Shakthi) குழுக்களுக்கு நிதியைத் திருப்பி விடுவதன் மூலம், அந்த உள்ளூராட்சி அமைப்புகளைச் செயலிழக்கச் செய்ய முயற்சிக்கிறது. இத்தகைய ‘பிரஜா சக்தி’ திட்டங்களின் ஊடாக, நகர சபைகள் தங்கள் பணிகளைச் செய்ய முடியாதபடி அரசாங்கம் அவற்றை ஓரங்கட்டியுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூராட்சி அமைப்புகளுக்கு நேரடியாகச் சென்றடைய வேண்டிய நிதியானது, ‘பிரஜா சக்தி’ குழுக்களுக்குத் திருப்பி விடப்படுகிறது.

கேள்வி: அரசியலமைப்புச் சீர்திருத்தம், அதிகாரப் பகிர்வு மற்றும் தமிழ் மக்களின் நீண்டகாலக் குறைகளைத் தீர்ப்பதில் தற்போதைய அரசாங்கம் உண்மையான ஈடுபாட்டைக் காட்டினால், அதனுடன் ஆக்கபூர்வமாகச் செயல்படத் தமிழ் அரசியல் கட்சிகள் தயாராக உள்ளனவா? அரசியல் ஒத்துழைப்புக்கும் அரசியல் சமரசத்திற்கும் இடையிலான எல்லையை நீங்கள் எவ்வாறு வரையறுப்பீர்கள்?

தமிழ் மக்களின் அபிலாஷைகளை உண்மையாகவே கவனத்தில் கொள்ளும் எந்தவொரு அரசாங்கத்துடனும் இணைந்து பணியாற்றத் தமிழ் கட்சிகள் தயாராகவே உள்ளன. முன்னதாக நாங்கள் தனிநாட்டைக் கோரியிருந்தாலும், தற்போது ஐக்கிய இலங்கைக்குள் இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணத் தயாராக இருக்கிறோம். இலங்கை என்பது பல மதங்கள், பல மொழிகள் மற்றும் பல இனங்களைக் கொண்ட நாடாக இருப்பதால், அதற்கு ஒரு கூட்டாட்சி அரசியலமைப்பு (Federal Constitution) தேவைப்படுகிறது. ஆனால், எந்தவொரு மத்திய அரசாங்கமும் இது குறித்து விவாதிக்க முன்வரவில்லை.

தனிநாட்டைக் கோரும் நிலையிலிருந்து மாறி, ஐக்கிய இலங்கைக்குள் கூட்டாட்சி கட்டமைப்பை ஏற்றுக்கொள்வது என்பது ஒரு மிகப்பெரிய சமரசமாகும். அரசாங்கம் மாகாண சபைத் தேர்தல்களை நடத்தி, தனது நேர்மையை நிரூபிக்குமானால், ஒத்துழைப்புக்கான நம்பிக்கையை உருவாக்க முடியும்.

Share this article

More News